சிவகங்கை அருகே அரசு விடுதியில் சமைத்த உணவில்
புழு கிடந்ததை கண்டித்து மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டதால் விடுதி
வார்டன், சமையல் ஊழியர்களை இடமாறுதல் செய்ய அதிகாரி உத்தரவிட்டார்.
சிவகங்கை, பெரியகோட்டை அருகே மாங்குடி அரசு
மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கென அரசு மிக பிற்பட்டோர்
மாணவிகள் விடுதி செயல்படுகிறது. இங்கு 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 54
மாணவிகள் தங்கியுள்ளனர். சிவகங்கையை சேர்ந்த வளர்மதி வார்டனாகவும்,
ராமலட்சுமி சமையலராகவும், இரவு காவலாளியாக ரத்தினவள்ளி பணிபுரிகின்றனர்.
இந்த விடுதியில் மாணவிகளுக்கு தினமும்
வழங்கப்படும் உணவு தரமற்று இருப்பதாக மாணவிகள், விடுதி கமிட்டி
உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
ஆர்ப்பாட்டம்
நேற்று காலை மாணவிகளுக்கு இட்லி, சாம்பார்
வழங்கப்பட்டது. இதில் சிலரது உணவில் புழுக்கள் கிடந்ததாக கூறி அனைத்து
மாணவிகளும் சாப்பிடாமல், விடுதி வாசலில் உணவுடன் தரையில் அமர்ந்து
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் (பொறுப்பு)
தங்கவேல், தாசில்தார் கங்காதேவி, பெரியகோட்டை ஆர்.ஐ. பூங்குழலி ஆகியோர்
விசாரித்தனர்.
விடுதியில் தரமற்ற காய்கறி, பழைய பொருட்களை
வாங்கி சமைக்கின்றனர். வயிற்றுபோக்கு, வாந்தி ஏற்படுகிறது. வார்டன்,
சமையலர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து,
வார்டன் வளர்மதி, சமையலர் ராமலட்சுமி ஆகியோரை இடமாற்றம் செய்வதாக அதிகாரி
உறுதி அளித்தார்.
இதையடுத்து மாணவிகள் ஆர்பாட்டத்தை கைவிட்டனர். இவர்களுக்கென சிவகங்கை ஓட்டலில் இருந்து வாங்கி வந்த மதிய உணவை வழங்கினர்.
வார்டன் வளர்மதி கூறுகையில், "அரசு வழங்கும்
பொருட்களை வைத்து சமைக்கிறேன். 2010 முதல் இங்கு பணிபுரிகிறேன் என் மீது
எவ்வித குற்றச்சாட்டும் இல்லை. தூண்டுதலின் பேரில் மாணவிகள்
போராடுகின்றனர்" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...