கிராமப்புறங்களிலுள்ள அரசு துவக்கப்பள்ளிகளின்
கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து அரசுத்துறைகள்
கண்டுகொள்ளாமல் இருப்பதால் மாணவர் எண்ணிக்கை சரிந்து வரும் நிலை
தொடர்கதையாக உள்ளது.
அரசுப்பள்ளிகளில் குறிப்பாக துவக்க மற்றும்
நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிந்து வரும் நிலையை மாற்ற வேண்டும்
என அரசு பல்வேறு முறைகளை கடந்த இரண்டாண்டுகளாக பின்பற்றி வருகிறது.
இருப்பினும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதற்கான காரணத்தை அறிந்து,
அதற்கு தீர்வு காண்பதில் கல்வித்துறை மற்றும் இதர அரசுத்துறைகள் எவ்வித
முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது.
பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளில்
கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் மாணவர்களின் முக்கிய தேவைகளாக உள்ளது.
கழிப்பறை இல்லாத மற்றும் பழுதடைந்துள்ள பள்ளிகளில் புதிய கழிப்பறைகள்
கட்டுவதற்கு தமிழக அரசு சார்பில் ஒரு கழிப்பறை கட்டுவதற்கு ஒரு லட்ச ரூபாய்
ஒதுக்கப்பட்டது.
உடுமலை, பூலாங்கிணறு அரசு துவக்கப்பள்ளியில்
இதற்கான பணிகள் கடந்த கல்வியாண்டில் துவங்கப்பட்டு, தற்போது நிதி
பற்றாக்குறையால் கழிப்பறை வசதிக்கான செப்டிக் டேங்க் அமைக்கப்படாமல்
உள்ளது. முன்பிருந்த கழிப்பறை மோசமான நிலையில் இருக்கவே புதிய கழிப்பறை
கட்டப்பட்டது. இந்நிலையில் அதுவும் மாணவர்களுக்கு பயனற்று உள்ளது.
குடிநீர் தொட்டி நீண்ட காலமாக சிதிலமடைந்த
நிலையில் உள்ளதால், மாணவர்களுக்கு தூய்மையான குடிநீரை குடிப்பதற்கே
வழியில்லாமல் உள்ளது. இரவு நேரங்களில் சுற்றுப்புற குடிமகன்கள், இப்பள்ளி
வளாகத்தை மது அருந்தும் கூடாரமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளிக்கு
அருகிலுள்ள புதர் போன்ற செடிகளால், விஷ பூச்சிகள் பள்ளிக்கு வருவது
வழக்கமாகிவிட்டது.
இப்பள்ளியில் படிக்கும் பிஞ்சு குழந்தைகளுக்கு
படிக்கும் பாடங்களை தவிர அனைத்துமே பிரச்னையாகவும், ஆபத்தாகவும் உள்ள
நிலையில் பெற்றோர்கள் நாள்தோறும் மனதில் அச்ச உணர்வுடனே குழந்தைகளை
பள்ளிக்கு அனுப்புகின்றனர்.
இதற்கு பள்ளியின் சார்பில் பல ஆண்டுகளாக
ஊராட்சி, ஒன்றியம், ஒன்றியக் கல்வித்துறை உள்ளிட்ட பல நிர்வாகங்களிலும்
புகார் அளிக்கப்பட்டும் தீர்வு காண்பதற்கான சிறு நடவடிக்கைகளையும்
மேற்கொள்ளவில்லை என்பது பள்ளி நிர்வாகத்தினரை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து
வருவதற்கு, இதுபோன்ற பிரச்னைகளே முக்கிய காரணம் என்பதை அரசு உணராமல்
பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு எந்த பயனும் இல்லை என கல்வியாளர்கள்
தெரிவித்துள்ளனர். பள்ளிகளில் புதிய வசதிகளை ஏற்படுத்துவதைக் காட்டிலும்,
இருக்கும் பிரச்னைசளுக்கு தீர்வு காண்பதற்கு கல்வித்துறை முக்கியத்துவம் தர
வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
பூலாங்கிணறு அரசு துவக்கப் பள்ளி
நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர் கூறியதாவது: மாணவர்களின் பயன்பாட்டிற்காக
கழிப்பறை கட்டப்பட்டுள்ளதா அல்லது அரசின் உத்தரவிற்காக மட்டுமே
கட்டப்பட்டுள்ளதா என சந்தேகமாக உள்ளது. ஒன்றியத்தின் சார்பில் கட்டப்பட்ட
சத்துணவுக்கூடம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே கட்டடத்தில் விரிசல்
ஏற்பட்டுள்ளது.
அருகிலுள்ள புதர்களால் விஷப் பூச்சிகளின்
அபாயம், சுற்றுப்பகுதி குடிமகன்களின் கூடாரமாக பள்ளி வளாகத்தை
செயல்படுத்துவது போன்றவற்றால் பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பு மோசமான
நிலையை எய்தி வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களுக்கு பின்
பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள் மது பாட்டில்களை அப்புறப்படுத்தும் அவல
நிலையில் உள்ளனர். குழந்தைகளை மனதளவில் பாதிக்கும் இப்பிரச்னைகள் மற்றும்
அவர்களின் பாதுகாப்பு, தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பலமுறை
கல்வித்துறை, ஊராட்சி உள்ளிட்ட பல நிர்வாகங்களிடத்து புகார்
அளித்துள்ளோம்.
அவற்றை வெறும் புகாராக மட்டுமே பார்க்கின்றனரே
தவிர, படிக்கும் மாணவர்கள் மற்றும் பள்ளிகளின் எதிர்காலம் என்பதை மறந்து
எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் உள்ளனர். இப்பகுதியிலுள்ள பெரும்பாலான
பெற்றோர்கள் இக்காரணங்களால் மட்டுமே இப்பள்ளியை புறக்கணிக்கின்றனர்.
கல்வித்துறை விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால், மாணவர் எண்ணிக்கை
ஒற்றைப்படையாக மாறும் வாய்ப்பு உருவாகும். இவ்வாறு கூறினர்.
இதே போல் உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள பல்வேறு அரசுப்பள்ளிகளின் நிலையும் பரிதாப நிலையில் உள்ளது குறித்து அரசு கண்டுகொள்ளவில்லை.
இந்த புகார் அனைத்து மாவட்ட்த்திலும் உள்ள்து. ஆற்றுக்கு எப்ப்டி இருபக்கம் கரைகள் இருக்கிற்தோ அதே மாதிரி பள்ளிக்கூடங்களுக்கு இருபக்க்ம அரசு டாஸ்மார்க் சாராய் கடைகள் உள்ள்து. கல்வித்துறை இதைபற்றி கண்டுகொல்வ்தில்லை. ஒவ்வொரு மு.க்.அ மற்றும் மா.க.அ அவர்களிடம் ஏதாவது இந்த மாதிரி உள்ள ப்ள்ளிகலின் டேட்டா உள்ளதா? உடனே தயார் செய்யவும்.
ReplyDelete