மத்திய அரசுப் பணியில் உள்ள 50 லட்சம்
ஊழியர்களும், லோக்பால் சட்டத்தின்கீழ் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள்
தங்களுடைய சொத்து விவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது.
இதற்கான படிவங்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.
எஸ். உள்பட அனைத்து நிலை ஊழியர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள்
தங்கள் பெயரில், மனைவி அல்லதுகணவன், மைனர் குழந்தைகள் பெயரில் உள்ள சொத்து
விவரங்கள், முதலீட்டு விவரங்கள், கடன் கொடுத்த விவரங்கள், அவர்களுடைய
பெயரில் உள்ள கடன் உள்ளிட்ட விவரங்களை தர வேண்டும். அவர்களுடைய பெயர்களில்
உள்ள மோட்டார் வாகனங்கள், விமானங்கள், கப்பல்கள், படகுகள், தங்கம், வெள்ளி,
கரன்சிகள் உள்ளிட்ட விவரங்களை யும், அசையும், அசையா சொத்துகளின்
விவரங்களையும் தர வேண்டும் என்று படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக லோக்பால் சட்டத்தின்கீழ் புதிய விதிகளை அரசு வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் (சொத்துகள், கடன்கள் குறித்து
ஆண்டு அறிக்கை தாக்கல் செய்வது, விதிவிலக்குகள்) விதிகள், 2014ன்கீழ் இந்த
அறிக்கையை மத்திய பணியாளர்கள்மற்றும் பயிற்சி துறை கடந்த வாரம்
வெளியிட்டுள்ளது. இந்த விதிகளின்படி, அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும்
மார்ச் 31ம் தேதி வரையிலான காலத்துக்கான அறிக்கையை அந்த ஆண்டு ஜூலை 31ம்
தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதே நேரத்தில் ஊழியரின் 4 மாத அடிப்படை
சம்பளம் அல்லது ரூ.2 லட்சம், இதில் எது அதிகமோ அந்த தொகைக்கான சொத்துகளின்
விவரத்தை தாக்கல் செய்ய வேண்டாம். இந்த விதிவிலக்கை, சம்பந்தபட்ட அதிகார
அமைப்பு அளிக்கலாம். இந்த விதிகளின்படி ஏற்கனவே சொத்து விவர அறிக்கையை
தாக்கல் செய்திருந்தாலும், 2014 ஆகஸ்ட் 1ம் தேதிக்கான அறிக்கையை செப்டம்பர்
15ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...