தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளியை சேர்ந்த, 1,250 ஆசிரியர்கள், வாழ்வாதாரத்துக்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.
குழந்தை தொழிலாளர்கள் அதிகமுள்ள பகுதிகளில், தேசிய குழந்தை தொழிலாளர்
திட்டத்தில், சிறப்பு பள்ளிகள் இயங்குகின்றன. தமிழகத்தில், 17
மாவட்டங்களில், 587 சிறப்பு பள்ளிகள் உள்ளன.
வாடகை கட்டடம்:
இதில், 13 ஆயிரம் குழந்தைகள் படிக்கின்றன. 1,250 ஆசிரியர்கள், 560
சமையலர்கள் பணிபுரிகின்றனர். 75 சதவீத பள்ளிகள், வாடகை கட்டடத்தில்
இயங்குகின்றன. எஞ்சிய, 25 சதவீத பள்ளிகள், அந்தந்த பஞ்சாயத்தின்
சமுதாயக்கூடம், சத்துணவு கூடங்களில் செயல்படுகின்றன.ஆசிரியர்களுக்கு, 1,500
ரூபாய், சமையலர்களுக்கு, 800 ரூபாய் மாத சம்பளமாக வழங்கப்பட்டது. சம்பள
உயர்வு, பணி நிரந்தரம் கோரி, மாநில அளவில் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய தொழிலாளர் நலத்துறை, ஆசிரியர்களுக்கு, 4,000 ரூபாய்,
ஆயாக்களுக்கு, 2,000 ரூபாய் என, சம்பளத்தை உயர்த்தியது; இருந்தும், பல
பள்ளிகளில், சம்பளம், வாடகை தாமதமாக வழங்கப்படுகிறது.பள்ளியை மூடினால்,
வேலை போய்விடும் என்பதால், ஆசிரியர்கள், கடன் பெற்று பள்ளியை நடத்தி
வருகின்றனர். இப்பிரச்னையில், மாவட்ட திட்ட இயக்குனர்களும், கண்டு
கொள்ளாமல் செயல்படுகின்றனர்.
வேலை இல்லை:
இதுபற்றி, தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர்
சங்க மாநில துணைத்தலைவர் சிவசெல்வம் கூறியதாவது:குழந்தை தொழிலாளர் முறையை
ஒழிக்க, 1986ல், இத்திட்டம் வகுக்கப்பட்டது. தமிழகத்தில், 17 மாவட்டங்
களில், 4,500 ஆசிரியர்கள் இருந்த இடத்தில், தற்போது, 1,250 ஆசிரியர்களே
உள்ளனர்.குழந்தை தொழிலாளர்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்ட பகுதியில்,
ஆசிரியருக்கு வேலை இல்லை. வீட்டுக்கு சென்றுவிட வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா, குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழித்ததற்கு,
தமிழக அரசுக்கு, வெற்றி கிடைத்ததாக, ஜூன் 12ல், பேசியுள்ளார். இந்த
வெற்றிக்கு, நாங்களே காரணம்.
18 ஆண்டுகள்:
தொழிலாளர் சட்டப்படி, குறைந்தபட்ச சம்பளம் கூட எங்களுக்கு இல்லை.
மதிப்பூதியமாக எழுத்தருக்கு, 3,000 ரூபாயும், ஆசிரியருக்கு, 4,000 ரூபாயும்
கொடுக்கின்றனர். கடந்த, 11ம் தேதி நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், அனைத்து
எம்.எல்.ஏ.,க்களிடமும், முதல்வரின் தனிப்பிரிவிலும் மனு கொடுத்தோம்.
இத்திட்டத்தில், 18 ஆண்டுகளை கழித்து விட்டோம்.எங்களுக்கு மாற்றுப்பணி
மற்றும் சம்பளம் உயர்த்தி கேட்டோம். அகிம்சை வழியில் போராடி,
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இது சம்பந்தமாக யாரும் செவி
சாய்க்க மறுக்கின்றனர்.தி.மு.க., ஆட்சியில், எங்களை நலவாரியத்தால்
சேர்ப்பதாக கூறி, அப்போதைய தொழிலாளர் நலத்துறை முதன்மை செயலர், அனைத்து
மாவட்ட கலெக்டரிடமும், பட்டியல் கேட்டார். அதன் பின், அப்படியே
விட்டுவிட்டனர்.
உண்ணாவிரதம்:
கல்வித்தகுதிக்கு ஏற்ப, 1,250 பேருக்கும், அரசு துறையில் மாற்று வேலை வழங்க
வேண்டும். இதே நிலை நீடித்தால், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்,
குடும்பத்துடன் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...