பத்தாம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற,
வஞ்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், கூடுதல் கட்டடம் கட்டுமான பணி,
நிதியின்றி பாதியில் நிற்கிறது. அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம்
ஊராட்சிக்கு உட்பட்ட வஞ்சிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.
வஞ்சிபாளையம்,
கணியாம்பூண்டி, புதுப்பாளையம், பொன்ராமபுரம் உள்ளிட்ட பல கிராமங்களை
சேர்ந்த 350 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த பொதுத்தேர்வில், இப்பள்ளி
நூற்றுக்கு நூறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.
நடுநிலைப் பள்ளியாக இருந்து தரம்
உயர்த்தப்பட்டது என்பதால், பழைய கட்டடங்களில் வகுப்பறை நடந்தது. மத்திய
இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ், ரூ.49 லட்சத்தில், இரண்டு மாடிகளில்
வகுப்பறை, ஆய்வகம், நூலகம், ஆசிரியர், தலைமையாசிரியர் அறை என 10 அறைகள்
கட்டப்பட்டது. கடந்த கல்வியாண்டில் துவங்கிய இப்பணி இன்னும்
முடிந்தபாடில்லை. மொத்த மதிப்பீடான ரூ.49 லட்சத்தையும் தாண்டி, கூடுதலாக
ரூ.20 லட்சம் செலவழித்தால் மட்டுமே கட்டடம் முழுமையடையும் நிலையில் உள்ளது.
தலைமையாசிரியர் (பொறுப்பு) செல்வக்குமாரிடம்
கேட்டதற்கு, "திட்ட மதிப்பீட்டை விட, கூடுதலாக செலவாகி விட்டது.
ஒதுக்கப்பட்ட தொகை முழுவதும் பயன்படுத்தப்பட்டு விட்டது. கூடுதல் மதிப்பீடு
கிடைத்ததும் கட்டடம் முழுமையடையும்" என்றார். பெற்றோர் கூறுகையில்,
"பள்ளியில் கழிப்பிடம், மைதானம், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட அடிப்படை
வசதிகள் எதுவும் கிடையாது. போதிய நிதி இல்லாததால், புதிய கட்டடமும்
பாதியில் நிற்கிறது.
கல்வித்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும்
எடுக்காமல் உள்ளனர். உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்தால், மாநில,
மாவட்ட அளவில் வஞ்சிபாளையம் பள்ளி சாதனை புரியும்" என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...