Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

BRT சொந்த மாவட்டத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்…….

         ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடங்கும் முன் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வு கலந்தாய்வு, சொந்த ஒன்றியத்தில் / சொந்த மாவட்டத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்…….
         எதிர்நோக்கி காத்து இருக்கும் அனைத்து நிலை ஆசியர்களுக்கு மட்டுமே அது கலந்தாய்வு, அதே நிலையில் உள்ள ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு ஆறாத வடு…… கடந்த வாரத்தில் நிர்வாகக் காரணமாகப் பணிமாறுதலில் அனுப்பப்பட்ட சுமார் 400 ஆசிரியப் பயிற்றுநர்களும் தாங்கள் கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்த மாவட்டங்களை விட்டு எங்கோ மாற்றப்பட்டு / தூக்கியடிக்கப்பட்டுப் புதிய இடத்தில் தனது மனைவி, குழந்தைகள் , வயதான பெற்றோருடன் குடியேறிப் பின்  வேலை பார்க்கும் நிலை… ஒரு அகதியைப் போல…… மாவட்ட அளவில் 21.06.2014 அன்று 4587 அனைத்து ஆசிரியப் பயிற்றுநர்களுக்கும் நிர்வாக காரணமாகப் பணிமாறுதல் அளிக்கப்படவுள்ளது. இந்நிலை ஆறு அல்லது ஏழு ஆண்டுகளாகப் பணிபுரிந்துவந்த இடத்தை விட்டு வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்து பணிபுரிய வேண்டிய அவல நிலையை அனைத்து ஆசிரியப் பயிற்றுநர்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களும் ஆசிரியர்கள் தானே! ஆசிரியப்  பயிற்றுநர்களுக்கு மட்டும் இந்த ஏளன நிலை! ஏன்? என்ற கேள்வி பணிபுரியும் அனைத்து ஆசிரியப்பயிற்றுநரின் மனதிலும் என்றும் உண்டு ……

           இந்த ஆசிரிய பயிற்றுர்களின் செயல்பாடுகள் : -

- தமிழக அரசால் பள்ளிக்கல்வித்துறை வாயிலாக உடனடியாக மேற்கொள்ளப்படும் அனைத்துச் செயல்பாடுகளும் உடனடியாகப் பள்ளியைச் சென்றடைய தேவை இந்த ஆசிரியப் பயிற்றுநர்கள் ……
- தமிழக அரசால், பள்ளிக்கல்வித்துறை வாயிலாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத சூழலில், கடந்த கல்வி ஆண்டில் ஜூன் முதல் டிசம்பர் வரை ஆசிரியப் பயிற்றுநர்கள் மாற்றுப்பணியில் நியமிக்கப்+பட்டு வகுப்புகளை எடுக்க அனுப்பப்பட்டவர்கள் இதே ஆசிரியப் பயிற்றுநர்கள் தானே! பொதுத் தேர்வில் 91% மேல் மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- உச்சநீதி மன்ற ஆணையைப் பின்பற்றிக் கடந்த ஆண்டுகளில் அனைத்து பள்ளிகளிலும் கழிவறை வசதி ஏற்படுத்தித் தரும் பொருட்டு பள்ளிகள் தோறும் சென்று களஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கத் தேவைப்பட்டவர்கள் இவர்கள் தானே!
- கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில், மாண்புமிகு தமிழக
முதல்வர் அவர்களின் சீரிய சிந்தனையின் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறையில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் உயர்ந்து வருகிறது என்று அரசின் சிறப்புக்களை எடுத்துரைத்தார். மேலும் அனைவருக்கும் கல்வி இயக்கம் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களால் தமிழ்நாட்டில் 2002 ல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் உட்கூறானப் பள்ளி செல்லாக் குழந்தைகளைக் கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது, பள்ளியில் பயிலும் மாணாக்கர்களைத் தொடர்ந்து தக்க வைப்பது என்ற கொள்கையுடன் செயல்பட்ட அனைவருக்கும் கல்வித் திட்டச் செயல்பாட்டில் களப்பணியாளா் ஆசிரியப் பயிற்றுநர்கள் தான். மாணவர்கள் தொடர்ந்து பயில்கிறார்கள் என்பதை உறுதி செய்வதும் ஆசிரியப் பயிற்றுநர் பணிதானே. கடந்த ஐந்து ஆண்டுகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ளது என்பது  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் கூர்ந்து ஆராயப்பட்டு, சட்டப் பேரவையிலும் அவைக் குறிப்பிலும் இடம் பெற்றது எனில் இதில் இவர்களின் பணியும் அடங்கும் தானே! …..
- ஆண்டு தோறும் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறிவதற்கான பணியில் ஈடுபட்டு குடியிருப்பு வாயிலாக கணக்கெடுப்பில் ஈடுபட்டு அவ்வாறு இருக்கும் மாணாக்கர்களை பள்ளிகளில் பயிலச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் இந்த ஆசிரியப் பயிற்றுநர்கள்.
- மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு அரசு மேற்கொள்ளும் செயல்பாட்டை நடைமுறைப்படுத்திட தேவை இந்த ஆசிரியப் பயிற்றுநர்கள்.
- சுகாதாரத் துறையில் NCDS நோய்களைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தத் தேவை இந்த ஆசிரியப் பயிற்றுநர்கள்
- பள்ளிக்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கும் கண்காணிப்பதற்கும் தேவை இந்த ஆசிரியப் பயிற்றுநர்கள்
- ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க, RTE Act சார்ந்த விழிப்புணர்கவுகளை பள்ளிகளின் வாயிலாக, ஆசிரியர்களின் வாயிலாக பொது மக்களிடம் சென்று சேர்ப்பது இவர்கள் தானே….
- செயல்வழிக்கற்றல், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்துவது இந்த ஆசிரியப் பயிற்றுநர்கள்.

           இவர்களும் ஆசிரியர்களே! ஆசிரியர்களுக்கே உரித்தான உண்மை, ஒழுக்கம், சமுதாய உணர்வுடன் பணிபுரியும் இவர்களுக்கு வழங்கடப்படும் அநீதி தானே இந்தப் பணியிட மாறுதல் கலந்தாய்வு…….
           இப்பணிகளுக்கு MHRD ( 2002 - ல் ) வழிகாட்டுதலில் தொகுப்பூதியப் பணியாளர்களை நியமிக்க அறிவுறுத்தியும் தங்கள் தலைமையிலான அரசு ஆசிரியர்களையே ஆசிரியா் பயிற்றுநர்களாக நியமித்து காலமுறை ஊதியத்தை வழங்கியது. அது இதுவரை தொடர்கிறது. 2012 –2013 ல் மத்தியஅரசு ஆசிரியப் பயிற்றுநர்களுக்கான ஊதியம் குறைத்து வழங்கியதால் பணியிடங்களைக் குறைக்க முடிவு செய்யப்பட்டு இந்தப் பணிமாறுதல் வழங்கப்படுகிறது என்றாலும், எவரும் பாதிக்கா வண்ணம் இச்செயல்பாட்டினை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருந்தது. ஆனால் அனைத்தும் தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. இனி இவர்களின் நிலைகள் .
        தமிழக அரசு 13.12.2012 அன்று கிட்டதட்ட 22,000 ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்து பணி நியமனம் கிடைக்கப் பெற்ற ஆசிரியர்கள் கூட தத்தம் ஊர்களுக்கு அருகில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளார்கள்.

         இனி எதிர்வரும் காலங்களில் அரசால் 18,000 ஆசிரியப் பணியிடங்களும் நிரப்பப்பட்டால் கடந்த ஆறு ஏழு வருடங்களாக ஒரு மாவட்டத்தில் பணிபுரிந்து தற்பொழுது வேறு மாவட்டத்தில் பணிபுரிய கட்டாய பணி நிரவல் அளிக்கப் பட்டுள்ள ஆசிரியப் பயிற்றுநர்கள் மீள தம் சொந்த ஒன்றியத்திற்கோ, மாவட்டத்திற்கோ பணிபுரிய வர இயலாத சூழல் ஏற்படும் என்பது ஏற்புடையது மட்டுமல்லாமல் மிகுந்த மனவேதனையையும் ஆறாத் துயரத்தையும் பணியாளர்களுக்குக் கொடுப்பது மட்டுமல்லாமல் அவர் சார்ந்த குடும்பத்திற்கும் கொடுப்பது என்பது நிதர்சனமான உண்மை……
         மேலும் ஒவ்வொரு கல்வியாண்டிலும் மூத்த ஆசிரியப் பயிற்றுநர் 500 போ் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக மீளப் பணியில் அமர்த்தல் நடைபெறும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெறவே இல்லை…… அப்படி ஒரு சூழலிலாவது ஆசிரியர்களாக மாறுதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணிபுரிபவர்களுக்கு இனி அதுவும் கனவாகவே போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

          இப்பொழுது மாறுதல் அடையும் ஒவ்வொருவரும் எப்பொழுதுமே தங்கள் சொந்த மாவட்டத்திலோ சொந்த ஒன்றியத்திலோ பணிபுரிய முடியாத சூழல் உண்டாகும் என்பதையும் அறிந்து தான் இந்த செயல்பாடு நடக்கிறதா !

        பள்ளிக்கல்வித்துறையில் / தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் உரிய முறையில் கலந்தாய்வு நடத்தி அவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களது சொந்த மாவட்டத்தில் / ஒன்றியத்தில் பணிபுரிய வாய்ப்பு வழங்கும் இதே அரசு ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை அளிக்கிறது…… அனைத்து ஆசிரியப் பயிற்றுநர்களும் அசாதாரணத் திறமையினால் அனைத்து வேலைகளையும் மிகவும் சரியாகவும், நுட்பமாகவும் செய்வார்கள் என்று சொல்லவில்லை. ஒரு சில மனிதத் தவறுகளும் ஏற்படும். ஆனால் அவைகளும் அலுவலர்களின் திறமையால் , சமார்த்தியத்தால் நிவர்த்தி செய்யப்படுவது இயல்பு. ஆனால் முழு அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தவர்களுக்கு இந்தக் கட்டாயப் பணிநிரவல் வருத்தம் மட்டுமல்லாது மன வேதனையையும் அளிக்கிறது என்பதைப் பணிந்து தெரிவித்துக் கொள்கிறோம்.

          எத்தனையோ மாற்று வழிகளின் மூலம் யாருக்கும் பாதிக்கா வண்ணம் சிந்தித்துச் செயல்படவேண்டிய உயர் அலுவலர்கள் ஆசிரியப் பயிற்றுநரின் பணி மாறுதலில் அனைவரையும் அலைக்களிப்பது அரசின் நன்மதிப்பைக் கெடுப்பதாக அமைந்து விடும்.

” முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் ”

ஆக இறைவனாக மதித்து எங்கள் குறைகளைப் பணிந்து பதிவு செய்கிறோம்..

          அனைத்து நிலைகளிலும் அடிமையாகப் பணிபுரிந்து இனி வரும் காலங்களில் அகதிகளாகவும் ஆகும் இந்த அடிமைகள் நிலையை தங்களுக்குப் பணிந்து தெரிவித்துக் கொள்கிறோம்…..
Thanks To,
Anna malai




2 Comments:

  1. yepdi iruntha neenga ipdi ayitinga

    ReplyDelete
  2. UNGALUDAIYA thevaiyai mattum kuralame etharkaka mattavarai oppida vendum state seniority ill nangal anubavithu kondirukkirom

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive