சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களை பங்கேற்க
செய்யும் வகையில், புதிய கல்வி முறை அமைந்துள்ளதால், பள்ளிகள் தோறும்
"சூழல் கிளப்"புகளை உருவாக்க வேண்டும்" என, மாவட்ட கல்வி அதிகாரி
அறிவுறுத்தியுள்ளார்.
நுகர்வோர் தினம், சுற்றுச்சூழல் தினம் என,
தினம் தினம் ஒரு தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மலை மாவட்டமான
நீலகிரியில் அழிந்து வரும் வன வளம், குறைந்து வரும் நீர் வளம், மாறி வரும்
குளு குளு காலநிலை போன்றவற்றை பாதுகாக்க, மாவட்டத்தின் பசுமை மற்றும்
சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்
துறை, நகராட்சி போன்ற அரசு துறைகள் அவ்வப்போது விழிப்புணர்வுகளை வழங்கி
வருகின்றன.
ஆக்கப்பூர்வ கல்வி முறை
மாணவ, மாணவியரை வெறுமனே வீதிகளில் நடக்க விட்டு
சுற்றுச்சூழலை காப்போம்; வன வளம், நீர் வளம் காப்போம் என, கோஷம் எழுப்பும்
மாணவர்கள், அதுகுறித்த ஆக்கப்பூர்வ அறிவை பெற்று, சுற்றுச்சூழல்
பாதுகாப்பில், தங்களை முழு அளவில் ஈடுபடுத்தி கொள்கின்றனரா என்ற கேள்வி
எழுந்துள்ள நிலையில், தற்போதைய கல்வி முறை அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி
கொடுத்துள்ளது என கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி
கூறுகையில், "தொடர் மற்றும் முழு மதிப்பூட்டல் கல்வி முறையில் மாணவ,
மாணவியர் புத்தக படிப்பை தாண்டி, வெளியுலக நடைமுறையை தெரிந்து,
படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில், பாட முறை அமைந்துள்ளது. மாணவ,
மாணவியரின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் பிராஜக்ட் வேலைகள்
வழங்கப்பட்டு, தேர்வில் மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நுகர்வோர்
விழிப்புணர்வு, வன வளம் பாதுகாத்தல் போன்ற பண்புகளை மாணவ சமுதாயம் வளர்த்து
கொள்ள பள்ளிகள் தோறும் சூழல் கிளப், நுகர்வோர் கிளப், தேசிய பசுமைப்படை,
தொல்லியல் கிளப், ரெட் கிராஸ், என்.சி.சி., என்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளை
துவங்கி, அதில் மாணவர்களை ஈடுபட செய்ய வேண்டும் என, பள்ளி
தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இச்செயல்பாடுகளை கல்வி துறை அலுவலர்களும்,
எஸ்.எஸ்.ஏ. வட்டார வள ஆசிரியப் பயிற்றுனர்களும் அவ்வப்போது கண்காணித்தும்
வருகின்றனர்" என்றார்.
காற்றில் பறக்கும் அறிவுரை
இருப்பினும், பல பள்ளிகளில் மாணவர்களின் இதர
திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலான இத்தகைய கிளப்புகள் அமைக்கப்படவில்லை;
அப்படி அமைக்கப்பட்டிருந்தாலும் செயல்படுவதில்லை. காரணம், பள்ளி
தலைமையாசிரியர்களின் ஆர்வமின்மையாகும்.
சுயநலமற்ற தனியார் சுற்றுச்சூழல் அமைப்புகள்
பல, பள்ளிகளில் உள்ள அத்தகைய கிளப்புகளின் செயல்பாடுகளுக்கு உதவிக்கரம்
நீட்டி, மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்க தயாராக உள்ள நிலையில், அந்த
வாய்ப்பை பள்ளிகள் பயன்படுத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களை களம்
இறக்குவதன் மூலம் மட்டுமே, இத்தகைய விழிப்புணர்வு பேரணிகள், கோஷங்களுக்கு
உண்மையான பலன் கிடைக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...