ஆசிரியர் வருகை பதிவை உறுதிப்படுத்தும்
எஸ்.எம்.எஸ். முறையை மீண்டும் அமல்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்க வேண்டும். சில தனியார் பள்ளிகளில் மாணவர் வகுப்புக்கு வரவில்லை
எனில் பெற்றோருக்கு போனில் எஸ்.எம்.எஸ்.,அனுப்பும் நடைமுறை
பின்பற்றப்படுகிறது. அதேபோல், அரசு பள்ளிகளில் ஆசிரியர் வருகை குறித்து
எஸ்.எம்.எஸ். அனுப்பும் முறை கடந்த கல்வியாண்டில் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, பள்ளிக்கு வராத ஆசிரியர் குறித்து
எஸ்.எம்.எஸ். மூலம் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கோ அல்லது முதன்மை கல்வி
அலுவலகத்துக்கோ தலைமை ஆசிரியர் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். அல்லது
ஆன்-லைன் மூலமாக இத்தகவல் அனுப்பும் முறை பல பள்ளிகளில் பின்பற்றப்பட்டது.
நாளடைவில், ஆசிரியர் வருகை பதிவை உறுதிப்படுத்தும் இம்முறை கைவிடப்பட்டது.
தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை
அதிகாரிகளுக்கு ஏற்பட்ட பணிச்சுமை காரணமாக, ஆசிரியர் விடுமுறை குறித்து
குறுந்தகவல் அனுப்புவது முற்றிலும் தடைபட்டுள்ளது. சில மாவட்டங்களில்
இம்முறை தற்போதும் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால்,
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நடைமுறையில் இல்லை.
சில ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவது;
நட்பாக உள்ள மற்ற ஆசிரியர்களை, தன் வகுப்பு நேரத்தை கவனிக்கச் சொல்லி
விட்டு, சொந்த வேலையை கவனிப்பது, கையெழுத்து பதிவேட்டில் காலியிடம் விட்டு,
வகுப்புக்கு செல்லாமலேயே பணிக்கு வந்ததாக தவறு செய்வது போன்ற முறைகேடுகளை
தடுக்கவே, ஆசிரியர் வருகை குறித்து குறுந்தகவல் அனுப்பும் முறை கொண்டு
வரப்பட்டது. நடைமுறையில் இல்லாததால், குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் மீண்டும்
அதே தவறுகளை செய்ய வாய்ப்புள்ளது.
கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,
ஆசிரியர் வருகை குறித்து எஸ்.எம்.எஸ். அனுப்பும் முறை கடந்தாண்டிலேயே
நிறுத்தப்பட்டு விட்டது; பள்ளி கண்ணாடி என்ற பெயரில், பள்ளியில் உள்ள
போர்டில் ஆசிரியர் வருகை குறித்த பதிவு தினமும் எழுதப்பட வேண்டும்;
அப்பள்ளிக்கு ஆய்வுக்கு செல்லும் கல்வித்துறை அதிகாரிகள், அதன் மூலம்
ஆசிரியர் வருகை குறித்த விவரத்தை அறிய முடியும் என்றார்.
ஆனால், பெரும்பாலான அரசு பள்ளிகளில் பள்ளி
கண்ணாடி என்ற பெயரில், ஆசிரியர் வருகை குறித்த விவரம் எழுதுவதாக
தெரியவில்லை. எனவே, ஆசிரியர் வருகை குறித்து எஸ்.எம்.எஸ். அனுப்பும் முறையை
மீண்டும் அமல்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...