Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப் பள்ளிகள் படுகொலைக்கு யாரெல்லாம் காரணம்? தி ஹிந்து

தயவுசெய்து நம் கைகளைக் கொஞ்சம் உற்றுப்பாருங்கள்... வழிகிறது ரத்தம்!

       அரசுப் பள்ளிகளின் மரணச் செய்திகளை அத்தனை எளிதாகக் கடக்க முடிவதில்லை. சமீபத்திய மரணம் ராமகோவிந்தன்காட்டில் நடந்திருக்கிறது. வேதாரண்யம் பக்கத்தில் உள்ள கிராமம் இது. அரை நூற்றாண்டுக்கும் மேல் இங்கு செயல்பட்டுவந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இன்றைக்கு மூடப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு வரை ஐந்தாம் வகுப்பில் மூன்று மாணவர்களும் இரண்டாம் வகுப்பில் ஒரு மாணவரும் படித்திருந்திருக்கின்றனர். இந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் உயர் வகுப்புக்கு வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டனர். உடன் படிக்கும் துணை யாரும் இல்லாத சூழலில் மூன்றாம் வகுப்புக்கு வந்த அந்தக் கடைசி மாணவனையும் பெற்றோர் வேறு பள்ளியில் சேர்க்க, மாணவர்களே இல்லாத வெறும் செங்கல் கூடாக மாறியிருக்கிறது. வேறு வழியில்லாமல், பள்ளிக்கூடத்தில் பணியாற்றிய இரு ஆசிரியர்களையும் வேறு பள்ளிக்கூடங்களுக்கு மாற்றிவிட்டு, பள்ளிக்கூடத்தை மூடியிருக்கின்றனர்.


           பள்ளிக் கல்வி மேலாண்மைத் தகவல் மைய ஆய்வறிக்கையின்படி, தமிழகத்தில் 500 பள்ளிகளில் வெறும் ஐந்து குழந்தைகள் மட்டுமே படிக்கின்றனர். அரசின் அதிகாரபூர்வமான தகவல்கள் ஏதும் இல்லை என்றாலும், கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 1,000 பள்ளிக்கூடங்கள் தமிழகத்தில் மட்டும் மூடப்பட்டிருக்கின்றன என்கிறது ஓர் ஆய்வறிக்கை. ராமகோவிந்தன்காடு பள்ளிக்கூடம் ஆயிரத்து ஒன்றாக இருக்கலாம். இன்னும் கொஞ்ச நாட்களில் அந்த மூடப்பட்ட வெற்றுக்கட்டிடம் சிதிலம் அடையும். ஒரு பெருமழை நாளில் உத்திரமும் சுவர்களும் உடைந்து குட்டிச்சுவராகும். புதர்களும் புற்றுகளும் வளரும். பாம்புகள் நுழையும். 1,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி கொடுத்த அந்தக் கோயில், நம்முடைய சுயநல வேட்கையையும் சமூக அலட்சியத்தையும் பிரகடனப் படுத்திக்கொண்டு புதர் மண்டிய ஒரு சமாதிபோல் நிற்கும். இந்தியாவின் 100 பள்ளிகளில் 40 பள்ளிகள் இன்றைக்குத் தனியார் பள்ளிகள். அடுத்த சில 10 ஆண்டுகளில் மீதியுள்ள 60 பள்ளிகளும் இப்படிச் சமாதிகள் ஆகலாம்.

பள்ளிக்கூடங்களின் அடிப்படை என்ன?

              வெகு நாட்களுக்கு முன் நேரில் கிடைத்த ஓர் அனுபவம் இது. நன்கு படித்த, நல்ல வசதியான பெற்றோர்கள் அவர்கள். நம்மில் பலரையும்போல, அரசுப் பள்ளிக்கூடத்தின் மீது அவர்களுக்கும் ஒவ்வாமை. ஊரின் பெரிய தனியார் பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்தார்கள். குழந்தை களை உருப்படிகளாகப் பாவிக்கும் சூழலைப் பார்த்து அதிர்ந்து, அடுத்த வகுப்பில் வேறு ஒரு தனியார் பள்ளியில் சேர்த்தார்கள். அங்கும் அதே அதிர்ச்சி. மீண்டும் இன்னொரு தனியார் பள்ளி. தங்கள் குழந்தைகள் சுதந்திரமாக, சந்தோஷமாகப் படிக்க வேண்டும் என்று நினைத்த அவர்களுக்கு மீண்டும் அதே அதிர்ச்சி. மாற்றுக் கல்விமுறையில் கற்பிக்கும் பள்ளிக்கூடங்களில் சேர்த்தார்கள். அங் கும் அவர்களுக்குத் திருப்தி இல்லை. கடைசியாக, குழந்தைகள் வீட்டிலிருந்து தானே படிக்கும் சூழலை உருவாக்கினார்கள். குழந்தைகள் அபாரமாகப் படித்தார்கள். சந்தோஷமாக இருந்தார்கள்.

               சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் சமீபத்தில் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. குழந்தைகள் அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டிருந்தார்கள். என்ன விஷயம் என்று கேட்டபோது, அந்தப் பெற்றோர்கள் சொன்னார்கள்: “குழந்தைகள் வீட்டிலிருந்து படித்தபோது பாடப்புத்தகங்களில் இருந்த பாடங்களை நன்றாக உள்வாங்கிக்கொண்டார்கள். ஆனால், சமூகத்தில் என்ன நடக்கிறது என்றே அவர்களால் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. சரி, தனியார் பள்ளிகளில் சேர்க்கலாம் என்றால், அங்கும் இதேதானே நடக்கிறது? அவரவர் வசதி, சமூக அந்தஸ்துக்கு இணையான குழந்தைகளுடன் மட்டுமே படிக்க வாய்ப்புள்ள குழந்தைகளால் அங்கு என்ன கற்றுக்கொள்ள முடியும்? கல்வியின் முக்கிய மான செயல்பாடே சமூகத்தைப் படிப்பதுதான் அல்லவா? ஒரே மாதிரியான மனிதர்களுடன் உரை யாடி, உறவாடும் குழந்தைகளால் எப்படி உலகைப் புரிந்துகொள்ள முடியும்; வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள முடியும்?” - முக்கியமான ஒரு கேள்வி இது.

               கல்வியின் அடிப்படை இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. அதாவது, ஒரு குழந்தையிடம் உறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டுவந்து சமூகத்தின் வளத்தோடு அதைப் பொருத்துவதில். சமூகத்தைப் படிப்பதிலிருந்தே அதைக் குழந்தை தொடங்க வேண்டும். சக மனிதனின் இன்னல்களை, துயரங்களைப் பார்த்து ஊற்றெடுக்கும் அன்பும் இரக்கமும் கோபமும் எழுச்சியும்தானே சமூக விடுதலைக்கான ஆதாரம்?

தலைமுறைகளின் தவம்

           ஒரு அரசுப் பள்ளிக்கூடம் என்பது வெறும் செங்கற் களால் மட்டுமா எழுப்பப்படுகிறது? ஒவ்வொரு பள்ளியின் பின்னணியிலும் எத்தனையெத்தனை மனுக்கள், எத்தனையெத்தனை போராட்டங்கள்? சாலையில் நடக்கும் சக மனிதனின் கால் தடம், தன் காலில் பட்டால் தீட்டு என்று சொல்லி, அவன் தன் இடுப்பில் துடைப்பம் ஒன்றைக் கட்டிக்கொண்டு தன் காலடிச்சுவடுகளைப் பின்புறமாகக் கூட்டியபடியே செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த சமூகம் இது. சாலையில் எங்கேனும் எச்சிலைத் துப்பி விட்டால், தீட்டாகிவிடும் என்று கழுத்தில் மண் கலயத்தைக் கட்டிக்கொண்டுதான் நடக்க வேண்டும் என்று சக மனிதனுக்கு ஆணையிட்டிருந்த சமூகம். இப்படிப்பட்ட சமூகச் சூழலில், எல்லாப் பாகுபாடுகளையும் கடந்து, எல்லோர் வீட்டுப் பிள்ளைகளும் சரிசமமாக உட்கார்வதும் படிப்பதும் சாப்பிடுவதும் உரையாடுவதும் உறவாடுவதும் எத்தனை தலைமுறைகளின் நூற்றாண்டு தவம்? இந்தியாவில் எந்த அமைப்பாலும் உருவாக்க முடியாத சமூகநீதி அமைப்பு அரசுப் பள்ளியில் சாத்தியமானது. அந்த அமைப்புகளைத்தான் இன்றைக்கு ஒவ்வொன்றாகக் கொன்று புதைத்துக் கொண்டிருக்கிறோம்.

அரசு மட்டும்தான் காரணமா?

            அரசுப் பள்ளிகள் படுகொலைக்கு யார் காரணம்? உடனே நம் பார்வை அரசையும் அரசியல்வாதிகளையும் நோக்கிச் செல்லும். கொஞ்சம் நம் கைகளையும் உற்றுப்பார்க்கலாம். அரசுப் பள்ளிகளின் தோல்விக்கான காரணிகளில் அரசும் அரசியல்வாதிகளும் தவிர்க்கவே முடியாத வர்கள் என்றாலும், அவர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்லர். இன்னும் சொல்லப்போனால், முதன்மைக் குற்றவாளிகள் பெற்றோர்களாகிய நாம்தான்.

                நூறு ரூபாய் செலவில்லாமல், ஒரு மணி நேரம் காத்திருக்க வைக்காமல் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்கின்றன அரசுப் பள்ளிகள். கூடவே, பாடப்புத்தகங்கள், புத்தகப்பையில் தொடங்கி சைக்கிள், மடிக்கணினி வரை வழங்குகின்றன. ஆனாலும், அதிகாலையிலிருந்தே வரிசையில் நின்று காத்திருந்து, லட்ச ரூபாய் கொடுத்து, படாத பாடுபட்டு தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்துவிட்டு, பணம்பிடுங்கிகளிடம் மாட்டிக்கொண்டு புலம்பவே துடியாய் துடிக்கிறோம். ஏன்?

அவலப்போக்கின் ஆரம்பம்

            அரசுப் பள்ளிகளில் ஆயிரம் குறைகள் இருக்கின்றன (தனியார் பள்ளிகளைப் போலவே). சீரழிவுக்கு அடிப்படைக் காரணம் என்ன? நம்முடைய பொறுப்பற்றத்தனம். நம் அருகில் இருக்கும் அரசுப் பள்ளி நம் சொத்து; அங்கே பல்லாயிரங்களில் ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் நம் வரிப்பணம்; அங்கே நம் குழந்தைகளுக்குத் தரமான கல்வியைக் கொடுக்க வேண்டியது இந்த அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை; அதற்காகக் கை உயர்த்திக் கேள்வி கேட்பது நம்முடைய உரிமை என்ற எண்ணம் நம் ஒவ்வொருவருக்கும் இருப்பின் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?

                சமூகத்தில் யாருடைய குரல்களுக்கு எல்லாம் அதிகாரத்தின் வலு இருக்கிறதோ, அவர்கள் எல்லோரும் இன்றைக்குத் தனியார் பள்ளிகளை நோக்கி நகர்ந்துவிட்டோம். நம்முடைய பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் இல்லை. அங்கே என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியாது. அரசுப் பள்ளிகளுக்கும் நமக்குமான தொடர்பு அறுந்துவிட்டது. எஞ்சி இருப்பவர்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் இருப்பவர்கள். குரல்களற்ற ஏழைகள். காலையில் விடிந்தவுடன் கூலி வேலைக்கு ஓடி, இரவில் வீடு திரும்பும் அவர்களால் யாரை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியும் அல்லது அவர்கள் கேள்விக்கு என்ன மதிப்பு இருக்க முடியும்?

தயவுசெய்து கொஞ்சம் நம் கைகளை உற்றுப்பாருங்கள்… வழிகிறது ரத்தம்!

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in




6 Comments:

  1. அன்பர்களே !
    இந்தக்கட்டுரை இன்றைக்கு தேவையான ,படிக்க ,நினைக்க வேண்டிய ஒன்று.சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற இருந்த முதன்மைக்கல்வி அலுவலர் ஒருவர் கூறியது, தனியார் பள்ளியில் பயிலும் மாணவன் நன்றாகப்படிக்கிறான், ஆனால் அவன் பாடத்தைத் தவிர வேறு என்ன கற்றுக்கொண்டான் ? ஒன்றுமில்லை. முந்திரியும், திராட்சையும், போட்டு மிக அருமையாக செய்த பால்பாயாசத்தை மாணவனின் வாயில் ஒரு பிளாஸ்டிக் டியூப்பை செருகி, பின்பக்கம் வழியே அந்த டியூப்பை வெளியே இழுத்துவிட்டு வாய்பக்கம் உள்ள டியூப்பில் புனல் வைத்து பாயாசத்தை ஊற்றுவது போலத்தான் இவர்கள் கற்பிக்கிறார்கள். அந்த பாயாசத்தின் சுவையை அவனால் அறியமுடியுமா? அல்லது பாயாத்தின் சத்தாவது உடலில் சேர்ந்ததா? எதுவும் இல்லை. பாடத்தை முடிக்க வேண்டும்.வீட்டுவேலை கொடுக்கவேண்டும்.அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும். இதைத் தாண்டி செல்வதே இல்லை. ஏனெனில் பெற்றோரும், சமூகமும் மதிப்பெண்ணைத்தான் பார்க்கிறது. தேர்வுக்காக மட்டுமே படித்த மாணவனால் பத்தாம் வகுப்பில் படித்ததை பதினொன்றாம் வகுப்பில் படிக்கும் போது முன்னறிவை சோதனை செய்தால் அவனால் பதில் சொல்லத்தெரியவில்லை. இதற்கு எல்லாம் காரணம் நாம் அனைவருமேதான். நம் பாட்டனால் தொடக்கக்கல்வில் பயின்றதை இப்போதும் சொல் இயலும்போது நம் மகனால் இயலாமல் போனது , காலத்தின் கொடுமை. மாற்றம் வேண்டும். புரிந்து படிக்க அவனை அனுமதிக்க வேண்டும். முயல்வோம்.

    ReplyDelete
  2. Manam karaikirathu

    ReplyDelete
  3. Sinthippom seyal paduvom
    Oru unmaiyana govt teachering pulampal Inge therikirathu.
    Aduthathu nam than vizhithu kolvom arasu pallil serpom

    ReplyDelete
  4. Govt school la than en child serpean frd

    ReplyDelete
  5. மேற்கண்டவர்களை தலைவணங்குகிறேன்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive