Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்விக் கடனின் இரு பக்கங்கள்

                     அண்மைக்காலத்தில், மத்திய நிதி அமைச்சகம் மற்றும் நீதிமன்றங்களின் தலையீடுகள், ஆணைகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் வழிமுறைகள் ஆகிய தொடர் நடவடிக்கைகள் தகுதியுள்ள மாணவர்கள் பலர் தங்கள் உயர் கல்வியை தொடர தேவையான கடன் வசதிகளை வங்கிகளிடமிருந்து பெறுவதற்கு பெரிதும் உதவியிருக்கின்றன. ஆனால், அந்தக் கடனை பெற்று உயர் கல்வியை தொடர்வதற்குள், மாணவர்கள் படும்பாடு சொல்லி மாளாது என்ற பரவலான கருத்து நிலவுகிறது.
 
              பாஸிட்டிவான அணுகுமுறையை எதிர்பார்த்து வங்கிகளை நாடும் மாணவர்கள், எதிர் மறையான, முன்கூட்டிய தீர்மானத்துடன், வங்கி அதிகாரிகள் தங்கள் கடன் கோரிக்கையை தவிர்க்க நினைப்பதாக மன உளைச்சல்களுக்கு ஆளாகின்றனர். மிகுந்த போராட்டங்களுக்குப் பிறகே தாங்கள் கல்வி கடன் பெறமுடிந்ததை பல மாணவர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.
 
     கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, 25,70,254 மாணவர்கள், 57,700 கோடி ரூபாய் பெற்று வங்கிகளின் கடன் திட்டத்தின் மூலம் பயனடைந்திருக்கின்றனர். வங்கிகள் வழங்கிய மொத்த கடன் தொகையில் இது சுமார் 1 சதவீதமாகும்.
 
          படிப்பு முடிந்து ஒரு வருடம் அல்லது வேலை கிடைத்து ஆறு மாதங்களானதும் (இவைகளில் முதல் நிகழ்வு), கல்விக் கடனை வட்டியுடன் திருப்பி செலுத்த ஆரம்பிக்கவேண்டும். தற்போது நிலவிவரும் பொருளாதார தொய்வு நிலையால், பல துறைகளில் தகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்துள்ளது.
பொறியியல் பட்டப்படிப்பைப் பொருத்தவரை, கேம்பஸ் இன்டர்வியூவில் தகுதி பெற்று வேலை கிடைத்தவர்கள் மட்டும்தான் கணிசமான ஊதியம் பெறுகின்றனர். எஞ்சியவர்களில் பலர், மாதம் 10,000 ரூபாய் வருமானத்திற்கு கீழ் பணி புரியும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். கல்விக் கடன் மூலம் தொழில் சாராத பட்டப்படிப்பு படித்தவர்கள், அதிகபட்சம் மாத சம்பளமாக 8-10 ஆயிரம் ரூபாய் வரைதான் பெறுகின்றனர்.
இவர்கள் 4 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றிருந்தால், திருப்பி செலுத்த வேண்டிய மாத தவணை தொகை சுமார் 8,500 ரூபாயாகும். தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், வருடத்திற்கு 3-4 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக செலுத்துகின்றனர். கல்விக் கடன் மூலம் இந்தக் கட்டணத்தை செலுத்தினால், மாதாந்திர கடன் தவணைத்தொகையாக குறைந்த பட்சம் 15,000 ரூபாய் வரை அவர்கள் செலுத்த வேண்டும்.
படிப்பை முடித்து, போதிய வருமானம் இல்லையென்றால், தவணைத்தொகையை முழுவதுமாக செலுத்தமுடியாத நிலை ஏற்படும். இதன் அடிப்படையில், நிர்வாக ஒதுக்கீடுகளில் தனியார் கல்லூரியில் சேர்பவர்களுக்கு, வங்கிகள் கடன் வழங்கத் தயங்குகின்றன.
இண்டியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (..எம்.)இல் நிர்வாக இயல் பயிலும் மாணவர்களுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட 130 கடன்களில், 20 கடன்கள் திரும்பி செலுத்தப்படாமல் நிலுவையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கல்வி கடன்களில் அதிகரித்து வரும் வாராக்கடன்களின் அளவு, சில வங்கிகளில் 10 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. மற்ற துறை கடன்களை பொருத்தவரை, வாராக் கடன்களின் அளவு 3-4 சதவீதம் வரைதான் என்பது குறிப்பிடத்தக்கது. கல்விக் கடன் வழங்குவதில் வங்கிகள் தயக்கம் காட்டுவதற்கு இது ஒரு பிரதான காரணமாக சொல்லப்படுகிறது. அதனால், தனியார் வங்கிகள் பெரும்பாலும், செக்யூரிட்டி இல்லாத கல்விக்கடன்களை வழங்குவதில்லை.
ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளின்படி, 4 லட்சம் வரையிலான கல்வி கடன்களுக்கு செக்யூரிட்டி, பிணைத்தொகை மற்றும் உத்தரவாதம் தேவையில்லை. 4 முதல் 7.5 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு மாணவரின் பெற்றோர் உத்தரவாத கையெழுத்து போடவேண்டும். அதற்கு மேற்பட்ட கடன்களுக்கு சொத்து அடமானம் கோரப்படுகிறது.
வங்கிகள் வழங்கும் கல்விக் கடன்களில் பெற்றோரும் கூட்டு கடனாளியாக சேர்க்கப்படுகின்றனர். அவர்களின் கடந்தகால கடன் வரலாற்றில் கரும்புள்ளிகள் இருந்தால் கல்விக் கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அந்த மாதிரி சந்தர்ப்பங்களில், வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படும் மூன்றாமவர் உத்தரவாத கையெழுத்திடலாம்.
உள்நாட்டு உயர் கல்விக்கு 10 லட்சம் ரூபாய் மற்றும் வெளிநாட்டு கல்விக்கு 20 லட்சம் ரூபாய் வரையிலும் கடனாக வழங்கப்படுகிறது. 4 லட்சத்துக்கு மேற்பட்ட கடன்களுக்கு 5 முதல் (உள்நாட்டு கல்வி) 15 சதவீதம் வரை (வெளிநாட்டு கல்வி) பிணைத்தொகை வசூலிக்கப்படும். இந்தக் கடன்களை 10 முதல் (கடன் தொகை 7.5 லட்சம் வரை) 15 வருடங்கள் (கடன் தொகை 7.5 லட்சத்துக்கு மேல்) வரையிலான தவணைகளில் திரும்ப செலுத்தலாம். விண்ணப்பித்த 15 நாள்களுக்குள் கடன் வழங்குவதற்கான முடிவு தெரிவிக்கப்படவில்லையானால், மாணவர் வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு மனு செய்யலாம்
சமீப காலங்களில், நம் நாட்டில் உயர் கல்விக்கூடங்கள், பணம் குவிக்கும் வியாபார மையங்களாகிவிட்டன. அங்கு, முழுமையான தொழில் கல்வி மாணவர்களுக்கு புகட்டப்படுவதில்லை. ஒவ்வொரு வருடமும், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், பட்டப்படிப்பை முடித்து, வேலைக்கான சந்தைக்கு வருகின்றனர்.
படிப்பை முடித்து, சுய தொழில் துவங்கும் திறமை அவர்களிடையே வளர்க்கப்படுவதில்லை. இந்த சூழ்நிலையில், மாணவர்கள் கல்வி கட்டணமாக செலவழித்த தொகைக்கு ஈடாக அவர்களால் ஊதியம் பெற முடிவதில்லை. கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாததற்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.
உயர் கல்விக்காக நம் அரசாங்கம் செலவிடும் தொகை ஜி.டி.பி.யில் 1 சதவீதத்திற்கும் குறைவுதான். இது மற்ற வளரும் நாடுகளைவிட குறைந்த அளவுதான். இந்த செலவை அதிகரித்தால், கடன் சுமை இல்லாமல், தகுதியான பல மாணவர்களுக்கு அரசாங்கம் உயர் கல்விக்கு உதவ முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது.
கடன் வாங்கி உயர் கல்வியை தொடர நினைக்கும் மாணவர்கள், தங்கள் குடும்ப வருமானம் மற்றும் தங்களுக்கு வாய்ப்பிருக்கும் துறை பணிகளில் வரக்கூடிய வருமானம் போன்றவைகளை கணக்கில் எடுத்து, தடங்கலின்றி திருப்பி செலுத்தக்கூடிய தொகையைத்தான் கடனாக பெறவேண்டும். உயர் கல்வி நிறுவனங்களின் தரத்திற்கு ஏற்றவாறுதான் வங்கிகள், கல்வி கடனுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயிக்கின்றன.
அம்மாதிரி கல்விக்கூடங்களில் சேருவதால், மாணவர்கள் வட்டித்தொகை செலவை மிச்சப்படுத்தலாம். கடனை திருப்பி செலுத்தும் காலம்வரை வங்கிகள், வட்டி மீது வட்டி (காம்பவுண்ட் இன்ட்ரெஸ்ட்) கணக்கிடாமல், தனி வட்டியைத்தான் (சிம்பிள் இன்ட்ரெஸ்ட்) கணக்கிடவேண்டும்.
சில வங்கிகள் கூட்டு வட்டியை வசூலிக்கின்றன என்ற புகார்கள் பதிவாகியிருப்பதால், வட்டித்தொகை சரியாக கணக்கிடப்பட்டிருப்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்வது அவசியம். வட்டி விகிதத்தில், மாணவிகளுக்கு உரிய 0.5 சதவிகித சலுகையை கேட்டுப் பெறவேண்டும். கடனுக்கான நிலையான வட்டி விகிதம் (ஃபிக்சட் இன்ட்ரெஸ்ட் ரேட்) மற்றும் மிதக்கும் வட்டி விகிதத்தில் (ஃப்ளோட்டிங் இன்ட்ரெஸ்ட் ரெட்) ஏதாவது ஒன்றை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, அவைகளின் நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
பொதுவாக வட்டி விகிதம் தொடர்ந்து உயர்வதற்கான சூழ்நிலையில் (வளர்பிறை காலம்) கடன் வாங்கும்போது நிலையான வட்டி முறையையும், குறைவதற்கான வாய்ப்புள்ள சூழ்நிலையில் (தேய்பிறை காலம்) மிதக்கும் வட்டி முறையையும் தேர்ந்தெடுக்கவேண்டும். தற்போது மாறிவரும் பொருளாதார சூழ்நிலையில், மிதக்கும் வட்டி முறையை தேர்ந்தெடுத்தால் வட்டி செலவு குறையும் வாய்ப்பு உள்ளது.
படிப்பு முடிந்து ஆறு மாதங்களுக்குள் வேலை கிடைக்கவில்லையென்றால், கல்வி கடன் பெற்றவர்கள் தாங்களாகவே வங்கிக்கு தகவல் தெரிவித்தால், கடன் தவணைகளை மறுசீரமைக்க அது உதவியாக இருக்கும். இதனால், வங்கிகளிடமிருந்து வசூல் நோட்டீஸ் பெறுவதை தவிர்க்கலாம்.
வேலை கிடைத்தும், ஏதாவது சில காரணங்களினால் தவணைகளை செலுத்த முடியவில்லையானால், கடனாளி வங்கியோடு கலந்து ஆலோசித்தால், அவர்களின் நம்பிக்கையை பெறுவதற்கும், பொறுமை காப்பதற்கும் அது வழி வகுக்கும். பெற்ற கடனை திருப்பி செலுத்தும் நோக்கத்தை வங்கிக்கு தெரியப்படுத்திவிட்டால், தவணைத் தொகையை குறைக்க அல்லது தள்ளிப்போட வங்கி அதிகாரிகள் நிச்சயம் உதவி புரிவார்கள்.
மற்ற கடன்களுக்கு பொருந்தும் வாராக்கடன்களை வரையறுக்கும் சில கடுமையான விதிமுறைகளிலிருந்து கல்வி கடன்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டால், கல்வி கடன் வழங்குதில் வங்கிகளுக்கு அந்த சலுகை ஒரு ஊக்க மருந்தாக செயல்படும்.

வங்கிகள் வழங்கும் கல்வி கடனுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், "கடன் உத்தரவாத நிதியகம்' அமைக்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், கல்விக் கடன் வழங்குவதில் வங்கிகளிடையே தற்போது நிலவும் தயக்கம் பெருமளவில் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive