கடும்
வெப்பம் தகிக்கும் இரும்பு கூடார வகுப்பறைகளில் அடைத்து வைத்து,
குழந்தைகளை வாட்டி வதைக்கும், கொடுமை அரசு துவக்க பள்ளி ஒன்றில் நடந்து
வருகிறது. இது குறித்து, பள்ளி கல்வி துறை அதிகாரிகளும் இதுவரை
கண்டுகொள்ளவில்லை.
அம்பத்துார் மண்டலம், 86வது வார்டில் உள்ள, மண்ணுார் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில், மாநகராட்சி துவக்க பள்ளி உள்ளது.
100
பேர் 59 ஆகினர் : இரண்டு ஆண்டுகளுக்கு முன், 100 மாணவ, மாணவியர் வரை
படித்த இந்த பள்ளியில், தற்போது 59 பேர் மட்டுமே படிக்கின்றனர். மேலும்,
28 குழந்தைகளுக்காக, இந்த பள்ளி அருகில், ஒரு அங்கன்வாடி மையமும்
இயங்குகிறது. ஏழை குழந்தைகள் படிக்கும் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம்,
கடந்த இரண்டு ஆண்டுகளாக அனல் தகிக்கும் இரும்பு கூடாரத்தில் இயங்கி
வருகின்றன. கடுமையான வெயிலின்போது, காற்றோட்ட வசதியின்றி மாணவ, மாணவியர்
மற்றும் ஆசிரியர்களின் உடல் நலம் மோசமாக பாதிக்கப்படுகிறது. அதை கண்ட,
அந்த பகுதியை சேர்ந்த சில அமைப்புகள், மின்விசிறிகள் வாங்கிக் கொடுத்து
உதவின. ஆனால், அடிக்கடி ஏற்படும் மின்தடையால், வெப்பத்தின் தாக்கத்தை தாங்க
முடியாமல், குழந்தைகள் தவிக்கின்றனர்.
இதுகுறித்து,
பெற்றோர் சிலர் கூறியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு முன் பள்ளி கட்டடம்
சேதமடைந்த பின், இரும்பு கொட்டகை அமைக்கப்பட்டது. இங்கு குடிநீர் வசதியும்
இல்லை. அருகில் உள்ள மசூதியில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது.கட்டடம்
கட்ட மண்பரிசோதனை நடந்தபோது, பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் வெளிவந்தன. இந்த
இடம் குளமாக இருந்து குப்பை கொட்டி மூடப்பட்டதால், கட்டடம் கட்டும்
திட்டம் கை விடப்பட்டதாக கூறப்பட்டது.பள்ளிக்கு முன், மாணவ, மாணவியரை
காயப்படுத்தும் வகையில், இரும்பு கம்பிகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு
உள்ளது. மேலும், பகுதிவாசிகள் அந்த வேலியை ஒட்டி வாகனங் களை நிறுத்தியும்,
குப்பை கழிவுகள் கொட்டியும் இடையூறு செய்கின்றனர்.இவ்வாறு பெற்றோர்
கூறினர்.
அதிர்ச்சி
வைத்தியம் : இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பள்ளி,
மாநகராட்சி எல்லையில் உள்ளது. பள்ளியின் பராமரிப்பு, நிர்வாக கட்டுப்பாடு
என, அனைத்து பொறுப்பும் திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலகத்திடம் உள்ளது.
எனவே, மாநகராட்சியிடம் முழுமையாக பள்ளியை ஒப்படைத்தால் மட்டுமே எங்களால்,
பராமரிக்க முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருவள்ளூர்
மாவட்ட கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது, அப்படி ஒரு பள்ளி இருக்கிறதா
என, அவர்கள் கேள்வி எழுப்பி, அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.இந்த
விஷயத்தில் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் நேரடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட
பள்ளிக்கு தனி கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...