நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்று இன்றுடன்
ஒரு மாதம் நிறைவடைகிறது. மோடி அரசின் நிர்வாகத் திறமை பற்றியும், அவரது
செயல்பாடுகள் பற்றியும் நடுநிலையாளர்கள், பொது மக்கள் மிகுந்த
எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதற்கு ஏற்றவாறு மோடியும் பல அதிரடி
நடவடிக்கைகள் மேற்கொண்டார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது அரசு துறை
உயர் அதிகாரிகள் சுணக்கத்துடன் செயல்பட்டதாக குறை கூறப்பட்டது.
மோடி முதலில் அதை நிவர்த்தி செய்யும் விதமாக
அரசு துறை அதிகாரிகள் அனைவரையும் வரவழைத்து அவர்களுக்கு ஆலோசனைகள்
வழங்கினார். மத்திய அரசின் திட்டங்கள் மக்களை விரைவாக சென்றடையும் வகையில்
செயல்பாடுகள் இருக்க வேண்டும், பைல்களை தேங்க விடாமல் உடனுக்குடன்
அவற்றுக்கு தீர்வு காண வேண்டும் என்றும், குறிப்பிட்ட நேரத்துக்கு அலுவலகம்
வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தார். மேலும்
அனைத்து துறை அதிகாரிகளும் தங்கள் துறை சார்ந்த புதிய திட்டங்கள் என்ன
தயாரித்து வைத்திருக்கிறார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும்
உத்தரவிட்டார். இதில் அதிகாரிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.
சம்பந்தப்பட்ட மத்திய மந்திரிகள் இல்லாமலேயே அவர்களது துறை சார்ந்த
அதிகாரிகளை பிரதமர் மோடி நேரடியாக அழைத்துப் பேசி ஆலோசனை வழங்கியது
மக்களிடம் வரவேற்பை பெற்றது. இதே போல் பொருளாதார வர்த்தகத்திலும் உயர்வு
ஏற்பட்டது. பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. தங்கம் விலையும்
சரிந்து வந்தது. அதே போல் விலைவாசி உயர்வும் கட்டுக்குள் இருந்தது. நாடு
வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைய வேண்டுமானால் அண்டை நாடுகளுடன் நட்புணர்வு
தேவை என்பதை புரிந்து கொண்ட மோடி தனது பதவி ஏற்பு விழாவுக்கு பாகிஸ்தான்,
இலங்கை உள்ளிட்ட அனைத்து பக்கத்து நாட்டு தலைவர்களையும் அழைத்தார்.
அத்துடன் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளையும் கவர்ந்தார்.
அந்த நாடுகள் மோடி அரசுடன் நட்புவை மேலும் வளர்த்துக் கொள்ள
விரும்புகின்றன. பக்கத்து நாடுகளுடனான நட்புக்கு எடுத்துக் காட்டாக முதலில்
அருகில் உள்ள பூடான் நாட்டுக்கு சென்று வந்தார். அடுத்து
வங்காளதேசத்துக்கு வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை அனுப்பி வைத்துள்ளார்.
ஒரு மாதத்தில் பல சாதனைகள் படைத்தாலும் சோதனைகளையும் சந்தித்தார். பதவி
ஏற்ற நாளில் உ.பி.யில் ரெயில்கள் மோதிக் கொண்டதில் 20 பேர் பலியானார்கள்.
அதன் பிறகு மத்திய மந்திரி கோபிநாத் முண்டேயின் மரணம் மோடியை மிகுந்த
அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாராளுமன்றத்தில் பிரதமராக நுழைந்த அவர்
முதலாவது கூட்டத்தில் முண்டே மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிலை ஏற்பட்டது.
மோடி பதவி ஏற்பதற்கு முதல் நாளில் ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம்
தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக
மீனவர்கள் நாள் தோறும் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படும் சம்பவம்
தொடர்ந்து நடக்கிறது. சமீபத்தில் ஈராக்கில் ஏற்பட்ட உள்நாட்டு போரில் 40
இந்திய தொழிலாளர்களும், 46 இந்திய நர்சுகளும் தீவிரவாதிகளால் கடத்தி சிறை
பிடிக்கப்பட்ட சம்பவம் மோடி அரசுக்கு பெரும் சோதனையாக அமைந்துள்ளது. ஈராக்
அரசாங்கத்துடன் பேசி அவர்களை மீட்க முடியாத சூழ்நிலையில் இந்தியர்களின்
உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தியர்கள் கடத்தப்பட்ட பிரச்சினை
இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளது. இந்த நிலையில் மோடி அரசின் முதல் மாத
நிறைவு நாள் இன்று பீகாரில் மாவோயிஸ்டுகள் ரெயில் கவிழ்ப்பில் ஈடுபட்டு
இருப்பதும் பெரும் சவாலாக அமைந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...