Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு அலுவலகங்களின் கோப்புகளை அந்நியர்கள் பராமரிக்க அனுமதிக்கக் கூடாது: உயர்நீதிமன்றம்

         முக்கியம் மற்றும் ரகசியமானதாகக் கருதப்படும் அரசு அலுவலகங்களின் கோப்புகள் அல்லது ஆவணங்களை வெளிநபர்கள் அல்லது அந்நியர்கள் பராமரிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

             மூன்று மாத ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வாகன ஆய்வாளர் தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. 

           இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பிரிவு அலுவலக வாகன ஆய்வாளர் ஏ.ஏ.முத்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: கடந்த 2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் மார்த்தாண்டம் பிரிவு வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு திடீரென ஆய்வு செய்தனர்.

         அப்போது, மூன்று பெண்கள் உள்பட மொத்தம் ஐந்து வெளியாட்கள் அலுவலகத்தில் பணிபுரிவதையும், அவர்கள் அலுவலக ஆவணங்களை கையாள்வதையும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அதனால், தமிழக அரசு ஊழியர்களின் நடத்தை விதியைப் பின்பற்றவில்லை எனவும், பணியில் நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படவில்லை எனவும் கூறி எனது மூன்று மாத ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ஆம் தேதி போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டார்.

         லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் திடீரென ஆய்வுக்கு வரும் போது நான் அலுவலகத்தில் இல்லை. மேலும், வெளிநபர்கள் அலுவலகத்தில் இருந்ததும் எனக்குத் தெரியாது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தாமதமாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது, நான் மண்டல போக்குவரத்து அதிகாரியாக பதவி உயர்வது பெறுவதை இந்தக் குற்றச்சாட்டு தடுக்கும். எனவே, போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

           இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பட்ட தாமதத்துக்கான காரணம் திருப்தி அளிப்பதாக உள்ளது. இது போன்ற தாமதம் நிர்வாகத்தில் இயல்பானது தான். குறிப்பாக குற்றம் சாட்டப்பட்டவர் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை.

           மனுதாரர் மீதான குற்றம் வெளிநபர்கள் அலுவலகத்தில் பணியாற்ற அனுமதித்தது தான். அரசு அலுவலகத்தில் அரசுப் பணியாளர்கள் மட்டும் தான் பணியாற்ற வேண்டும். வெளிநபர்களை அரசு அலுவலகத்தில் அனுமதிக்கக் கூடாது என்பது வழக்கமான ஒரு விஷயம் தான்.

      அது, அரசு அலுவலகம் தொடர்பான கோப்புகள் அல்லது ஆவணங்கள் மிகவும் புனிதமானவை எனபதை நினைவுபடுத்துவதற்காகத் தான். அவையனைத்தும் முறையாக பணியமர்த்தப்பட்ட நபர்கள் அல்லது ஊழியர்கள் தான் பராமரிக்க வேண்டும். வெளியாட்கள், அந்நியர்கள் ஆகியோர்களால் பராமரிக்க அனுமதிக்கக் கூடாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive