‘குடிசையில் வாழ்க்கை… கோபுரத்தில் மதிப்பெண்’
என்ற தலைப்பில் கடந்த இதழில் வெளியான கட்டுரையில், பன்னிரண்டாம் வகுப்புப்
பொதுத்தேர்வில் 1,139 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவி இசைவேணியைச்
சந்தித்திருப்பீர்கள்.
”11-ம் வகுப்புக்கு தனியார் ஸ்கூல்லதான்
சேருவேன்னு அடம்பிடிச்சேன். வசதி இல்லாத காரணத்தால அரசாங்க
பள்ளிக்கூடம்தான் வாய்ச்சது. ‘ம்… அரசாங்க பள்ளிக்கூடத்துல நல்லா
சொல்லித்தர மாட்டாங்களே’ங்கற நினைப் போடதான் ஸ்கூல்ல கால் வெச்சேன். ஆனா,
அடுத் தடுத்த நாட்கள்ல, அந்த நினைப்பு நொறுங்கிடுச்சி. அங்க இருந்த
ஆசிரியர்கள் எல்லாரும், பெற்றோர்கள் மாதிரியே அக்கறை காட்டினது… நெகிழ
வெச்சிடுச்சி’’ என்று அதில் சொல்லியிருந்தார் இசைவேணி.
அரசுப் பள்ளிகளின் மேல் நம்பிக்கை ஏற்படுத் தும் விதமாகவும், ஒரு சோறு பதமாகவும் இருக் கும் கரூர் மாவட்டம், புகளூர் அரசு பெண்கள்
மேல்நிலைப் பள்ளி குறித்து
‘கல்விச் சிறப்பிதழில்’ எழுதுவதற்காக தேடிச் சென்றோம். அமைதியான சூழல்,
ஆடம்பரமில்லாத வகுப்பறைகள், அன்பும், பணிவும் மிக்க ஆசிரியர்கள் என ஆரம்பமே
அசத்தல்தான்!
”தனியார் பள்ளிகளுக்கு நிகராக தேர்ச்சி காட்டியுள்ளீர்கள்!” என்று பள்ளித் தலைமை ஆசிரியை மணிமேகலையிடம் பாராட்டு தெரிவித்தோம்.
மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்த மணிமேகலை,
”தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்பிலேயே, 12-ம் வகுப்புப் பாடத்தை நடத்த
ஆரம்பித்துவிடுவார்கள். நாங்கள் அப்படிச் செய்வதில்லை. அந்தக்
கல்வியாண்டுக்கு தேவையான அடித்தளத்தை நன்றாகப் புகட்டுவோம். அப்படி
அடிப்படைகளை மனதில் நன்கு பதிய வைத்தால்தான், 12-ம் வகுப்புப் பாடங்கள்
எளிமையாக இருக்கும். காலையில் 9.30 மணிக்கு பள்ளி ஆரம்பம். மாலை 5.30 வரை
வகுப்புகள் நடக்கும். 12-ம் வகுப்புக்கு மட்டும் 8.30 முதல் 6 மணி வரை
நடக்கும். கோடையில் ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் கிடையவே கிடையாது.
தனியார் பள்ளி போல பிரைட், டல், ஆவரேஜ் என்று
மாணவர்களைப் பிரிக்க மாட்டோம். எல்லோருக்கும் பொதுவான பயிற்சிகள்தான்.
தேர்வு நேரங்களில் மட்டும் சனி, ஞாயிறு வகுப்புகள் உண்டு. முதல் நாள்
நடத்துவதை மறுநாளே தேர்வு வைத்துவிடுவோம். தினமும் ஸ்லிப் டெஸ்ட் உண்டு.
ஒரு வாரம் நடத்திய பாடங்களை, வீக்லி டெஸ்ட் வைப்பதுடன், உடனடியாக திருத்தி
ஒவ்வொருவரையும் தனியாக அழைத்து என்ன தவறு செய்துள்ளனர், எதனால் மதிப்பெண்
குறைந்துள்ளது என்பதையெல்லாம் தெளிவாக புரியவைத்து விடுவோம். வாரத்தில்
மூன்று முறை ஒரு மதிப்பெண் தேர்வு நடக்கும். பாடம் நடத்த முக்கியமான
வார்த்தைகளை அடிக்கோடிடச் சொல்வோம். முக்கியமாக புத்தகத்தை தவிர… நோட்ஸ்,
கைடு என்று வேறு எதையும் பயன்படுத்த அனுமதிப்பதே இல்லை. வாரத்தில் இரண்டு
நாட்கள் பிராக்டிகல்ஸ். எங்கள் உதவி இல்லாமல் அவர்களே சொந்தமாக இயங்க தயார்
செய்வோம்.
முந்தைய பொதுத்தேர்வுகளில் முதல் மதிப்பெண்கள்
எடுத்த மாணவர்களின் விடைத்தாள்களை ஜெராக்ஸ் எடுத்து, பேப்பர் பிரசன்டேஷன்
கற்றுக்கொடுப்போம். உயிரியல் பாடத்தில் வரக்கூடிய பொடானிக்கல்
வார்த்தைகளைத் திரும்ப திரும்பக் கூறி, மாணவர்களின் நினைவில் நிறுத்துவோம்.
இதுபோன்று பல பயிற்சிகள் கொடுப்பதால்தான் எங்கள் பள்ளியில் பலரும்
1000-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் இது இங்கே
வாடிக்கை!” என்று வார்த்தைக்கு வார்த்தை ஆச்சர்யம் கூட்டினார் மணிமேகலை.
1,139 மதிப்பெண்கள் பெற்ற இசைவேணிக்கு
மட்டுமல்ல… பள்ளியில் அனைத்து மாணவிகளுக்கும் பிரியமான ஆசிரியை என்றால்,
அது… வேதியியல் ஆசிரியை மோகனசுந்தரி. பெரும்பாலான மாணவிகள் ஆர்வத்துடன்
அந்தந்த பாட ஆசிரியர்களை அணுகி வினாத்தாள்களை பெற்று, மோகனசுந்தரியின்
வீட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்வு எழுதுவார்களாம்.
”என் கணவர் வேலை பார்க்கிற நடையனூர்ல இருக்கிற
அரசு உதவி பெறும் ஸ்கூல்லதான் டென்த் வரைக்கும் படிச்சா இசைவேணி. 454
மதிப்பெண்கள் வாங்கினா. மார்க் குறைஞ்சிடுச்சுனு வருத்தப்பட்டவ, பிரைவேட்
ஸ்கூல்லதான் சேர்வேன்னு அடம் பிடிச்சா. இந்த விஷயம் எனக்கு வரவும், நேரடியா
அந்தப் பொண்ணு வீட்டுக்கு போய் பேசி, எங்க ஸ்கூல்ல சேர்த்துக்கிட்டேன்.
விருப்பமே இல்லாம வந்தவளோட எண்ணம் புரியவும், கூடுதல் கவனம் எடுத்தேன்.
தினமும் ஸ்கூல் முடிஞ்சதும் வீட்டுக்கு வரச்சொல்லி, டெஸ்ட் வெச்சேன்.
ஞாயிற்றுக்கிழமையெல்லாம் எங்க வீட்லதான் இருப்பா. சாப்பாடு எல்லாம்
இங்கதான். தூங்க மட்டும்தான் வீட்டுக்கு போவா. இப்போ நல்ல மார்க்
வாங்கிட்டா. அவளைவிட எனக்கு சந்தோஷமா இருக்கு!” என்று நெகிழ்ச்சியுடன்
சொன்னார் மோகனசுந்தரி.
சாதனை மாணவிகளை உருவாக்கும் அரசுப் பள்ளிகளின் முயற்சிகள் தொடரட் டும்!
நன்றி விகடன்
வாழ்த்துக்கள்.அரசுப்பள்ளிகளையும்,அரசு ஆசிரியர்களையும் குறைகூறிக்கொண்டேயிருக்கும் சமூகத்தில் இப்படியொரு சாதனை பாராட்டுக்கள்.அப்பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரிய பெருமக்கள் மற்றும் தலைமையாசிரியர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை.
ReplyDeleteI REALLY APPRECIATE THE GOVERNMENT SCHOOL TEACHERS.
ReplyDeleteS i too they are welcomed persons I congrats all of them
ReplyDeleteMY BEST WISHES TO HM AND ALL TEACHERS AND STAFF AND STUDENDS OF GOVT GIRLS HSS, PUGALUR .
ReplyDeleteANAIVARUKKAM EN INIAYA VAZHTHUKKAL
ReplyDeleteதனியார் பள்ளிகளின் கோழி பண்ணை கல்வி வேண்டாம் ... அரசு பள்ளிகளே.சிறந்ததாகும் .......
ReplyDeletesaathitha aasiriargalukku vaalthukkal.. Idhanai veli kondu vandhA pathirikaiku nandri aanalum arasu palli maanavargalin porieal matrum maruthuva kanavukalai neraivetra arasu ida othukkedu kodukka vendum
ReplyDelete