பள்ளி மாணவர்களுக்கான புத்தகப் பைகள் மற்றும் காலணிகளின்
(ஷூ) விற்பனை சூடுபிடித்துள்ள நிலையில்,
இவற்றின் விலை 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வண்ண வண்ண சீருடைகள் அணிந்து
பள்ளி செல்லும் பிள்ளைகளின் அழகுக்கு, அவர்கள் அன்றாடம் தோளில்
சுமந்து செல்லும் புத்தகப் பைகளும், காலணிகளும் அணி சேர்ப்பவை எனலாம்.
கோடை விடுமுறை முடிந்து இன்னும் சில நாள்களில்
பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், தியாகராய நகர், புரசைவாக்கம், பெரம்பூர்,
மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள
வர்த்தக நிறுவனங்களில் பள்ளி மாணவர்களுக்கான புத்தகப்
பைகள், காலணிகளின் விற்பனை சூடு பிடிக்க
தொடங்கி உள்ளது.
வண்ண வண்ண பைகள்: மழலையர்
வகுப்பு(எல்.கே.ஜி.),
ஆரம்பக் கல்வி, இடைநிலை கல்வி,
மேல்நிலைக் கல்வி என பருவம்வாரியாக
பள்ளி மாணவர்களின் தேவைக்கேற்ப 30க்கும் மேற்பட்ட ரகங்களில்
புத்தகப் பைகள் சந்தையில் கொட்டிக்
கிடக்கின்றன. பெரும்பாலும் கருப்பு நிற பின்னணியில்,
நீலம், மஞ்சள், சிவப்பு, பச்சை,
ஊதா உள்ளிட்ட நிறங்களின் கலவையில் கண்ணைப் பறிக்கும் வகையில்
கிடைக்கும் இந்த பைகளின் விலை,
அவற்றை தயாரிக்கும் நிறுவனம், தயாரிக்க பயன்படுத்தப்படும் துணி வகை ஆகியவற்றுக்கேற்ப,
குறைந்தபட்சம் ரூ.400 ல் இருந்து
ரூ.2000 வரை விற்கப்படுகிறது.
காலணி தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ஒரு
நிறுவனம், ரூ. 250 ல் இருந்து
ரூ. 1500 வரை புத்தக பைகளை
விற்கிறது. இந்தப் பைகளின் வெளிப்புறத்தில்
மிக்கி மெüவுஸ், டோரா
போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களின் உருவங்கள் அச்சிடப்பட்டிருப்பது மழலையர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
தியாகராய
நகரில் இயங்கி வரும் பிரபல
வர்த்தக நிறுவனத்தின் விற்பனை பிரிவு நிர்வாகி
ஒருவர் கூறும்போது, புத்தகப் பைகளின் விற்பனை தற்போது
சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இன்னும்
சில நாள்களில் பள்ளிகள் திறக்க உள்ளதால் இந்த
வார இறுதியில் ( சனி, ஞாயிறு) இவற்றின்
விற்பனை உச்சத்தை அடையும் என எதிர்ப்பார்க்கிறோம்.
புத்தகப் பைகளை தயாரிக்க பயன்படும்
மூலப்பொருள்களின் விலையேற்றம், தையல் கூலி உயர்வு
போன்ற காரணங்களால் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது
இந்த ஆண்டு புத்தகப் பைகளின்
விலை 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது
என்றார் அவர்.
கண்கவர்
காலணிகள்: புத்தகப் பைகளை போன்றே, மாணவர்களுக்கு
ஏற்ப, செல்குரோ, கேன்வாஸ், லேஸ் என பல்வேறு
வகை காலணிகள் (ஷூ) சந்தையில் கிடைக்கின்றன.
தோல் மற்றும் தோல் அல்லாத
மூலப்பொருள்களைக் கொண்டு வடிவமைக்கப்படும் இந்த
காலணிகள் ரூ.599 முதல் ரூ.1499
வரை விற்கப்படுகின்றன. இவற்றின் விலையும் முந்தைய ஆண்டை விட
20 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரபல நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களின் படங்கள் இடம்பெறாத நோட்டு
புத்தகங்கள்: பெரும்பாலான தனியார் பள்ளிகளின் நிர்வாகமே,
தங்கள் மாணவர்களுக்கு ஒரு கல்வியாண்டுக்குத் தேவையான
அனைத்து நோட்டுப் புத்தகங்களையும் வழங்கிவிடுவதால், வெளிச்சந்தையில் பள்ளி நோட்டுப் புத்தகங்களின்
விற்பனை வெகுவாக குறைந்துவிட்டது. தற்போது
சந்தையில் சொற்ப எண்ணிக்கையில் விற்கப்படும்
நோட்டுப் புத்தகங்களின் முன் மற்றும் பின்
அட்டையில், பிரபல நடிகர்கள், கிரிக்கெட்
வீரர்களின் படங்கள் இடம்பெறவில்லை. மாறாக,
இயற்கை காட்சிகள், கடல்வாழ் உயிரினங்கள், வண்ண பறவைகள், வனவிலங்குகள்,
மழலையரின் படங்கள் என மனதுக்கு
இதம்தரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மூலப்பொருள்கள்
விலை உயர்வால், கடந்த ஆண்டு ரூ.
32 க்கு விற்கப்பட்ட 160 பக்கங்கள் கொண்ட முழுநீள நோட்டு
புத்தகம், தற்போது ரூ. 40 க்கும்,
ரூ.25 க்கு விற்கப்பட்ட 172 பக்கங்கள்
கொண்ட அரை நீள நோட்டு
புத்தகம் ரூ.30 க்கும் விற்பனை
செய்யப்படுகின்றன.
பிளாஸ்டிக்குக்கு குறையும் மவுசு: பிளாஸ்டிக் பொருள்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ளதால் பள்ளிச் செல்லும் தங்கள் பிள்ளைகளுக்கு பிளாஸ்டிக் அல்லாத மூலப்பொருள்களில் தயாரிக்கப்படும் வாட்டர் பேக், லஞ்ச் பாக்ஸ்களை வாங்க தொடங்கி உள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...