வளர் இளம் பருவத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், தங்களின் பாதையை நல்வழிப்படுத்த, அரசுப்பள்ளிகளில் துவங்கப்பட்ட மாணவர்களுக்கான ஆலோசனைக் குழு, தற்போது செயல்பாடின்றி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
மாணவர்கள் பல்வேறு காரணங்களினால் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். இதன் வெளிப்பாடு கல்வியில் பின்னடைவு, தன்னை சுற்றியுள்ளவர்களின் மீது வெறுப்பை ஏற்படுத்தி தீய செயல்களை செய்யத் துாண்டுகிறது. குறிப்பாக வளர் இளம் வயதில் இருக்கும் 9,10,11,12 வகுப்புகளிலுள்ள மாணவ, மாணவியர் தங்களின் எதிர்கால வாழ்விற்கு ஏற்ற வழியைக் காட்டிலும், தீய பாதையாக இருந்தாலும் தங்களுக்கு பிடித்த பாதையில் செல்லவே விரும்புகின்றனர்.இதற்கு காரணம் மாணவர்கள் மனதளவில், நிலையாக ஓரு முடிவு எடுக்க தயாராக இல்லை என்பது மட்டுமே. மாணவர்களின் இந்நிலையால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தற்போது அதிகரித்துள்ளது.
இதை தவிர்க்கவே கல்வித்துறை, ஒவ்வொரு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும் என கடந்தாண்டு உத்தரவிட்டது. இக்குழுவில், பள்ளித்தலைமையாசிரியர் தலைவராகவும், பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியர்கள் இருவரும், ஆண்கள் மற்றும் இருபாலார் பள்ளிகளில் இருபால் ஆசிரியர்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர். பள்ளிகளின் சார்பில் ஆலோசனை நிபுணர் ஒருவரை நியமித்து, மாதம் ஒருமுறை மாணவர்களுக்கு, தங்களின் பிரச்னைகளை எதிர்கொள்வது, சுயசிந்தனையை வளர்த்துக்கொள்வது, தன்னம்பிக்கை வளர்ப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கும்படி அரசு அறிவித்ததது.
தற்போது இக்குழுவினை செயல்படுத்த, பெரும்பாலான பள்ளிகள் மறந்துவிட்ட நிலை உருவாகியுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களை வாழ்க்கையில் மேம்பட பல திட்டங்களை கல்வித்துறை செயல்படுத்துகிறது. இருப்பினும், அத்திட்டங்கள் முழுமையாக செயல்படுகிறதா என்பதை கவனிக்க தவறுகிறது என புகார் எழுந்துள்ளது.உடுமலை, சுற்றுப்பகுதியில் 27 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், பல ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். தனித்திறன்களை வளர்ப்பதில், கல்வியில் தேர்ச்சி, விளையாட்டு துறையில் வெற்றி உள்ளிட்ட சாதனைகளை பல பள்ளிகள் படைத்து வருகின்றன.
சில பள்ளிகளில் உள்ள வசதி குறைபாடுகள், ஆசிரியர் பற்றாக்குறை, விளையாட்டுகளுக்கு முன்னுரிமை வழங்காதிருப்பது போன்றவற்றால் மாணவர்களின் திறமை முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த, கல்வித்துறை துவங்கிய மாணவர்களுக்கான ஆலோசனைக்குழு அமைக்கும் திட்டம் செயல்பாடின்றி திட்டமாக மட்டுமே உள்ளதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் நலன்கருதி கல்வித்துறை வெளியிடும் அனைத்து திட்டங்களும் முறையாக செயல்படுத்துவதில், பள்ளிகள் அலட்சியம் காட்டி வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை கல்வியாளர்கள் கூறியதாவது: அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. தற்போது நிகழ்ந்து வரும் குற்றங்கள் பெரும்பாலும் பள்ளி மாணவர்களை சுற்றியே நிகழ்கிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு, மாணவர்களுக்கான ஆலோசனைக் குழு பள்ளியில் துவங்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டது. மாணவர்களை நல்வழிபடுத்தும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட இக்குழு, மாநில அளவில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் மட்டுமே மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. அதிலும், குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே. மேலும், கடந்த ஆண்டு துவங்கப்பட்ட இக்குழு, இந்த ஆண்டு நடைமுைறயில் உள்ளதா என்பதே பல பள்ளிகளுக்கு சந்தேகமாக உள்ளது. இதுபோன்ற திட்டங்கள் முறையே செயல்படுகிறதா என கல்வித்துறை ஆய்வு நடத்தி, இத்திட்டங்களின் மூலம் மாணவர்கள் முழுமையாக பயனடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.கல்வி அதிகாரி என்ன சொல்கிறார்? திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆனந்தி கூறுகையில், ''அனைத்து பள்ளிகளிலும் இக்குழு செயல்பட்டு வருகிறது. குழுவின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை அவ்வப்போது பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும். இதனை செயல்படுத்தாத பள்ளிகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...