தனக்கென்று தனி உலகத்தை ஏற்படுத்திக் கொண்டு, அதில் சுகமாக
பயணிப்பவர்கள் தான் ஆட்டிசம் குழந்தைகள். தற்போது ஆட்டிசம் குழந்தைகள்
அதிகரித்து வருவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எதனால் வருகிறது
ஆட்டிசம்? மருந்துகளின் மூலம் குணப்படுத்த முடியுமா? போன்ற கேள்விகளுக்கு
விடையளிக்கின்றனர் மனநல மற்றும் உளவியல் நிபுணர்கள்.
விக்ரம் ராமசுப்ரமணியன், மனநல மருத்துவர்: ஆட்டிசம்
குழந்தைகள் பிறப்பதற்கு இதுதான் காரணம் என்று எதுவும் இல்லை. மூளையின்
ரசாயன மாற்றங்கள், மரபணு கோளாறு, சுற்றுச்சூழல்... இப்படி உலகளவில்
எடுத்துச் சொல்லும் தியரி தான் உள்ளது. பிறந்த ஓராண்டு வரை சாதாரண
குழந்தைகளை போல் தான் இருப்பர். பெற்றோர் கண்டறிவது கடினம்.
இவர்களது உலகம் தனியானது. யாருடனும் கலந்து பேச
மாட்டார்கள். தானாக விளையாடுவர். இப்படித்தான் என்று, தனக்கென ஒரு
திட்டமிடல் வைத்திருப்பர். ஏசி காற்று கூட அவர்களை பரவசப்படுத்தும்.
வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது, கத்தும் போது தான்,
வித்தியாசமாகத் தோன்றும்.
ப்ரீ கேஜி வகுப்பில் சேர்க்கும் போது ஆசிரியர்கள், இந்த
வித்தியாசத்தை கண்டறியலாம். மற்ற குழந்தைகளுடன் சேராமல், தனியாக
உட்கார்ந்திருப்பர். இந்த பிரச்னையை புரிந்து கொள்ளாமல், பெற்றோர் அடிப்பது
தான் கொடுமை. இது நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள். இதற்கு மருந்துகள் பயன்
தராது. உளவியல் ரீதியாக, நடைமுறை சார்ந்த பயிற்சி மூலமே இயல்பு நிலைக்கு
மாற்ற முடியும்.
ஆட்டிசம் குழந்தைகளில் 70 சதவீதம் பேர் லேசான மன நல
குறைபாட்டுடன் இருப்பர். கவனக்குறைவும் இருக்கும். புரிந்துகொள்ளும்
சக்தியும் குறைவாக இருக்கும். ஆனால் அவர்களுக்கு பிடித்தமான விஷயத்தில்
அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவர். அது இசையாக இருக்கலாம், பாட்டு, ஓவியம்...
எந்தத் திறமையாகவும் இருக்கலாம். அடித்து திருத்த முடியும் என நினைக்காமல்,
சிறப்புப் பயிற்சியின் மூலம் மாற்றங்களை கொண்டுவரலாம்.
பெற்றோரின் ஒத்துழைப்பு அவசியம்
ஆட்டிசம் பயிற்றுனர் ராணி சக்ரவர்த்தி: ஒரு வயது ஆன
நிலையில், பெயரைச் சொல்லி கூப்பிட்டால், திரும்பி பார்க்க மாட்டார்கள்.
மொபைல் போன், டிவி, வாகன சத்தத்திற்கு திரும்பி பார்ப்பர். ஆனால் சில
பெற்றோர்கள், பிள்ளைகள் நம்மிடம் தான் இப்படி திமிராக நடந்து கொள்கின்றனர்
என நினைத்து, அடிக்கின்றனர், அலட்சியப்படுத்துகின்றனர்.
கண்ணை நேராக பார்ப்பதில்லை. மனிதர்களை விட விளையாட்டுப்
பொருட்களின் மீது அதிக ஆர்வம் ஏற்படும். டிவி மிகவும் விரும்புவர்.
அதிகபட்சமாக மூன்று வயதுக்குள் ஆட்டிசம் இருப்பதை கண்டறிந்தால், தொடர்ந்து
ஓராண்டு பயிற்சியின் மூலம், மற்ற மாணவர்களைப் போல மாற்றிவிடலாம். அதற்கு
மேல் ஆகும் போது, அவர்களை மாற்றுவது கடினம்.
வளர்ந்த நிலையில் தானாக எந்த வேலையும் செய்யத் தெரியாது.
கையை கடிப்பது, பொருட்களை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர்.
இக்குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு விஷயத்தில், அளவிட இயலாத திறமைகள்
பொதிந்திருக்கும். அதைக் கண்டறிவது தான், நம் திறமை. வெளியில் பயிற்சி
கொடுப்பதோடு வேலை முடிந்தது என நினைத்தால், முழுமையாக குணப்படுத்த
முடியாது.
வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டு, பெற்றோர் முழுமையாக
பயிற்சி தரவேண்டும். சிரிக்க வைப்பது, வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வது,
மணலில் விளையாடுவது, தண்ணீரில் நீந்துவதென... அவர்களின் புற,
அகச்சூழ்நிலையை சந்தோஷமாக வைத்துக் கொள்வது அவசியம். டிவியை முற்றிலும்
தவிர்ப்பது நல்லது.
உலகளவில் ஆயிரத்தில் ஒருவருக்கு ஆட்டிசம் என்ற நிலை மாறி,
தற்போது நூறில் ஒருவராக அதிகரித்து விட்டது. இந்தியாவில் அதற்கான
புள்ளிவிபரங்களே இல்லை. வரும் பத்தாண்டுகளில் ஆட்டிசம் குறைபாடுடைய
குழந்தைகளின் எண்ணிக்கை, அதிகரிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக
கிராமப்புறங்களில், அதிகம் படிக்காத நகர்ப்புற பெற்றோர்களிடம், இப்பிரச்னை
குறித்த விழிப்புணர்வு இல்லை. ஆட்டிசம் பிரச்னையை, முழுமையாக அனைத்து
இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...