அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், அதிக எண்ணிக்கையிலான பேராசிரியர் பதவிகள் காலியாக உள்ளதால், மாணவ மாணவிகளின் உயர்கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகளை, அரசு தாராளமாக வழங்கி வருகிறது. புத்தகம், நோட்டுப் புத்தகம், சீருடை, காலணி, புத்தகப்பை, சைக்கிள் என, அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், மாணவர்களின் பசியை போக்கும் வகையில், மதிய உணவும் வழங்கப்பட்டு வருகிறது. நிறுத்தப்பட்டுள்ள, ரொட்டி பால் திட்டமும் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது.
அரசு பள்ளிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் சூழ்நிலையில், அரசு கல்லூரிகளின் நிலைமை கவனிப்பாரின்றி, கவலைக்கிடமாக உள்ளது.தனியார் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவ மாணவிகளுக்கு, ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாயை கட்டணமாக அரசு வழங்கி வருகிறது. ஆனால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கண்டு கொள்ளாத நிலையே உள்ளது.புதுச்சேரியில், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகள் செயல்படுகின்றன.காரைக்காலில் இரண்டு கல்லூரிகளும், மாகி, ஏனாம் பகுதிகளில் தலா ஒரு கல்லூரியும்அமைந்துள்ளன. அதாவது, மாநிலம் முழுவதும் ஏழு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன.இந்த கல்லூரிகளில் 625 பேராசிரியர் பதவிகள் உள்ளன.
இவற்றில், 140க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பதவிகள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், அரசு கல்லூரிகளின் அடிப்படையே ஆட்டம் கண்டுள்ளதால்,இங்கு படிக்கும் மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது.உதாரணமாக, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில், இயற்பியல் பாடப் பிரிவுக்கு இரண்டு பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர். முதலாமாண்டில் ஆரம்பித்து மூன்றாம் ஆண்டு வரை படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு, இருவரே பாடம் நடத்தும் சூழல் உள்ளது. இரண்டு பேராசிரியர்களில் ஒருவர், காரைக்காலுக்கு மாற்றலாகி சென்றுவிட்டதால், நிலைமை மேலும் சிக்கலாகி உள்ளது.
இந்த நிலைக்கு, பேராசிரியர் பதவிகள் காலியாகும்போது, காலத்தோடு நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காதது, மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்புவதில் நடைமுறை தாமதம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மீது, அரசு அக்கறை காண்பிக்காதது போன்றவையே காரணமாகும்.காரைக்கால், மாகி, ஏனாம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள கல்லூரிகளில், சில பாடப்பிரிவுகளில், விரல்விட்டு எண்ணக்கூடிய மாணவர்களே படிக்கின்றனர். ஆனால், அங்கு பேராசிரியர்களை அனுப்ப வேண்டிய கட்டாயம் உள்ளதாலும் பற்றாக்குறை ஏற்படுகிறது.அரசு கலை மற்றும் அறிவியல் படிக்கும் மாணவ மாணவிகளின் நலன் கருதி, பேராசிரியர் பணியிடங்களை, போர்க்கால அடிப்படையில் நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலவச கம்ப்யூட்டர் செயல் வடிவம் பெறுமா?
கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்து இருந்தார். ஆனால் இலவச கம்ப்யூட்டர் அறிவிப்பு இதுவரை செயல் வடிவம் பெறவில்லை.தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், புதுச்சேரியிலும் கல்லூரி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர்களை இலவசமாக வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...