பிளஸ்
2 மாணவர்களுக்கு, இணையதளம் வழியாக, விடைத்தாள் நகல் அளிப்பதில், பெரும்
குளறுபடி ஏற்பட்டுள்ளது. உரிய மாணவரின் விடைத்தாள் நகலுக்குப் பதில், வேறு
மாணவர்களின் நகல், இணையதளத்தில் வெளியிடப்பட்டதால், மாணவர்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களில், 80 ஆயிரம் பேர், விடைத்தாள் நகல் கேட்டு, தேர்வுத் துறையிடம் விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கான விடைத்தாள் நகல், ஜூன் 4ல், இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதில், பல மாணவர்களுக்கு, விடைத்தாள் நகல்கள் மாறி உள்ளன. இணையதளத்தில்,
விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த மாணவர்கள், வேறு விடைத்தாள் நகல்,
'அப்லோட்' செய்திருப்பதை கண்டு, அதிர்ச்சி அடைந்தனர். இதனால்,
பாதிக்கப்பட்ட ஏராளமான மாணவர்கள், விடைத்தாள் நகல், மறு மதிப்பீட்டு பணிகள்
நடக்கும், சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியை, நேற்று
முற்றுகையிட்டனர். முகாமில் இருந்த அதிகாரிகள், மாணவர்களுக்கு சரிவர பதில்
அளிக்கவில்லை என, கூறப்படுகிறது.
இதுகுறித்து,
சென்னை, ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த பெற்றோர், பத்மநாபன் கூறியதாவது: என்
மகன், தீபக் ஆனந்த், 1,085 மதிப்பெண் பெற்று உள்ளார். தேர்வு முடிவை
பார்த்ததும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில், 111 மதிப்பெண் வந்துள்ளதாக
தெரிவித்தார். 199 மதிப்பெண் கிடைக்கும் என, எதிர்பார்த்திருந்த நிலையில்,
111 மதிப்பெண் வந்ததைக் கண்டு, நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். விடைத்தாள்
நகலுக்கு விண்ணப்பித்து, இம்மாதம், 4ம் தேதி, விடைத்தாள் நகலை பதிவிறக்கம்
செய்தபோது, என் மகனின் விடைத்தாள் நகலுக்குப் பதில், வேறு யாரோ ஒரு
மாணவரின் விடைத்தாள் நகலை, தேர்வுத் துறை அதிகாரிகள் அளித்துள்ளனர். இது
குறித்து, இரு நாட்களாக, தேர்வுத் துறை அலுவலகம், இந்த பணிகள் நடக்கும்,
எழும்பூர் முகாமிற்கும் அலைந்து வருகிறேன். இதுவரை, எந்த பதிலும்
கிடைக்கவில்லை. எழும்பூர் முகாம் அலுவலகத்தில், மனு கொடுத்திருக்கிறோம்.
விரைவில், என் மகனின் விடைத்தாள் நகலை, இணையதளத்தில் வெளியிடுவதாக கூறி
உள்ளனர். ஆனால், மறு மதிப்பீடு செய்ய, வரும், 9ம் தேதி கடைசி நாள் என்றும்
அறிவித்துள்ளனர். இதனால், பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். இவ்வாறு,
பத்மநாபன் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து, தேர்வுத் துறை வட்டாரம்
கூறுகையில், 'வரும், 8ம் தேதிக்குள், சரியான விடைத்தாள் நகலை, இணையதளத்தில்
வெளியிட்டு விடுவோம். எனவே, 9ம் தேதி, மறு மதிப்பீட்டிற்கு, விண்ணப்பம்
செய்வதில், எந்த பிரச்னையும் வராது' என, தெரிவித்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...