பிளஸ் 1 பாட புத்தகங்கள் விற்பனைக்கு வராததால் மாணவர்கள் அவதி: 16ம் தேதி வகுப்புகள் துவங்குவதால் 'டென்ஷன்!'
வரும், 16ம்
தேதி, பிளஸ் 1 வகுப்புகள் துவங்கும் நிலையில், பாட புத்தகங்கள்,
விற்பனைக்கு வராததால், மாணவ, மாணவியர், அவதிப்பட்டு வருகின்றனர். ஏராளமான
மாணவர்கள், தினமும், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள பாடநூல் கழக அலுவலகத்திற்கு
வந்து, ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
ஜூன் 16ல்...:
கோடை விடுமுறைக்குப் பின், கடந்த, 2ம் தேதி, பள்ளி கள் திறக்கப்பட்டன.
பிளஸ் 1 வகுப்புகள் தவிர, மற்ற அனைத்து வகுப்புகளும், நடந்து வருகின்றன.
'பிளஸ் 1 வகுப்பு மட்டும், வரும், 16ம் தேதி துவங்கும்' என, பள்ளி கல்வித்
துறை அறிவித்துள்ளது. பள்ளிக்குச் செல்ல, இன்னும், ஐந்து நாட்களே உள்ள
நிலையில், பாட புத்தகங்கள் கிடைக்காமல், மாணவர்கள் அவதிப்பட்டு
வருகின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, இலவச பாட
புத்தகங்கள், ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டன. இந்த பள்ளிகளில், பிளஸ் 1
சேரும் மாணவர்களுக்கு, வரும், 16ம் தேதி, பாட புத்தகங்கள் வழங்கப்படும்.
தனியார் பள்ளிகள், 'மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மூலமாக, பாட நூல்
குடோன்களில் இருந்து, தேவையான அளவிற்கு, பிளஸ் 1 பாட புத்தகங்களை
பெற்றுக்கொள்ளலாம்' என, பாடநூல் கழகம், அறிவுறுத்தி உள்ளது. இதை பின்பற்றி,
பல தனியார் பள்ளிகள், பிளஸ் 1 புத்தகங்களை பெற்றுள்ளன. ஆனால், பெரும்பாலான
பள்ளி நிர்வாகங்கள், மாணவர்களே வாங்கிக் கொள்ள அறிவுறுத்தி உள்ளன. இதனால்,
பாட புத்தக கடைகளுக்கும், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள பாடநூல்
அலுவலகத்திற்கும், படையெடுத்தபடி உள்ளனர். ஆனால், எங்கும், பிளஸ் 1 பாட
புத்தகங்கள், விற்பனைக்கு வரவில்லை. நேற்று, ஏராளமான மாணவ, மாணவியர், பிளஸ்
1 புத்தகம் பெற வந்து, ஏமாற்றத்துடன் சென்றனர்.
'கவுன்டர்'களில்...:
இது
குறித்து, பாடநூல் கழக செயலர், அன்பழகன் கூறியதாவது: அரசு பள்ளிகளுக்கு,
இலவசமாக, பாட புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. தனியார் பள்ளிகள், தேவையான
புத்தகங்களை, பாடநூல் கழக குடோன்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என,
தெரிவித்துள்ளோம். இதன்பின், புத்தகங்கள், விற்பனை செய்ய வேண்டிய அவசியமே
எழவில்லை. எனினும், சில பள்ளிகள், மாணவர்களையே, புத்தகங்கள் வாங்கிக் கொள்ள
வலியுறுத்துகின்றன. இதை கருத்தில் கொண்டு, வரும், 16ம் தேதிக்குப் பின்,
பாடநூல் கழக, 'கவுன்டர்'களில், பிளஸ் 1 பாட புத்தகங்கள் விற்பனை
செய்யப்படும். விலையில், எந்த மாற்றமும் கிடையாது. கடந்த ஆண்டு விலை தான்,
இந்த ஆண்டும் உள்ளது. இவ்வாறு, அன்பழகன் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...