தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து சுயநிதி கல்வி
நிறுவனங்களிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அரசாணைப்படி இலவச
கல்வி வழங்க உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இலவச கல்வி
சேர்க்கையில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் விபரம் குறித்து, அனைத்து
பள்ளிகளிலும் வெளிப்படையாக, பலகைகளில் தவறாமல் எழுதி வைக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும் என, தஞ்சை கலெக்டர் சுப்பையனிடம், இந்து மக்கள் கட்சி
மாநில செயலாளர் கணேஷ்பாபு மனு அளித்தார்.
அனைத்து சுயநிதி கல்வி நிறுவனங்களிலும்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இலவச கல்வியை அளிக்க அரசாணை மூலம்
வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சில சுயநிதி கல்வி நிறுவனங்களில்
இலவச கல்வி திட்டத்தில் மாணவ, மாணவியரை சேர்க்காமல், புறக்கணிப்பதாக
குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, அரசாணைப்படி இலவச கல்வி வழங்க,
காலதாமதமின்றி உரிய நடவடிக்கையையும், கண்காணிப்பையும் தமிழக அரசு மேற்கொள்ள
வேண்டும் என, பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில்,
குறைதீர்க்கூட்டத்தில் கலெக்டர் சுப்பையனிடம் இந்து மக்கள் கட்சி மாநில
செயலாளர் கணேஷ்பாபு அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர், கிறிஸ்தவ ஆதிதிராவிட பழங்குடியினருக்கு எவ்வித
கல்வித்தொகையும் கேட்காமல், மாணவர்களை இலவசமாக சேர்க்க வேண்டும் என, தமிழக
அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ், கடந்த 2012
செப்., 11ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து
சுயநிதி கல்லூரிகள், சிறுபான்மையினர் கல்வி கூடங்களில் மாணவர் சேர்க்கை
நடக்கவும், இந்த சேர்க்கை குறித்து கல்லூரி பெயர் பலகைகளில் இலவச கல்வி
அளிக்கும் விபரத்தை வெளியிட செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு,
அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...