Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கிராமம் கிராமாக அலையும் ஆசிரியர்கள்..


         அரசுப்பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் கிராமம் கிராமாக ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் அலைந்து திரிந்துபெற்றோர்களையும்மாணவர்களையும் அணுகி வருகின்றனர்.
 
           மேலும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக புதுகை நகரில் பல்வேறு பகுதிகளில் வைத்துள்ள நூற்றாண்டைக் கடந்த அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு பதாகைகள் அனைவரையும் வியப்புடன் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.அரசுப்பள்ளிகளின் கல்வித்தரமும், தேர்ச்சி விகிதமும் தனியார் மற்றும் சுயநிதிப்பள்ளிகளைவிட குறைவாகவே இருப்பதால் தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளையே பெற்றோர்கள் நாடி தங்களது குழந்தைகளை சேர்ப்பது தொடர்கதையாகும்.

      இதன் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை மறுப்பதற்கில்லை.இந்த நிலையில், நல்ல ஊதியம், பணிப்பாதுகாப்பு, சங்க நடவடிக்கைகள் என பல்வேறு உரிமைகளைப் பெற்றுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்து கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளதையும் மறுக்க முடியாது.இந்த நிலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தேர்ச்சி விகிதம் குறைந்து போவதுடன், மாணவர்களின் சேர்க்கை விகிதமும் அதளபாதாளத்துக்குச்சென்றது. இதனால், பள்ளிகளில்பணியாற்றும் ஆசிரியர்களின் விகிதத்துக்கு ஏற்ப மாணவர்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டதுடன், ஆசிரியர் பணிடமும் வேறு பள்ளிகளுக்குச் செல்லும் அவலமும் உருவானது.

       மேலும், பள்ளிக்கல்வித்துறையும் சலுகைகளுக்குக் குறைவில்லாமல் பார்த்துக்கொள்ளும் அதே நேரத்தில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து வருவதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளத் தொடங்கியது. இதன் காரணமாக, தேர்ச்சி விகிதம் குறைவதோ, அதிகரிப்பதோ ஆகிய இரண்டுக்குமே சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரும், பணியாற்றும் பாட ஆசிரியர்களுமே பொறுப்பேற்க வேண்டுமென அதிரடியாக அறிவித்தது.இது ஆசிரியர்களிடையே சலசலப்பை உருவாக்கியபோதும், பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது.இதைத்தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கைதான் பள்ளி தொடர்ந்து நடப்பதற்கு ஆணிவேர் என்ற உண்மை ஆசிரியர் சமூகத்துக்கு உறைத்தது. தமிழக அரசும் தனது பங்காக மடிக்கணினி, பாடப்புத்தகங்கள் உள்பட 14 இலவச நலத்திட்டங்களை அறிவித்தது. பள்ளிக்கல்வித்துறையும் அதை மாவட்ட வாரிய முனைப்புடன் செயல்படுத்தியது. இதன் பலனாக கடந்த 2 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் சாதாரணமாக நடைபெற்ற மாணவர் சேர்க்கையைவிட கூடுதலாக 10 சதவிகிதம் அதிகரித்தது.

     எடுத்துக்காட்டாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 202 அரசுப்பள்ளிகளில் 2012-13 -ம் கல்வி ஆண்டைவிட 2013- 14 -ம் கல்வி ஆண்டில் கூடுதலாக 555 மாணவர்கள் சேர்ந்தனர் என்ற செய்தியைக் குறிப்பிடலாம்.சேர்க்கை அதிகரித்த அதே நேரத்தில் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ்.2 தேர்ச்சி விகிதமும் கடந்த 2 ஆண்டுகளாக ஏறு முகத்தைக் கண்டுவருகிறது என்ற உண்மையையும் பதிவு செய்கிறது கல்வித்துறை. இது மக்களுக்கு அரசுப்பள்ளிகள் மீதான பொதுப்பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்த்துகிறது. தமிழக அரசின் அறிவுறுத்தல் ஒரு புறம் இருந்தபோதும், பள்ளியையும், பணியிடங்களையும் தக்க வைக்கவேண்டும் என்ற அடிப்படை உண்மையின் தீவிரத்தை ஆசிரியர்கள் அறிந்துள்ளதால், தங்களது பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டுமென்ற தன்முனைப்புடன்விடுமுறையைப் புறந்தள்ளிவிட்டு கிராமங்களில் சுற்றி வருவதைப் பார்க்க முடிகிறது.

         இது குறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலப் பொதுச்செயலர் சாமி. சத்தியமூர்த்தி கூறியதாவது:அரசுப்பள்ளிகள் வெற்றிகரமாக இயங்க வேண்டுமெனில் மாணவர்கள் சேர்க்கையில் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். மே. 2 -ம் தேதி சென்னையில் நடைபெற்ற அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள், தொடக்கக்கல்வி அலுவலர்கள், மெட்ரிக்பள்ளிகளின் ஆய்வாளர்கள் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டத்தில், ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவர்களின் எண்ணிக்கை இல்லை.

           அதில் கிராமப்புறப்பள்ளிகளில் உபரி பணியிடங்களாகக்கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றும் நிலை உள்ளது.எனவே, கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. அரசுப்பள்ளிகளில் 90 சதவிகிதம் (கட்டடம், கழிப்பறை, குடிநீர்) தன்னிறைவு பெற்றுள்ளதுடன், மாணவர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் கிராமங்கள் வரை ஊடுருவியுள்ளதாலும்ஸ வரும் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் என்றார்.இது குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நா. அருள்முருகன் கூறியதாவது:எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் 23,651 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களில், 90 சதவிகதம் பேரை பிளஸ்.1 வகுப்பில் சேர்க்க வேண்டுமென இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறோம்.

           அரசுப்பள்ளிகளில் 5 -ம் வகுப்பில் படித்தவர்களை 6 -ம் வகுப்பிலும், நடுநிலைப்பள்ளியில் 8 -ம் வகுப்பு படித்த மாணவர்களை உயர்நிலைப்பள்ளியில் 9 -ம் வகுப்பிலும், எஸ்எஸ்எல்சி- முடித்த மாணவர்களை மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பிலும் சேர்ப்பதற்காக ஆசிரியர்கள் மாவட்டம்முழுதும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். இதற்காக சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று விண்ணப்பங்களை அளித்து முதல்கட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அடுத்தக்கட்டத்துக்கு செல்வோம். கடந்த ஆண்டைவிட சேர்க்கை விகிதம் அதிகரிக்கும் வகையில் பணிகளைத்திட்டமிட்டுள்ளோம் என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive