பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகவுள்ள
நிலையில் பல்வேறு சான்றிதழ்களுக்காக வருவாய்த்துறையை அணுகும் மாணவர்கள்,
கிராம நிர்வாக அலுவலர் உட்பட உடுமலை தாலுகாவில் காலியாக உள்ள பணியிடங்களால்
அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். மாணவர்களின் நலனுக்காக சான்றிதழ்களை
குறித்த நேரத்தில் வழங்க வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை தாலுகாவில் ஐந்து உள்வட்டத்தில் 78
வருவாய் கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில், ஆயிரக்கணக்கான மாணவர்கள்
பொதுத்தேர்வு எழுதி கல்லூரி படிப்பில் சேர தயாராக உள்ளனர். மேலும், புதிதாக
பள்ளிகளில் சேரும் மாணவர்களும், தங்களுக்கு தேவையான சான்றிதழை பெற தயாராகி
வருகின்றனர்.
குறிப்பாக இருப்பிடச்சான்று, வருவாய்ச்சான்று,
முதல் பட்டதாரி மற்றும் ஜாதி சான்றிதழ் ஆகியவை மேல்படிப்பிற்கு கட்டாயம்
தேவை என்பதால், மாணவர்கள் இவ்வகை சான்றுகளுக்காக விண்ணப்பித்து
வருகின்றனர். கிராமப்புற மாணவர்கள் முதற்கட்டமாக சம்பந்தப்பட்ட கிராம
நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்தில் கையெழுத்து பெற்று, வருவாய் ஆய்வாளரை
தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பத்தை அளித்து சான்றிதழ் பெற
வேண்டும்.
இந்நிலையில், உடுமலை தாலுகாவில் பல்வேறு
வருவாய் கிராமங்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது.
உடுமலை உள்வட்டத்தில் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. மக்கள் தொகை அதிகமுள்ள
கிராமங்களில் கூடுதல் பணியாக கிராம நிர்வாக அலுவலர் பணியில்
அமர்த்தப்படுகின்றனர். இதனால், சுழற்சி முறையில் அலுவலர்கள் கிராம
அலுவலகங்களுக்கு செல்கின்றனர். இதனால், விண்ணப்பங்களுடன் பல நாட்கள் மக்கள்
காத்திருக்க வேண்டியுள்ளது.
இதே போல், குறிச்சிக்கோட்டை, வாளவாடி,
குடிமங்கலம், பெதப்பம்பட்டி ஆகிய உள்வட்டங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்
பணியிடங்கள் பல்வேறு கிராமங்களுக்கு காலியாக உள்ளன. ஒரு கிராம நிர்வாக
அலுவலர் பல கிராம பொறுப்புகளை கவனிக்க வேண்டியிருப்பதால், அதிகளவு
விண்ணப்பங்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில், கிராம நிர்வாக
அலுவலருக்கு பல கி.மீ. இடைவெளியிலுள்ள கிராமங்கள் கூடுதல் பொறுப்பாக
அளிக்கப்படுகின்றன. இதனால், வாரத்தில் சில நாட்கள் மட்டுமே கிராம நிர்வாக
அலுவலர் கூடுதல் பொறுப்பு அளிக்கப்படும் கிராமத்தில் பணியாற்ற முடிய
வேண்டிய நிலை உள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியாகி குறித்த நேரத்தில்
கல்லூரியில் சேர வேண்டிய பதட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு சான்றிதழ்களை பெற
முடியாதது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. எனவே மாவட்ட நிர்வாகம்
உடனடியாக உடுமலை தாலுகாவில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்
பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தாலுகா அலுவலகத்திலும் தேவை
உடுமலை தாலுகா அலுவலகத்திலும், பல்வேறு
காலிப்பணியடங்களால் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. குறிப்பாக, சான்றிதழ்களை
எழுதுதல், சரி பார்த்தல் போன்ற பணிகளுக்கு தேவையான அலுவலக உதவியாளர்
பணியிடங்கள் காலியாக உள்ளன. சான்றிதழ் விண்ணப்பங்கள் அதிகமாக அளிக்கப்படும்
நிலையில், தற்காலிக பணியாளர்களை நியமித்து, பணியில் ஏற்படும் தொய்வை
தவிர்த்தால் மட்டுமே மாணவர்களின் பதட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க
முடியும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...