விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதி அரசு
பள்ளி கட்டடங்கள் இடிந்து சேதமடைந்த நிலையில் உள்ளன. முறையான குடிநீர்,
கழிப்பறை வசதியில்லை. சில இடங்களில் பள்ளிகள் முட்புதர் சூழ்ந்தும்
காணப்படுகின்றன. இதனால் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். எனவே அடிப்படை
வசதிகளை மேம்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் அரசு துவக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை வசதி மிகக்குறைவு. போதிய
வகுப்பறை கிடையாது. பல்வேறு இடங்களில் கட்டடங்கள் இடிந்து காணப்படுகின்றன.
இதனால் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் மாணவ, மாணவியர்
படிக்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. மரத்தடி நிழலில் பாடங்களை நடத்தும்
நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். முக்கிய பாடங்களுக்கு போதிய
ஆசிரியர்கள் இல்லாததால், பள்ளியின் தேர்ச்சி விகிதமும் குறைகிறது.
முறையான கழிப்பறை வசதியில்லாததால், மாணவ, மாணவியர் படாதபாடு படுகின்றனர்.
மின்மோட்டார் இருந்தும் அது பழுதாகி கிடப்பதால் குடிநீர் பிரச்னை
ஏற்படுகிறது. சில இடங்களில் அதுவும் கிடையாது. பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர்,
காவலாளி வசதியும் இல்லை. இதனால் பொருட்கள் திருடுபோக வாய்ப்புள்ளது.
பள்ளிகளைச்சுற்றி முட்புதர் சூழ்ந்து இருப்பதால் விஷ ஜந்துகள்
நடமாடுகின்றன. அரசு பள்ளிகளிலுள்ள குறைபாடுகளை இப்படி அடுக்கிக்கொண்டே
போகலாம்.
ஆனால் இதை மேம்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கை மிகக்குறைவே. நிதிச்சிக்கல்
காரணமாக அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியவில்லை என நிர்வாகத்தின்
தரப்பில் விளக்கம் தரப்படுகிறது. போதுமான நிதியை வழங்கி கட்டடம் உள்ளிட்ட
அடிப்படை வசதிகளை மேம்படுத்தி ஆசிரியர்களை நியமித்து மாணவ, மாணவியருக்கு
தரமான கல்வி கிடைக்க சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் வழிவகை செய்ய
வேண்டும்.
விருதுநகர் காளிதாஸ்: அரசு பள்ளி கட்டடங்கள் கட்டப்படுவதோடு சரி. அவை
முறையாக பராமரிக்கப்படுவது கிடையாது. வகுப்பறை குடிநீர் கழிப்பறையின்றி
மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம்
கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பதிலோடு முடித்துக்கொள்கின்றனர்.
ஆனால் வேலை நடப்பதில்லை. இதனால் கல்வியின் தரமும் பாதிக்கப்படுகிறது. மாணவ,
மாணவியர் தனியார் பள்ளிகளை நாடிச்செல்லும் சூழ்நிலை உருவாகிறது. அரசு
பள்ளிகளை அனைத்து வகையிலும் மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றார்.
தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை
விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார்: அனைவருக்கும் கல்வி
திட்டம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம், பொதுப்பணித்துறை தமிழ்நாடு
குடிநீர்வடிகால் வாரியம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட துறைகளின்
மூலமாக நிதி ஒதுக்கி, அனைத்து அரசு பள்ளிகளிலும் குடிநீர் மற்றும் கழிப்பறை
வசதி செய்து தரப்பட்டுள்ளது. இவற்றை பராமரிக்கவும், சேதமடைந்த கட்டடங்களை
சீரமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதை அடிக்கடி ஆய்வு செய்யவும், உடனுக்குடன் பழுதுநீக்கவும்
தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் பல்வேறு
மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. கூடுதல் கட்டடம், குடிநீர்,
கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புவது
தொடர்பாகவும் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...