ஆழ்வார்பேட்டையில்
உணவருந்த விரும்பினால் அங்குள்ள அம்மா உணவகத்தில் இட்லி ஒரு ரூபாய்க்கும்,
அருகிலிருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அதே இட்லி ரூ.150-க்கும்
கிடைக்கும். இட்லி ஒன்றுதான். ஆனால், விலைதான் வேறுபடுகிறது. இட்லியைப்
போன்று கல்வியும் கடைச்சரக்காகிவிட்டது. மாநகராட்சிப் பள்ளி மழலையர்
வகுப்புகளில் இலவசச் சேர்க்கையும், தனியார் பள்ளிகள் சிலவற்றில் ஆண்டுக்
கட்டணம் இரண்டு லட்ச ரூபாய் வசூலிக்கப்படுவதையும் பார்க்கிறோம்.
அரசமைப்புச்
சட்டத்தின் 45-வது ஷரத்தின்படி சட்டம் அமலுக்கு வந்த பத்தாண்டுகளில் 14
வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்படும்
என்று கூறப்பட்டிருந்தது. அரசமைப்புச் சட்டத்தின் நான்காவது பகுதியில்
கூறப்பட்டிருக்கும் உரிமைகள் அரசை வழிநடத்தும் கொள்கைகளேயன்றி
நீதிமன்றத்தின் மூலம் அவ்வுரிமைகளை நிறைவேற்ற முடியாது. 14 வயது நிரம்பாத
குழந்தைகள் வேலை செய்வதைத் தடைவிதித்த அரசமைப்புச் சட்டம், அக் குழந்தைகள்
கட்டாயம் இருக்க வேண்டிய இடம் பள்ளிக் கூடங்களே என்று கூற முற்படவில்லை.
சுதந்திரப்
போராட்டத் துக்கு முன்னால் காங்கிரஸ் கட்சி சுதந்திர இந்தியாவில்
குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயப் பள்ளிக்கல்வியளிக்க உறுதிமொழி
அளித்திருந்தாலும் அதை நடைமுறையில் கொண்டுவர ஏற்பாடு செய்ய வில்லை.
சுதந்திரம் பெற்று பல ஆண்டு களாயினும் நம்மைச் சுற்றியுள்ள பல ஏழை நாடுகளை
விட இன்னும் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் அதிகம் உள்ள நாடாக இந்தியா
இருப்பது சோகக் கதை. நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) ஆறு
சதவீதம்கூட கல்விக்கு ஒதுக்காத நாடு இந்தியா மட்டுமே.
தனியார் பள்ளிகளின் எழுச்சி
பல்வேறு
இயக்கங்களுக்குப் பிறகே 86-வது சட்டத்திருத்தத்தின்படி, அரசமைப்புச்
சட்டத்தில் 2002-ம் ஆண்டு, 14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தை களுக்கும்
கட்டாய இலவசக் கல்வி அடிப்படை உரிமை யாக்கப்பட்டது. அரசின் பொறுப்பைத்
தட்டிக் கழிக்கும் வகையில் நாடாளுமன்றத்துக்குச் சட்டமியற்றும் அதிகாரம்
வழங்கப்பட்டது. ஏழாண்டுகளுக்குப் பிறகுதான் 2009-ல் குழந்தைகளுக்கான கட்டாய
இலவசக் கல்விஉரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. அரசமைப் புச்
சட்டத்திருத்தமும், புதிய கட்டாயக் கல்விச்சட்டமும் வருவதற்கு முன்னரே
எல்லா மாநிலங்களிலும் அரசும், அரசு உதவியுடன் நடத்திய பள்ளிகளையும் தவிர
தனியார் நிறுவனங்கள் பலவும் பள்ளிக்கூடங்களை நடத்திவந்தன.
தரமான
கல்விக்கு உத்தரவாதமில்லாத அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க
விரும்பாத பெற்றோர்கள் கல்விக் கட்டணம் செலுத்தித் தனியார் பள்ளிகளில்
சேர்த்தனர். இதன் விளைவாக, தமிழ்நாட்டில் 42 சதவீதம் குழந்தைகள் கட்டணம்
செலுத்தும் தனியார் பள்ளிகளில்தான் படித்து வருகின்றனர்.2009-ம் ஆண்டு
இயற்றப்பட்ட கட்டாய இலவசக் கல்விச் சட்டத்தின்படி குழந்தைகள் அனைவரையும்
பள்ளிக்கு அனுப்புவதென்பது லட்சியமாக்கப்பட்டுள்ளது. கட்டணம்
பெற்றுக்கொண்டு நடத்தப்படும் பள்ளிகளையும் அங்கீகாரம் செய்துள்ள சட்டம்,
அப்பள்ளிகளில் 25 சதவீதம் இடங்களில் பிற்படுத்தப்பட்ட ஏழைமாணவர்களைச்
சேர்க்கும்படி நிர்ப்பந்திக் கிறது.
இதை
எதிர்த்துத் தனியார் பள்ளிகள் போட்ட வழக்குகளைத் தலைமை நீதிபதிகபாடியா
அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு தள்ளுபடிசெய்தது. துரதிர்ஷ்டவசமாக,
அச்சட்டத்திலுள்ள ஏழை மாணவர்களுக்கான கட்டாயச் சேர்க்கை விதி
சிறுபான்மையினர் நிறுவனங்களுக்குப் பொருந்தாதென்று தீர்ப்பளித்தது
அச்சட்டத்தை அர்த்தமற்றதாக்கிவிட்டது. அத்தீர்ப்பில் சிறுபான்மையினர் என்ற
வரையறைக்குள் உதவிபெறும் பள்ளிகளும் அடங்குமென்று கூறியது சட்டத்தின்
நோக்கத்துக்கே விரோதமானது. இன்றும் தமிழகத்தில் மிகப் பெரும்பான்மையான
பள்ளிக்கூடங்கள் சிறுபான்மையினரால்தான் அல்லது சிறுபான்மையினர் என்ற
போர்வையில்தான் நடத்தப்பட்டுவருகின்றன.
அந்தத்
தீர்ப்புக்கெதிராகப் போடப்பட்ட சீராய்வு மனுக்களை விசாரித்த புதிய
தலைமைநீதிபதி லோதா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன
அமர்வு அந்தமனுக்களைத் தள்ளுபடிசெய்ததோடு மட்டுமின்றி சிறுபான்மையினருக்கு
அளிக்கப்பட்ட விதிவிலக்கை ரத்துசெய்யவும் மறுத்துவிட்டது. மாணவர்
சேர்க்கையைப் பொறுத்தவரை முழு உரிமை அவர்களுக்கு உண்டென்று காரணம்
கூறியுள்ளனர். ஏற்கெனவே டி.எம்.ஏ.பை பவுண்டேஷன் தொடுத்த வழக்கில் 11
நீதிபதிகள் அடங்கிய அமர்வின் தீர்ப்பை ஆதாரமாகக் காட்டியுள்ளனர். அந்தத்
தீர்ப்பு, பள்ளிக்கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது. அப்படியே
இருப்பினும் அந்தத் தீர்ப்பு, உதவிபெறும் சிறுபான்மை நிறுவனங்களையும்,
சுயநிதி சிறுபான்மை நிறுவனங்களையும் இவ்விஷயத்தில் வேறுபடுத்திக்
காட்டியுள்ளது. உதவி பெறும் சிறுபான்மை நிறு வனங்கள் அரசின் ஒழுங்குமுறை
விதிகளுக்கு உட் பட்டவை என்றே கூறப்பட்டிருந்தது.
கேரளத்தில் நடந்தது...…
1957-ம்
வருடம் கேரள மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த இடதுசாரிக் கூட்டணி முதன்முதலில்
தனியார் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு,
சட்டமன்றத்தில் கேரள கல்வி மசோதாவை நிறைவேற்றியது. கத்தோலிக்க
மதகுருமார்களும், இஸ்லாமிய இயக்கத்தினரும் வரிந்துகொண்டு களத்தில்
இறங்கினார்கள். மாதா கோவில் மணிகளை இடைவிடாது ஒலித்து சாவுக்கு நடைபெறும்
சடங்கு களைச் செய்தனர். சிலுவையை அழிக்க வந்த கம்யூனிஸ்டுகளின் அபாயத்தைப்
பற்றி அவர்கள் தேவாலயங்களிலிருந்து குரல்கொடுத்தனர். கேரளத்தை
கம்யூனிஸ்டுகளின் பிடியிலிருந்து விடுவிக்க (விமோசன சமரம் செய்ய) பறந்து
வந்தார் பண்டித நேருவின்புதல்வி இந்திரா. அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட
பின் முதன்முறையாக, தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
ஆனாலும்,
கேரள கல்வி மசோதா, உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைத் தீர்ப்புக்கு
அனுப்பப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அச்சட்டத்தின்
பெரும்பான்மையான பிரிவுகள் சட்டப்படி செல்லத் தக்கவை என்றும், அரசமைப்புச்
சட்டத்தில் சிறுபான்மையினருக்கு உரிமையளிக்கப்பட்ட ஷரத்து 30-க்கு
விரோதமானதல்ல என்றும் தீர்ப்பு வழங்கியது. “கல்வி நிறுவனங்களை
நிர்வகிக்கும் உரிமை என்பது. அந்நிறுவனங்களைச் சீர்கேடாக நடத்தும் நிர்வாக
உரிமையை உள்ளடக்கியது அல்ல” என்ற சரித்திரப் புகழ் பெற்றபிரகடனத்தை
வெளியிட்டது. “ஆபரேஷன் வெற்றி. ஆனால் நோயாளி சாவு” என்பதுபோல் தீர்ப்பு
சாதகமாக வந்தும் இடதுசாரிகளின் ஆட்சி அங்கே போய்விட்டது. அதற்குப்
பிறகுஇந்திய நீதிமன்றங்கள் அரசியல் நிர்ணய சபைநினைத்துப் பார்க்காத
அளவுக்குச் சிறுபான்மையினர் உரிமைபற்றி வியாக்கியானம் செய்துவந்துள்ளது.
அதனால்தான் தகுதியற்ற போலியான சிறுபான்மையினர் அமைப்புகளும்
நீதிமன்றங்களின் உதவியினால் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி உலாவருகின்றன.
அமெரிக்க முன்னுதாரணம்
இத்தீர்ப்பு
வருவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் (17.5.1954) அமெரிக்க உச்ச
நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் ஏர்ல் வாரன் என்ற தலைமை நீதிபதியின் கீழ்
கல்வி சம்பந்தமாக வரலாறு படைக்கும் ஒரு தீர்ப்பை வெளியிட்டனர். அந்தத்
தீர்ப்பில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டது:“தனித்தனியான ஆனால், சமத்துவமான
கல்வி என்ற தத்துவத்துக்கே இடமில்லை. தனித்தனியான கல்வி வாய்ப்பென்பது
சமமற்ற நிலையை உள்ள டக்கியே இருக்கும்.” அதுவரை அமெரிக்காவில்
கருப்பினத்தவர்கள் மற்றும் வெள்ளையர்களின் குழந்தைகள் நிறவாரியாகப்
பிரிக்கப்பட்டுத் தனித்தனிப் பள்ளி களில் கல்வி கற்றனர். இப்படியே போனால்
எதிர் காலத்தில் அமெரிக்கா இரண்டு அமெரிக்காவாக உருவாகிவிடுமென்று பயந்து,
மனித உரிமை ஆர்வலர்கள் போட்ட வழக்கில்தான் இத்தகையதொரு தீர்ப்பை அமெரிக்க
உச்சநீதிமன்றம் வழங்கி, நிறவெறிக்கு முற்றுப் புள்ளி வைத்தது.
அதனால்தான்
அங்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற கருப்பினத்தைச் சேர்ந்த ஒபாமா
அதிபராக ஆக முடிந்தது. அப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை ஏன் இந்திய
நீதிமன்றங்களால் வழங்க முடியவில்லை?சிறுபான்மையினர் நடத்தும் பல
நிறுவனங்கள் ஆரம்பத்தில் சேவை மனப்பான்மையில் உருவானவையே. ஏழை, பணக்கார
கல்வி என்ற பாகுபாடின்றி ஒரே இந்தியாவை உருவாக்குவதில் அவர்களுக்கும்
பங்குண்டு. சிறுபான்மையினர் அல்லது பெரும்பான் மையினர், எவர் கல்வி
நிறுவனங்களை நடத்தினாலும் அதில் படிக்கப்போகும் இந்தியக் குழந்தைகளுக்குக்
கட்டாய இலவசக் கல்வி கிட்டும் என்ற உரிமையைப் புதிதாகப் பதவியேற்கப்போகும்
அரசு உத்தரவாதம் செய்யும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம்
கொண்டுவருமா? அப்படி இல்லையெனில் எதிர்காலத்தில் இரண்டு இந்தியாக் கள்தான்
உருவாகும்.-
கட்டுரையாளர், ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம், சமூக விமர்சகர். நன்றி : தி இந்து (மே 26)
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...