Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சத்துணவு உட்கொண்டால் மட்டும்தான் இலவச சீருடையா? - பெற்றோர்கள் அதிருப்தி.

          அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரில் ஏராளமானோர் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் அரசின் கல்விச் சலுகைகள், மாணவ, மாணவியருக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் சமமாக கிடைப்பதில்லை.

                குறிப்பாக, அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள், சத்துணவு உட்கொண்டால் மட்டுமே இலவச சீருடை வழங்கப்படுகிறது. பிற மாணவ, மாணவியருக்கு இலவச சீருடை வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மாநில அரசு, பள்ளி கல்வித்துறை மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, பாடப்புத்தகங்கள், நோட்டு, புத்தகப்பை, காலணி, எழுது பொருட்கள், பஸ் பாஸ் உள்ளிட்ட 14 வகையான இலவசப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. இலவசப்பொருட்களில் பள்ளிச்சீருடை, பள்ளியில் சத்துணவு உட்கொள்ளும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால், ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களாக இருப்பினும், பள்ளியில் சத்துணவு உட்கொள்ளாத மாணவ, மாணவியருக்கு இலவச பள்ளி சீருடை வழங்கப்படுவதில்லை.

உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பல ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுள் மாநில அரசின் இலவசப்பொருட்கள் சத்துணவு உட்கொள்ளும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கணக்கின்படி உடுமலை ஒன்றிய பகுதிகளில் 9,344 மாணவர்களுக்கும், குடிமங்கலம் ஒன்றிய பகுதியில் 4,621 மாணவர்களுக்கும் மட்டுமே, இலவச சீருடை வழங்கப்பட்டுள்ளது.ஐம்பது சதவீத மாணவர்களுக்கு, சத்துணவில் இல்லாத காரணத்தால் சீருடைகள் அளிக்கப்படவில்லை.

இது கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பெரிதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பு மாணவர்களும் அரசு பள்ளிகளில் வேறுபாடின்றி, கல்வி கற்கவே, அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை அணிவது கட்டாயமாக்கப்பட்டு, அரசு அதற்கேற்ப சீருடைகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில், பள்ளியில் சத்துணவு உட்கொண்டால் மட்டுமே இலவச சீருடை என்பது அரசின் திட்டத்துக்கே அர்த்தமின்றி போகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. இதை தவிர்த்து, அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஒரே மாதிரியாக இலவசசீருடை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை கல்வியாளர்கள் கூறியதாவது: மாணவர்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்படும் இலவசப்பொருட்கள், எந்த நிபந்தனைகளுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். சத்துணவில் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டுமே பயன்பெறுவர். சீருடை பிரச்னையால் பிற மாணவர்களையும் வற்புறுத்தி சேர வைக்க வேண்டியுள்ளது. இதனால், சத்துணவும் வீணாகிறது. மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும், சத்துணவில் சேர்வதில்லை.ஏழை மாணவர்களாகவே இருந்தாலும், இவர்களுக்கு சீருடைகள் வழங்க முடியாமல் உள்ளது. இதனால் மாணவர்களிடையே வேறுபாடு ஏற்படும் நிலை உள்ளது. இந்த கல்வியாண்டில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பொருட்களில் ஒன்றாக சீருடை வழங்கக் கோரி கல்வித்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பயன் கருதி மாநில அரசு இதனைசெயல்படுத்த வேண்டும். இவ்வாறு கல்வியாளர்கள் கூறினர்.

பெற்றோர் கூறியதாவது: சத்துள்ள உணவு வகைகள் இருந்தாலும், சில குழந்தைகளுக்கு சத்துணவில் விருப்பம் இருப்பதில்லை, சீருடை வேண்டி சத்துணவில் சேர்கின்றனர். எத்தனையோ இடங்களில் ஒரு வேளை உணவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், தேவைப்படாத குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கி அவற்றைவீணடிக்க வேண்டிய சுழ்நிலை உருவாகிறது. மேலும், குறிப்பிட்ட வகுப்புகளுக்கு மேல், மாணவர்கள் சத்துணவில் சேர்வதில்லை.ஆண்டுதோறும், மாணவர்களுக்கு சீருடைகள் எடுப்பது பெற்றோர்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. ஏழை குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் பழைய சீருடைகள் அணிந்து பள்ளிக்கு செல்கின்றனர். இதனால், பிற மாணவர்களை கண்டு மனஉளைச்சலுக்கு ஆளாகி, படிப்பில் கவனம் சிதறும் சூழ்நிலை உருவாகவும் நேரிடும். இவ்வாறு, பெற்றோர் கூறினர்.

குறைவின்றி வழங்கப்படுகிறது: திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலர் ஆனந்தி கூறுகையில், "ஒவ்வொரு கல்வியாண்டிலும் அரசின் நலத்திட்டங்கள், அனைத்தும் மாணவர்களுக்கு குறைவின்றி வழங்கப்படுகிறது. சீருடைகள் சத்துணவு உட்கொள்ளும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என மாநில அரசின் திட்டம் உள்ளது. இதன் படி சத்துணவு பயன்பெறும் மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில் சீருடை வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive