விடைத்தாள்களை திருத்த, தகுதியான
ஆசிரியர்களை நியமிக்கும்படி, திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துக்கு, சென்னை
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர், ஊரிஸ் கல்லூரியின், முன்னாள் இணைப்
பேராசிரியரும், வழக்கறிஞருமான இளங்கோவன், தாக்கல் செய்த மனு: வேலூர்,
திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் இணைப்புப் பெற்ற கல்லூரிகளில், 5,000,
ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில், பல்கலைக் கழக மானியக் குழுவின்
விதிமுறைகளின்படி, 1,440 பேர் தான், தகுதி பெற்றவர்கள். மாணவர்கள் எழுதும்
தேர்வுகளின் விடைத் தாள்களை திருத்துவதற்கு, தகுதியில்லாத ஆசிரியர்கள்
ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் செய்யும் மதிப்பீட்டின் அடிப்படையில்
தான், பட்டங்கள் வழங்கப்படுகின்றன. எனவே, பல்கலைகழகத்தில் இணைப்பு பெற்ற
கல்லூரிகளில் பணியாற்றும் தகுதியான ஆசிரியர்களின் பட்டியலை தயாரிக்கவும்,
தகுதியானவர்களை மட்டுமே, தேர்வுகள் நடத்துவதற்கான மேற்பார்வையாளர்கள்,
பறக்கும் படையினர் மற்றும் ஆய்வாளர்களாக நியமிக்கவும், உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனுவை, தலைமை நீதிபதி (பொறுப்பு)
அக்னிஹோத்ரி, நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது.
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் சத்தியசந்திரன் ஆஜரானார். மனுவை விசாரித்த,
முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: ஆசிரியர்கள், சிறந்த கல்வி பின்னணி,
நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தகுதி பெற்றிருக்கவில்லை என்றால், கல்வியில்
தரத்தை பேண முடியாது. நாட்டின் முன்னேற்றத்துக்கு, உயர் கல்வி தரம்,
ஒழுக்கம் அவசியம். மாணவர்கள், நாட்டின் எதிர்கால தலைவர்கள். திறமையை
பொறுத்தே, அவர்களின் எதிர்காலம் அமையும். அவர்களின் செயல்பாடு மற்றும்
திறமையை, தகுதியில்லாத ஆசிரியர்கள் மதிப்பீடு செய்தால்,
தகுதியில்லாதவர்களுக்கு அதிக மதிப்பெண்களும், தகுதியுள்ளவர்களுக்கு,
குறைவான மதிப்பெண்களும் கிடைக்கும் நிலை ஏற்படும். மாணவர்களின்
எதிர்காலத்தை வடிவமைப்பதில், மதிப்பெண்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
எனவே, விடைத்தாள்களை திருத்துவதற்கு, தகுதியான ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை,
திருவள்ளுவர் பல்கலைகழகம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, முதல் பெஞ்ச்
உத்தரவிட்டுள்ளது.
good
ReplyDelete