Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப் பள்ளிகளில் ஆங்கில திணிப்பதை கண்டித்து போராட்டம்

           அரசுப் பள்ளிகளில் ஆங்கில திணிப்பதை கண்டித்து பள்ளிக் கல்வி அமைச்சர் வீட்டை முற்றுகையிடும் போராட்டம்

           சென்னை: அரசுப் பள்ளிகளில் தமிழை புறக்கணிப்பதை கண்டித்தும், ஆங்கில திணிப்பதைக் கண்டித்தும், தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் வீட்டை வரும் 28ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்த கல்வியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். தமிழ்வழிக் கல்விக் கூட்டுஇயக்கப் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார்

                இந்த கூட்டத்தில் பல்வேறு முன்மொழிவுகள் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றது. இறுதியில் பல முக்கியமான பின்வரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசு 2013-2014 கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகளைத் தொடங்குவது என்று திட்டமிட்டு முதற்கட்டமாக 1ம் வகுப்பிலும் 6ம் வகுப்பிலும் ஆங்கில வழிப்பிரிவுகளைத் தொடங்கியது. நடப்பு 2014-2015 கல்வியாண்டில் இரண்டாம் வகுப்பிலும், ஏழாம் வகுப்பிலும் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் தொடங்குகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கல்வியில் தமிழைப் பயிற்று மொழி நிலையிலிருந்து முற்றிலுமாக நீக்கிவிடும் போக்கில் தமிழக அரசு தீவிரமாக செயல்படுகிறது. இதை ஒரு சாதனையாக நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சர் கூறினார். ஆளுங்கட்சியான அதிமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையும் தமிழ்நீக்க - ஆங்கிலவழித் திணிப்புத் திட்டத்தை சாதனையாக கூறியுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் மாணவர் சேர்க்கையில் ஆங்கில வழிப்பிரிவுகளில் சேர்ப்பதற்கு முன்னுரிமை தருகிறார்கள். முனைந்து செயல்படுகிறார்கள். தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் 2014ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி அன்று, சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து ஆங்கில வழித் திணிப்பால் ஏற்படும் அபாயங்களை விளக்கி, அத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி வேண்டுகோள் விண்ணப்பம் கொடுத்தோம்.
 
           அதே போல் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் திருவாட்டி. சபீதா அவர்களிடமும் விண்ணப்பம் கொடுத்தோம். இருந்தும் அரசு செவிமடுக்கவில்லை. நமது தாய்மொழியாகவும் தேசிய மொழியாகவும் உள்ள தமிழைக் காப்பாற்றவும் தமிழ் வழியில் பயின்று தமிழர்கள் உலகத்தாரோடு போட்டியிடும் வகையில் அறிவுத்திறன் பெற்றிடவும் நாம் எடுத்த அறவழிப் போராட்டங்களையும் கோரிக்கை விண்ணப்பங்களையும் சிறிதளவு கூட தமிழக அரசு சட்டை செய்யவில்லை. தமிழை வெளியேற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழியில் சேர்க்க விரும்புகிறார்கள் என்று தமிழக அரசு சொல்கிறது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கை, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றினால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்வழியில் சேர்ப்பர். மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை ஆகியவற்றில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 80 விழுக்காடு தமிழ்வழியில் படிப்பவர்களுக்கு ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்ற வேண்டும். அதேபோல், வேலைவாய்ப்பில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 80 விழுக்காடு ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்ற வேண்டும். அரசுப் பள்ளிகளில் உள்கட்டுமானங்களை வலுப்படுத்த வேண்டும். கல்விக் கொள்ளை வணிகத்திற்காக மெட்ரிக்குலேஷன் - சி.பி.எஸ்.. கடைகளைத் திறந்து வைக்கும் இலாப வேட்டைக்காரர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
            இவ்வாறான பல்வேறு கோரிக்கைகளை நாம் தமிழக அரசுக்குத் தொடர்ந்து வைத்து வருகிறோம். ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக கற்பதை நாம் ஏற்கிறோம். இவற்றில் எதையும் செய்ய தமிழக அரசு முன்வரவில்லை. தமிழக அரசின் தமிழ் நீக்க - ஆங்கிலத் திணிப்புத் திட்டம் தொடர்ந்து நிறைவேறினால், முதற்கட்டமாக பள்ளிக் கல்வியிலிருந்து தமிழ் நீக்கப்படும். அடுத்த கட்டமாக தமிழக அரசின் ஆட்சியில் இப்பொழுதிருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழ் ஆட்சி மொழியும் நீக்கப்பட்டுவிடும். தமிழர்கள் தங்கள் தாயகத்திலேயே ஆங்கிலம் - இந்தி போன்ற அயல் மொழிகளுக்கும், அயல் இனத்தாருக்கும் அடிமைப்பட்டு தங்கள் மொழியையும் இனத்தையும் இழக்கும் இழிநிலை உண்டாகும். அயல் இனத்தாரை அண்டிப்பிழைக்கும் அவலம் தான் மிஞ்சும். எனவே, தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்புத் திட்டத்தைக் கண்டித்தும், அதனைக் கைவிட வலியுறுத்தியும், சென்னையில் பள்ளிக்கல்வி அமைச்சர் வீட்டை 2014 மே 28ம் தேதி அன்று முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.
 
 
               இந்த கூட்டத்தில் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி மாநிலத் தொழிற்சங்கச் செயலாளர் சைதை கே.வி.சிவராமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் துணைப் பொதுச் செயலாளர் இரா.பச்சைமலை, திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசிக்குமரன், மக்கள் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா.கல்விமணி, தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் தமிழ்நேயன், உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் .அரணமுறுவல், தென்மொழி ஆசிரியர் மா.பூங்குன்றன், தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைமை செய்தித் தொடர்பாளர் அருண்சோரி, சேவ் தமிழ்ஸ் இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், தமிழர் எழுச்சி இயக்கப் பொறுப்பாளர் .எழிலன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன், தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சென்னை செயலாளர் தமிழ்ச்சமரன், தமிழர் தேசிய இயக்கப் பொறுப்பாளர் ஆவடி செ..முத்தமிழ்மணி, தந்தை பெரியார் திராவிடர் கழக திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் பா.நாகராசன், தலைநகர்த் தமிழ்ச் சங்கம் .சோழநம்பியார், தொழிலாளர் சீரமைப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மா.சேகர், அன்றில் பா.இறையெழிலன், புலவர் இரத்தினவேலவர், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கப் பொறுப்பாளர் சிவ.காளிதாசன், பொன்னேரி வழக்குரைஞர் பொன்.செல்வன், .முல்லைத்தமிழன், .சி.சின்னப்பத்தமிழர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive