Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விரைவிலேயே அரசு பள்ளிகளில் சேருவதற்குக்கூட மாணவர்கள் இல்லாத நிலை ஏற்படக்கூடும்?

         பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த பத்தாண்டு புள்ளிவிவரத்தைப் பார்க்கும்போது அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையும் மாணவர் சேர்க்கையும் குறைந்து கொண்டே வருவதும் சி.பி.எஸ்.இ. முறையிலான தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை மேலதிகமாக அதிகரித்து வருவதும் தெரியவருகிறது.

                பெருவாரியான அரசுப் பள்ளி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்கள் குழந்தைகளை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலான தனியார் பள்ளிகளுக்கும், சமச்சீர் கல்வி அடிப்படையிலான தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும் அனுப்புவதிலிருந்தே கல்வியின் தரம் எத்தகையது என்பது வெளிப்படுகிறது. இந்த நிலை தொடருமேயானால் விரைவிலேயே அரசு பள்ளிகளில் சேருவதற்குக்கூட மாணவர்கள் இல்லாத நிலை ஏற்படக்கூடும்.

           கல்வி, அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதா அல்லது அதை தனியார் துறையிடம் விட்டுவிடுவதா என்பதல்ல பிரச்னை. தரமான கல்வி உறுதிப்படுத்தப்படுகிறதா, அனைவருக்கும் தரமான கல்விக்கான சம வாய்ப்பு வழங்கப்படுகிறதா என்பதுதான் கேள்வி. தனியார் பள்ளிகளின் தரத்துக்கு நிகராக அரசுப் பள்ளிகளும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால் தரமான கல்வியை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கச் செய்வதில் பிரச்னை எதுவும் இருக்காது.

              தமிழகத்தில் கடந்த 2010-11ஆம் கல்வியாண்டில் 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளில் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டம் தற்போது 1 முதல் 10ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும், இதற்கான பாடப் புத்தகங்களில் இன்னமும் நிறைய பிழைகள் உள்ளதாகவும், இத்தகைய புத்தகங்களைப் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாகவும் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பாடப் புத்தகங்களில் காணப்படும் பிழைகளை நீக்கி, ஒவ்வோர் ஆண்டும் மேம்படுத்தி வெளியிட்டால்தான் இந்தக் கல்வி முறை தொடர்ந்து நீடிக்க முடியும் என்ற அவர்களது ஆதங்கம் நியாயமானது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டதால் 2011-12ஆம் கல்வியாண்டில் பல பிழைகளுடன் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்கள் அவசர கதியில் வெளியிடப்பட்டன. ஆனால், அந்தப் புத்தகங்கள் இன்னமும் பல பிழைகளுடனேயே அச்சிடப்பட்டு வெளியாவதாக பரவலாகப் புகார் எழுந்திருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. பாடப்புத்தங்களிலேயே பிழை காணப்படுகிறது எனும்போது, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களைச் சேர்ந்த பெற்றோர் தங்களது பிள்ளைகளை மத்திய கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுவதில் வியப்பொன்றுமில்லை.

பெற்றோர்களின் இந்த ஆர்வத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி, பணத்தை வாரிக் குவிக்கும் நோக்குடன் புதிது புதிதாக சி.பி.எஸ்.இ. பள்ளிகளைத் தொடங்குவதில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளை நடத்தி வருபவர்கள் அதீத கவனம் செலுத்தி வருகின்றனர். புற்றீசல் போலப் பெருகி வரும் இத்தகைய சி.பி.எஸ்.இ. பள்ளிகளால், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சமச்சீர் கல்வித் திட்டத்துக்கு வெகுவிரைவில் பாதிப்புகள் ஏற்படலாம்.

அகில இந்திய அளவில் நடத்தப்படும் ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளில் சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தின் கீழ் படித்து வெளிவரும் மாணவர்கள்தான் எளிதாக வெற்றி பெறுகின்றனர். இத்தகைய அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்ப அளவில்தான் உள்ளது. இதற்கு பாடப் புத்தகங்கள் மட்டுமல்லாது, பள்ளித் தேர்வு முறையும் முக்கியக் காரணமாகும்.

பாடப் புத்தகங்களில் உள்ளவற்றை மனனம் செய்து, அதிக மதிப்பெண்கள் பெறும் வகையிலான தேர்வு முறைதான் தமிழக பள்ளிக் கல்வித் திட்டத்தில் உள்ளது. இதை மாற்றி, பாடப் புத்தகங்களில் உள்ளவற்றுக்கு அப்பாலும் மாணவர்களின் திறனை சோதிக்கும் வகையில் தேர்வு முறையை மாற்றியமைக்க வேண்டும். இந்த நிலைமையை மாற்ற வேண்டுமெனில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு இணையாகப் பாடப் புத்தகங்களை மேம்படுத்தி வெளியிட வேண்டும்.

அதைவிட முக்கியமானது பிளஸ் 2 தேர்வு முறையில் மிகப் பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியது. இது குறித்து கல்வியாளர்களைக் கொண்டு பொது விவாதம் நடத்தி, சிறந்த தேர்வு முறையை அமல்படுத்த தமிழக கல்வித் துறை முன்முயற்சிகளை உடனே தொடங்க வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive