அடுத்த கல்வியாண்டு (2015-16) முதல், அனைத்து
பள்ளிகளிலும் 10ம் வகுப்பில் தமிழ் முதல்பாடமாக இருக்க வேண்டும். அப்பொழுது
தான் அரசு பொதுத்தேர்வு எழுத முடியும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னையில், அமைச்சர் வீரமணி தலைமையில்,
பள்ளிகல்வித்துறை ஆய்வுக்கூட்டம் நடந்தது. முதன்மை செயலர் சபீதா,
அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, மெட்ரிக் பள்ளி
இயக்குனர் பிச்சை, உயரதிகாரிகள், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி
அதிகாரிகள், தொடக்ககல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் கலந்து
கொண்டனர். மாவட்ட வாரியாக, பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம், அதை
அதிகரிப்பது எப்படி, மாணவர்களுக்கு அரசின் இலவச நலத்திட்டங்களை வழங்குவது
உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த கல்வியாண்டு(2015-16)
முதல், மெட்ரிக் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும், 10ம்வகுப்பில், தமிழ்
முதல் பாடமாக இருக்க வேண்டும். இல்லையெனில், அம்மாணவர்கள், அரசு
பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
ஜெயக்குமார் கூறியதாவது: ஆறாம் வகுப்பில், தமிழ் முதல்பாடமாக கட்டாயம்
இருக்க வேண்டுமென, முன்னர் அமல்படுத்தப்பட்ட திட்டம், படிப்படியாக
அடுத்தடுத்த வகுப்புகளுக்கு கொண்டுவரப்பட்டு, அடுத்த கல்வியாண்டில், 10ம்
வகுப்பில் அமல்படுத்தப்படுகிறது. தமிழ் முதல்பாடமாக இருந்தால் மட்டுமே,
அப்பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியும். மாறாக, மலையாளம், இந்தி,
தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் உள்ளிட்டவற்றை முதல்பாடமாக எடுத்தால்,
அவர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என
தெரிவிக்கப்பட்டது. தமிழ் பாடத்தை கட்டாயமாக்கும் நோக்கிலேயே இவ்வாறு
கூறப்பட்டது. தற்போது, பிற மொழியை, முதல் பாடமாக எடுத்து படிக்கும்
மாணவர்கள், 500க்கு 500 பெற்றாலும், அவர்களுக்கு, மாநில ரேங்க்
தரப்படுவதில்லை. கடந்த கல்வியாண்டில், 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு
அடைவுத்திறன் தேர்வு நடத்தப்பட்டது. அதில், குறைந்த மதிப்பெண் பெற்ற
மாணவர்களுக்கு, அவர்களை மேம்படுத்தும் நோக்கில், தமிழ், ஆங்கிலத்தில்
வாசிப்பு, எழுத்து பயிற்சி, கணிதப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது, என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...