Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PG TRB | TNPSC | Sangakaalam PG Tamil









தொகு
கடைச்சங்க காலம் என்பது கி.மு. 300 முதல் கி.பி. 300 ஆண்டு வரை என்று கூறப்படுகிறது. சங்க காலம் எனப் பொதுவாகவும் அழைக்கப் படுகிறது. "கடைச்சங்கம் மதுரையில் நடந்தது; கடைச்சங்க கால மன்னர்கள் 49 பேர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்; மேலும் 449 புலவர்கள்இங்கு பங்களித்தனர்; 1850 ஆண்டுகள் கடைச்சங்க காலத்து அரசர்கள் 49 பேரும் ஆட்சி புரிந்தனர்" எனச் சிலம்பின் உரைப்பாயிரம் கூறுகின்றது.
சங்க காலம் என்று தமிழில் வழங்கப்படும் கூட்டுச் சொல்லில் உள்ள சங்கம் என்பது சமசுக்கிருத மொழியிலிருந்து வந்த சொல் என்று கூறப்படுவதால் சங்க காலம் என்று சொல்லுவதற்குப் பதில் கழகக் காலம் என்று சொல்லும் வழக்கும் உருவானது.

சங்க காலம்[தொகு]

கடைச்சங்க காலம் என்பது கி.மு. 2ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2ம் நூற்றாண்டு வரை. இந்தக் கால கட்டத்தில் ஆட்சி செய்த தமிழ் மன்னர்களைப் பற்றி மிகக் குறைவான தகவல்களே கிடைத்துள்ளன.

புறச் சான்றுகள்[தொகு]

தொல்காப்பியத்திலும், புறநானூற்றிலும், திருக்குறளின் பரிமேலழகர் உரையிலும் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மெகஸ்தனிஸ் பாண்டியர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். சந்திரகுப்த மௌரியரின் மந்திரி கௌடில்யரும்பாண்டியர்களைக் குறிப்பிட்டுள்ளார். மகாபாரதமும், இராமாயணமும் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
அசோகரின் குறிப்புகளும் தனது நாட்டின் தெற்கு எல்லையில் உள்ள அரசுகள் என்று சேர, சோழ, பாண்டிய நாடுகளைப் பற்றிக் கூறுகிறது. உரோமுக்கும் இந்தியாவிற்கும் இடையில் பெருகி வந்த வர்த்தகத்தைத் தாலமி குறிப்பிடுகிறார்.
சங்க காலத்தின் இறுதியில் மதுரையைக் கைப்பற்றிய களப்பிரர்கள் சங்க காலச் சிறப்புகள், தகவல்களை அழித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
"வரலாற்றின் உயிர்நாடி, காலக் கணிப்பாகும். இன்ன ஆண்டில், இன்ன திங்களில், இன்ன நாளில் இன்னது நிகழ்ந்தது என்று கூறுதல் வரலாற்றின் இலக்கணமாகும். பண்டையத் தமிழக வரலாற்றில் பல நிகழ்ச்சிகளுக்குக் காலங்கணித்தல் எளிதாகத் தோன்றவில்லை. மன்னர்களைத் தம் பாடல்களில் குறிப்பிடும் பழந்தமிழ்ப் புலவர்கள் அம்மன்னர்கள் வாழ்ந்திருந்த காலத்தைத் தெரிவிப்பதில்லை. அவர்களுடைய செய்யுள்களில் விளக்கப்படும் சில நிகழ்ச்சிகளைக் காலங்கணிக்கப்பட்ட வேறு நிகழ்ச்சிகளுடன் தொடர்புறுத்தி அவற்றில் காலத்தை ஒருவாறு அறுதியிட வேண்டியதுள்ளது" என வரலாற்றுப் பேராசிரியர் கே.கே.பிள்ளை குறிப்பிடுகின்றார். எனவே, புறச்சான்றுகளைவிட, அகச்சான்றுகளையே அடிப்படையாகக் கொண்டு காலத்தை வரையறுக்க வேண்டியுள்ளது. அகச்சான்றுகள் பெரும்பாலும் இலக்கியங்களாகவே உள்ளன. அவ்விலக்கியங்கள் தரும் சான்றுகளிலிருந்து தமிழகத்தின் வரலாற்றுக்கு உட்பட்ட காலம் சங்ககாலம் என்பது பெறப்படுகிறது. இக்காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் பொற்காலம் என்று கருதப்படுகிறது. இக்காலத்தில் பாண்டியன், சோழன், சேரன் என்ற முப்பெரும் மன்னர் அரசாண்டு வந்தனர். பாண்டியரின் தலைநகரம் மதுரை; சோழர்களின் தலைநகரம் காவிரிப்பூம்பட்டினமும்(புகார்) உறையூரும் ஆகும். சேரனின் தலைநகரம் வஞ்சி.
சங்ககால மன்னர்கள் தமிழ்ப் புலவர்களைப் பாராட்டிப் பரிசில் வழங்கிப் புரந்து வந்தனர். சங்ககால மன்னர்கள் எழுப்பிய எழிலோங்கு அரண்மனைகள், மாளிகைகள், கோயில்கள், அங்காடிகள், துறைமுகங்கள், அவர்கள் ஓட்டிய நாவாய்கள் அனைத்தும் மறைந்துவிட்டன. ஆனால் அவர்கள் காலத்துப் புலவர்கள் பாடிய பாடல்கள் - மன்னர்களது அருமைகளையும், பெருமைகளையும், பண்புகளையும் பறைசாற்றும் பாடல்கள் இப்போதும் எஞ்சி நிற்கின்றன. அந்தப் பாடல்களே சங்ககாலத் தமிழகத்தின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் உணர்த்துகின்றன. தமிழர்களின் அக, புற வாழ்வு ஒழுக்கங்கள், அரசியல், வீரம், வழிபாடு, விழாக்கள், ஆடல் பாடல்கள், வணிகம், ஓவியம் சிற்பம் கட்டடம் போன்ற கலைகள் ஆகிய எல்லாவற்றையும் சங்கப் பாடல்களே சான்றாக நின்று விளக்குகின்றன.

சங்கம் எனும் சொல்[தொகு]

'சங்கம்' என்னும் சொல் (புலவர் கூட்டம் என்ற பொருளில்) சங்க இலக்கியம் ஒன்றிலேனும் இடம் பெறவில்லை. அது தமிழ்ச் சொல்லா, வடமொழிச் சொல்லா என்ற வாதங்களும் உண்டு. சங்கம் என்னும் சொல் பிற்காலத்திய ஒன்றாக இருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை. இதற்கு நேரான தமிழ்ச் சொற்கள் கூடல், அவை, மன்றம் போன்றவை ஆகும். அவை முன்பு வழக்கிலிருந்தன. சொற்கள் மறைவதும் மாறுவதும், புதிதாகத் தோன்றுவதும் ஒவ்வொரு மொழியிலும் நிகழக்கூடியது. எனவே தொடக்க காலத்தில் 'சங்கம்' என்ற சொல் கையாளப் படாமையால், சங்கம் என்ற அமைப்பு இருந்திருக்க இயலாது என்பார் கூற்று உண்மைக்குப் புறம்பான ஒன்று. ஆகவே, பண்டைத் தமிழகத்தில் தமிழ்ப் புலவர்கள் கூடித் தலை, இடை, கடை என்று மூன்று சங்கங்கள் அமைத்து, அவற்றின் வாயிலாகத் தமிழ் வளர்த்தார்கள் என்று கூறும் மரபைப் புறக்கணித்துவிட முடியாது.

சங்கம் பற்றிய செய்தி[தொகு]

தமிழ்ச் சங்கத்தைப் பற்றிய குறிப்புகள் இறையனார் களவியல் உரையில் தான் முதன் முதலாகக் காணப்படுகின்றன. தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என்ற மூன்று சங்கங்களைப் பற்றிய வரலாற்றை அவ்வுரை சுருக்கிக் கூறுகின்றது. அவ்வரலாற்றைப் பிற்கால உரையாசிரியர்களான பேராசிரியரும், அடியார்க்கு நல்லாரும் ஒப்புக் கொண்டுள்ளனர். மூன்று சங்கங்கள் இருந்து பல்வேறு காலங்களில் தமிழ் வளர்த்த வரலாற்றைப் பல புராண ஆசிரியர்களும் குறிப்பிடுகின்றனர். திருவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதி தம் நூலில் தமிழ்ச் சங்கத்தைப் பற்றிப் பாடியுள்ளார். வில்லிபுத்தூராரும், தாம் பாடிய பாரதத்தில் 'நன்றறிவார் வீற்றிருக்கும் நன்மாடக் கூடல்' என்று மதுரையைப் புகழும்போது 'நன்றறிவார்' எனச் சங்கப் புலவர்களைக் குறிப்பிடுகிறார்.

இறையனார் களவியல் உரை[தொகு]

'இறையனார் களவியல்' எனும் நூலின் உரையாசிரியர், தமிழ் வளர்க்கும் உயர்ந்த நோக்கத்தோடு, பண்டைக் காலத்துப் பாண்டிய மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் பலரையும் ஒன்று கூட்டித் தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழைப் போற்றிய செய்தியைத் தெரிவிக்கிறார். மேலும், தமிழ்ச் சங்கங்களின் அமைப்பு, செயல்பாடு ஆகியவை பற்றி விரிவான செய்திகளையும் இறையனார் களவியல் உரை குறிப்பிடுகின்றது.


குமரிக் கண்டத்திலிருந்த தென்மதுரையில் முதற் சங்கம் நடைபெற்று வந்தது. சிவபெருமான், அகத்தியனார், முருகக் கடவுள், முரஞ்சியூர் முடி நாகனார், குபேரன் முதலாய 549 புலவர் அதன்கண் அமர்ந்து தமிழ் வளர்த்தனர். அச்சங்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த புலவர்களின் எண்ணிக்கை 4449. அவர்கள் பரிபாடல்கள் பலவற்றையும், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை என்ற நூல்களையும் இயற்றினார்கள். இந்தத் தலைச் சங்கம் தொடர்ந்து 4440 ஆண்டுகள் நடைபெற்றது. காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாகப் பாண்டிய மன்னர் 89 பேர் இச்சங்கத்தைப் பாதுகாத்து வந்தார்கள். அக்காலத்தில் எழுந்த நூல்களுக்கு இலக்கணமாக இருந்த நூல் அகத்தியம்.


பின்னர்த் தென்மதுரை கடல்கோளுக்குள்ளான போது, கபாடபுரம் பாண்டிய நாட்டுக்குத் தலைநகர மாயிற்று. அங்கு இடைச் சங்கம் நிறுவப்பட்டது. தொல்காப்பியர், இருந்தையூர்க் கடுங்கோழியார், மோசியார், வௌ¢ளூர்க் காப்பியனார், சிறுபாண்டரங்கனார், திரையன் மாறனார், துவரைக்கோன், கீரந்தையார் முதலிய 59 பேர் இச்சங்கத்தில் அமர்ந்து தமிழாராய்ந்தார்கள். அவர்களுடன் இச்சங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 3700. வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக 59 பாண்டிய மன்னர்கள் இச்சங்கத்தின் புரவலர்களாய்த் திகழ்ந்தனர். அவர்களுள் ஐவர் தாமே புலவர்களாகவும் அச்சங்கத்தில் அமர்ந்திருந்தனர். இச்சங்கம் 3700 ஆண்டுகள் நடைபெற்றது. இச்சங்கத்துக்கு அகத்தியமும், தொல்காப்பியமும் இலக்கண நூல்களாகத் திகழ்ந்தன.


கபாடபுரத்தைக் கடல் கொண்ட பின்னர்க் கடைச்சங்கம் வடமதுரையில் (இப்போதைய மதுரை) கூடிற்று. இச்சங்கத்தில் அமர்ந்து தமிழ் வளர்த்த புலவர்கள் 49-பேர். இவர்களுள் மூவர் பாண்டிய மன்னர். சேந்தம் பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர்கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர் நல்லந்துவனார், மருதனிள நாகனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆகிய புலவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் உள்ளிட்ட 449பேர் பாடினர். இயற்றப்பட்ட நூல்கள் நெடுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலிநூற்றைம்பது, பரிபாடல் எழுபது, கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை முதலியன. கடைச் சங்க காலத்தில் வழங்கிய இலக்கண நூல் தொல்காப்பியம். இச்சங்கம் 1850 ஆண்டுகள் நீடித்தது. இக்கடைச் சங்கத்தை மதுரையில் நிறுவியவன் பாண்டியன் முடத்திருமாறன் என்னும் மன்னன். இதன் இறுதி ஆண்டுகளில் அரசாண்டவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. இவ்வாறு களவியல் உரை கூறுகிறது.

சங்கம் பற்றிய உண்மைகள்[தொகு]

இறையனார் களவியல் உரைச் செய்திகள் முழுமையும் உண்மையானவையா எனும் ஐயம் உண்டு. "தமிழ்ச் சங்கங்கள் மூன்றும் தோன்றி வளர்ந்த வரலாறு பற்றிய இறையனார் அகப்பொருள் உரை கூறும் செய்திகள் அளவைக்கு ஒவ்வாத காலவரையறை, புலவர் எண்ணிக்கை முதலியவை கலந்துள்ளன என்பது உண்மை. எனினும், அவற்றை முற்றிலும் கற்பனை என்று புறக்கணிக்க இயலாது.
எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்


மெய்ப்பொருள் காண்பது அறிவு (திருக்குறள்,355)


என்பது நியதி. எனவே, இவற்றை நன்கு ஆய்ந்து அவற்றுள் உண்மை காணலே பொருத்தம்" என, வரலாற்றுப் பேராசிரியர். கே.கே.பிள்ளை குறிப்பிடுவதை நாம் கருத வேண்டும்.


  • களவியல் உரையாசிரியரும், புராண ஆசிரியர்களும் அவ்வக் காலங்களில் தத்தமக்குக் கிடைத்த குறிப்புகளையும், தகவல்களையும், செவிவழிச் செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு தத்தம் நூல்களில் சேர்த்திருக்க வேண்டும்.
  • மேலும், தமிழ்ச்சங்கங்களைப் பற்றிய வரலாறுகளில் வரும் மன்னர்கள், புலவர்கள் ஆகியவர்களுள் பலர் இயற்றிய பாடல்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. அதனால், அப்புலவர்கள் உயிருடன் வாழ்ந்திருந்தவர்கள், புனைபாத்திரங்கள் அல்லர் என்பதை மறுக்க முடியாது. பாண்டிய மன்னர் அவையில் புலவர்கள் பலர் வீற்றிருந்த வரலாற்றை வேள்விக்குடிச் செப்பேடு குறிப்பிடுகின்றது.


எனவே, சங்கம் பற்றிய செய்திகளில் சில மிகையாகவும், புனைந்துரையாகவும் இடம் பெற்றிருந்தாலும், மூன்று சங்கங்கள் இருந்தமையும், மன்னர்கள் புலவர்களை ஆதரிக்கும் புரவலராக இருந்து தமிழ் வளர்த்தமையும் உண்மைக்குப் புறம்பானவை அல்ல. என்பதை நாம் உறுதியாக ஏற்கலாம்.

சங்கம் பற்றிய பிற சான்றுகள்[தொகு]

கடைச் சங்கப் பாடல்களில், சங்கம் இருந்தமைக்கு£¤ய அகச் சான்றுகள் பல உள்ளன.
மேலும், தொல்காப்பியப் பாயிரத்திலும் வேறுபல நூல்களிலும் சங்கம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
"நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டாசாற்கு அரில்தபத் தெரிந்து...."
--- (தொல். பாயிரம்)


பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அவையில் மாங்குடி மருதன் தலைவனாகப் புலவர் பாடினர்.
--- (புறநானூறு 72)
"தொல்லாணை நல்லாசிரியர்
புணர் கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன்...."
--- (மதுரைக். 761-763)


"தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை...."
--- (சிறுபாண். 66-67)


"தமிழ்கெழுகூடல் தண்கோல் வேந்தே"
--- (புறம். 58)


"ஓங்கிய சிறப்பின் உயர்ந்தகேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக என்நிலவரை."
--- (புறம். 72)


"நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாடக் கூடலார்
புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுதன்றோ"
--- (கலித். 35: 17,18)


அவை, புணர் கூட்டு, தமிழ்நிலை பெறுதல், புலவர் - போன்றவை சங்கம் உண்மையை உணர்த்தும் குறிப்புகள். கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், நேரடியாகவே 'சங்கம்' என்ற குறிப்பும் சொல்வழக்கும் பல பாடல்களில் இடம் பெற்றுள்ளன. பின் வருபவை அவற்றிற்கு எடுத்துக் காட்டுகள்.


"நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி
நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன் காண்"
--- (திருநாவுக்கரசர் தேவாரம், 6ஆம் திருமுறை, 76.3)


"சங்கத்தமிழ்"
--- (திருப்பாவை, 30)


"சங்க முத்தமிழ்"
--- (திருமங்கை. பெரியதிரு. 3)


"ஈண்டு நலந்தருதல் வேண்டிப் பாண்டியன்
பாடுதமிழ் வளர்த்த கூடல்...."
--- (ஆசிரிய மாலை, புறத்திரட்டு)


"தலைச்சங்கப் புலவர் தம்முன்...."
--- (பெரிய புராணம்)


"சங்கத் தமிழ் மூன்றும் தா"
--- (பிற்கால ஒளவையார், தனிப்படல் திரட்டு)


"அத்திருத்தகு நாட்டினை அண்டர்நாடு
ஒத்திருக்குமென் றாலுரை ஒக்குமோ
எத்தி றத்திலு மேழுல கும்புகழ்
முத்து முத்தமிழுந் தந்து முற் றலால்...."
--- (கம்ப. நாட்டுப்.31)


"மதுராபுரிச் சங்கம் வைத்தும்...."
--- (சின்னமனூர்ச் செப்பேடு)

பிளினி[தொகு]

கபாடபுரம் பாண்டியனுடைய தலைநகராய் இருந்த பிறகு தென்மதுரை தலைநகராக மாறியதற்கு இராமாயணம், மகாபாரதம், கௌடில்யரின் அர்த்த சாத்திரம் ஆகிய நூல்களில் சான்றுகள் கிடைக்கின்றன. கன்னியாகுமரிக்குத் தெற்கில் துறைமுகம் ஒன்று இருந்ததாகப் பிளினி கூறுகின்றார்.


மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வௌவலின், மெலிவு இன்றி மேற்சென்று மேவார் நாடு இடம்படப் புலியொடு வில் நீக்கிப் புகழ் பொறித்ததென்னவர்....
(கலித்.104)


என்று முல்லைக் கலியிலும்,


பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள, வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்திசை யாண்ட தென்னவன்....
(சிலம்பு. காடுகாண்.19-22)
என்று சிலப்பதிகாரத்திலும் இதைப்பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. இவற்றின் அடிப்படையில் நோக்கின், வட மதுரையானது பாண்டிய நாட்டின் தலைநகராவதற்கு முன்பு பாண்டியர்கள் அதற்குத் தென்பால் கபாடபுரத்தில் அமர்ந்தும், அதற்கும் முன்பு மேலும் தெற்கில் அமைந்திருந்த தென்மதுரையிலிருந்தும் ஆட்சி புரிந்து வந்தனர் என்ற வரலாறு உண்மையே என்று பேராசிரியர். கே.கே. பிள்ளை போன்றோர் உறுதிப்படுத்துகின்றனர்.
இதுகாறும் சொல்லப்பட்ட செய்திகளிலிருந்து சங்கம் பற்றிய செய்திகளும் அவற்றிற்கு உறுதுணையாக இருந்த சான்றுகளும், எந்த அளவுக்கு உண்மையென்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

காலம்[தொகு]

மூன்று சங்கங்களும் இருந்த காலத்தைப்பற்றிப் பல்வேறு வகையான கருத்துகள் நிலவுகின்றன. சிலர் மிகவும் முன்பும், சிலர் மிகவும் பின்பும் கொண்டு செல்கின்றனர், இவர்கள் தம் உணர்வுகளின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் இவ்வாறு கூறுகின்றனர். அக, புறச் சான்றுகளின் அடிப்படையில் சிலர், நடு நிலையாகச் சில கருத்துக்களை வழங்கியுள்ளனர். அவ்வாறு, பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளுகின்ற கருத்து, மூன்றாம் சங்கம் முடிவுற்றதாகக் கருதப்படும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலான காலம் சங்க காலம் என்பதாகும்.

நிலமும் பொழுதும்[தொகு]

சங்க நூல்களுள் நுழைவதற்கு முன்பு, அவற்றின் பாடுபொருள், பாடுமுறை பற்றிச் சுருக்கமாக அறிந்து கொள்வோம். வாழ்வின் இருபெரும் பகுதிகளாகிய அகப்பொருளையும் புறப்பொருளையும் பாடுவன சங்க இலக்கியங்கள் என்பதை அறிவீர்கள். ஆணும் பெண்ணும் ஒருவரை யொருவர் கண்டு காதலித்து மணந்து இல்லறம் நடத்தி வருவதை 'அகம்' என்றும் வீட்டுக்கு வெளியேயான பொது வாழ்க்கை முறை, போர், செல்வம், கல்வி, கொடை முதலியன 'புறம்' என்றும் பொருள் இலக்கணம் வகுத்தனர் பண்டைய தமிழர்.


தாம் வாழ்ந்த நிலத்தை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று நான்கு வகையாகப் பிரித்தனர். பாலை என்னும் நிலம் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். பாலை என்பது தனியே என்றும் காணுமாறு இருக்கும் நிலமன்று. முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் மழைவறண்ட காலத்தில் வளம் இழந்து தோன்றுவதையே 'பாலை' என்றனர். ஆகவே பாலை என்பது என்றும் நிலையாக இருக்கும் நிலவகை அன்று. அகப்பொருளின் இலக்கணத்திலும், இலக்கியங்களிலும் பாலைத் திணை உண்டு. ஆகவே அக இலக்கியம் ஐந்திணை உடையது. நிலத்தைப் பாகுபாடு செய்தது போலவே, காலத்தையும் பாகுபாடு செய்திருந்தனர். காலம், பெரும் பொழுது என்றும், சிறு பொழுது என்றும் இருவகையாகப் பிரிக்கப்பட்டது.


ஓராண்டிற்குரிய தட்ப வெட்ப மாறுபாடுகளுக்கேற்ப, கார்காலம், கூதிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம் ஆகிய காலங்களைப் பெரும் பொழுதுகள் என்றனர். காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை ஆகியவற்றைச் சிறு பொழுதுகள் என்று குறித்தனர். பெரும் பொழுதை ஆண்டு, திங்கள், கிழமை, நாள், நாழிகை, நொடி எனவும் பகுத்திருந்தனர்.

அகமும் புறமும்[தொகு]

உலக அமைப்பை முதல், கரு, உரி என மூன்றாக வகுத்து, உலகில் வாழும் மக்களின் வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் பாகுபடுத்தி, அதை இயற்கையுடன் இயைபுறுத்தியது பண்டைய தமிழரின் சிறப்பு என்பதை அறிவீர்கள்.


சங்க இலக்கியங்களுள் பெரும்பாலானவை அகப்பொருளைப் பற்றியே குறிப்பிடுகின்றன. மக்கள் இல்லற வாழ்க்கையையே பெரிதும் பாராட்டி வந்தனர். ஒருவனும் ஒருத்தியும் இணைந்து வாழ்வாங்கு வாழ்வாராயின் அவர்களுக்கு வீடுபேறு தானாக வந்து சேரும் என்பது பண்டைத் தமிழர்களின் கொள்கையாக இருந்தது. இக்காரணத்தினாலேயே திருவள்ளுவரும், அறம், பொருள், இன்பம் என்ற மூன்றை மட்டும் பாடினார். இந்த மரபைப் பின்பற்றியே பிற்காலத்தில் 'இல்லற மல்லது நல்லற மன்று' என்று கொன்றைவேந்தன் குறிப்பிடுகிறது.

இவற்றையும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  • தே. ப. சின்னசாமி (ப- 25),பெருமைமிகு பாண்டியர்களின் வீர வரலாறு,(2001).




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive