பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு
விண்ணப்பிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட
வேண்டிய சான்றிதழ்களுக்கான படிவங்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஏற்படும் கடைசி நேர திண்டாட்டத்தைப்
போக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் இந்த சிறப்பு ஏற்பாட்டைச்
செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும்
கல்லூரிகளில் உள்ள பொறியியல் இடங்கள் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல்
கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச்
சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இம்முறை தமிழகம்
முழுவதும் 570 கல்லூரிகளில் உள்ள 1.75 லட்சம் இடங்களுக்கு இந்த கலந்தாய்வு
நடத்தப்படுகிறது.
இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பூர்த்தி
செய்த விண்ணப்பத்துடன் சில சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்தச்
சான்றிதழ்களுக்கான படிவங்கள் அண்ணா பல்கலைக்கழத்தின் www.annauniv.edu/tnea
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து தமிழ்நாடு மாணவர் சேர்க்கை
செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது:
பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், விண்ணப்பத்துடன் சில சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
அதாவது 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை வெளி
மாநிலத்தில் படித்த தமிழக மாணவர்கள், இருப்பிடச் சான்றிதழ் அளிக்க
வேண்டும். முதல் தலைமுறை மாணவர்களாக இருந்தால், அதற்கான சான்றை சமர்ப்பிக்க
வேண்டும்.
இதுபோல் முன்னாள் ராணுவ வீரர் அல்லது
சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குழந்தைகளாக இருந்தால் அதற்கான சான்றிதழ்,
மாற்றுத் திறனாளி மாணவராக இருந்தால் அதற்கான சான்றிதழ்களை இணைக்க வேண்டும்.
இந்தச் சான்றிதழ்களை முன்கூட்டியே பெற்று வைத்துக் கொள்ளாமல், கடைசி
நேரத்தில் அவற்றை பெற முயற்சிப்பதால் பல்வேறு சிக்கல்களை மாணவர்கள்
சந்தித்து வருகின்றனர். மாணவர்களுக்கு ஏற்படும் இந்தச் சிக்கலைப் போக்கும்
வகையில், இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்களுக்கான படிவங்கள் இப்போது
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இவற்றை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து, உரிய
அதிகாரியிடம் சான்றிதழை பெற்று வைத்துக் கொண்டால் கடைசி நேர
திண்டாட்டத்தைப் போக்கிக்கொள்ள முடியும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...