வாக்குச் சாவடிக்கு வோட்டு போடச் செல்லும்போது
வாக்காளர்கள் செல்போன்களை கொண்டு செல்லக் கூடாது என்று தமிழக தலைமைத்
தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் அறிவித்துள்ளார்.
வாக்குப் பதிவு நிலவரங்களை அவ்வப்போது
தெரிவிக்க வாக்குச்சாவடி அதிகாரிக்கு மட்டும் செல்போன் அனுமதிக்கப்படும்
என்றும் அவர் தெரிவித்தார். இது குறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வியாழக்கிழமை அளித்த பேட்டி: வாக்காளர்களின் ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் மையை உடனடியாக அழித்து விட முடியாது.
ஒரு வாக்குச் சாவடியில் 700 வாக்காளர்கள்
இருந்தால் அந்தச் சாவடிக்கு ஒரு மை பாட்டிலும், அதற்கு மேல் வாக்காளர்கள்
இருந்தால் இரண்டு பாட்டில்களும் வழங்கப்படும். தேர்தலில்
வாக்களித்தால் பெட்ரோலுக்குச் சலுகை போன்ற அறிவிப்புகளை தனியார்
நிறுவனங்கள் வெளியிடுகின்றன. இதற்கும் தேர்தல் ஆணையத்துக்கும் தொடர்பில்லை.
இது போன்ற அறிவிப்புகளை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை.
மக்கள் தாங்களாக முன்வந்து வாக்குகளை அளிக்க
வேண்டும். கடந்த தேர்தலில் 73 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலில்
அதை விட கூடுதலாக வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நூறு
சதவீத வாக்குகள் பதிவாக வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் எதிர்பார்ப்பு.
சர்ச்சைக்குரிய வாக்குச் சாவடிகள் எவை என்பதை
ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பொது பார்வையாளர்கள் முடிவு செய்வார்கள். இது
தொடர்பாக வேட்பாளர்களிடமும் கருத்துகள் கோரப்படுகின்றன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள்: ஒவ்வொரு மின்னணு
வாக்குப் பதிவு இயந்திரத்திலும் 16 வேட்பாளர்களின் பெயர்களை இடம்பெறச்
செய்ய முடியும். 16 வேட்பாளர்களைத் தாண்டினால் 2 இயந்திரங்களை பயன்படுத்த
வேண்டிவரும். 42 வேட்பாளர்கள் போட்டியிடும் தென் சென்னையில் மூன்று
இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தில் 10 ஆயிரத்து 500 மின்னணு வாக்குப்
பதிவு இயந்திரங்கள் பற்றாக்குறையாக உள்ளன. அவற்றை பெற்றுத்தர தேர்தல்
ஆணையத்திடம் கோரி உள்ளோம். மாநிலத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 70 ஆயிரத்துக்கும் அதிகமான
கட்டுப்பாட்டு இயந்திரங்களும் தேவையாக உள்ளன.
மூன்றடுக்கு பாதுகாப்பு: வாக்குப் பதிவு
முடிந்த பிறகு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு
அளிக்கப்படும். வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள
கட்டடங்களுக்கு மத்திய பாதுகாப்புப் படையினரும், கட்டடங்களுக்கு வெளியே
மைதானம் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் தமிழக போலீஸாரும் பாதுகாப்புப்
பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
வாக்குப்பதிவு வரும் 24 ஆம் தேதி காலை 7
மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதற்கு 48 மணி நேரத்துக்கு
முன்பாக அதாவது, வரும் 22 ஆம் தேதி மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம்
ஓய்கிறது என்றார் பிரவீண்குமார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...