“உங்கள் மனதில் என்ன இருக்கிறது?” என்பதை
பகிர்ந்து கொள்ளச் சொல்லி கேட்கிறது பேஸ்புக். “புதிதாக உள்ளதைப் பகிர்க…”
என்று அன்பாகச் சொல்கிறது கூகுள் பிளஸ். நீங்களும்
நட்பு, காதல், மொக்கை, சினிமா என்று பகிர்ந்து கொண்டால் பிரச்சினை இல்லை.
பெரும்பான்மையினரும் அப்படித்தான் பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஆனால் டாடாவின் கார் தொழிற்சாலைக்கு எதிராக
ஏதாவது நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது போஸ்கோவின் நில அபகரிப்பை
எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஓடுகிறதா? அல்லது காஷ்மீரில் இந்திய ராணுவ
ஆக்கிரமிப்பு தவறு என்று நினைக்கறீர்களா? அல்லது ஈழ இனப் படுகொலையை
முன்னின்று நடத்திய இந்திய ஆளும் வர்க்கங்களை திட்டிக்
கொண்டிருக்கிறீர்களா?
இப்படிப்பட்ட பகிர்தல்களை அல்லது
அச்சுறுத்தல்களை எல்லாம் கண்காணித்து, அவை அரசுக்கு எதிரான வடிவம் பெற்று
விடும் முன்பே, முளையிலேயே கிள்ளி எறிந்து, நாட்டை பாதுகாப்பதற்கு இந்திய
அரசு தொடர்ந்து உழைக்கிறது; புதிய, புதிய திட்டங்களை வகுக்கிறது.
ஆதார் அட்டை மூலம் குடிமக்களைப் பற்றிய
விபரங்களை திரட்டி, அட்டையை பயன்படுத்தி அவர்கள் செய்யும் அனைத்து
பரிமாற்றங்களை எல்லாம் பதிவு செய்து வைத்துக் கொள்ளப் போகிறது. ஆனால்,
ஆதார் அட்டை பயன்படுத்தாமலும் மக்கள் பல பரிமாற்றங்களை செய்கிறார்கள், பல
விஷயங்களை நினைக்கிறார்கள், பேசுகிறார்கள். அவற்றால் அரசுக்கும் ஆளும்
வர்க்கங்களுக்கும் ஏற்படக் கூடிய அச்சுறுத்துல்களை ஆரம்பத்திலேயே அடையாளம்
கண்டு ஒழித்துக் கட்டும் முயற்சிகளின் ஒரு பகுதியாக தேசிய இணைய
ஒருங்கிணைப்பு மையம் ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்தியிருக்கிறது. (NCCC)
இணையத்தில் தகவல் பரிமாற்றங்களை கண்காணிப்பதன்
மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உடனுக்குடன் மதிப்பீடு செய்து, முன்
முனைப்புடன் நடவடிக்கை எடுக்க உதவியாக அறிக்கைகளையும் எச்சரிக்கைகளையும்
தயாரித்து போலீசுக்கும், மற்ற பாதுகாப்புப் படையினருக்கு வழங்குவது அதன்
பொறுப்பாக இருக்கும். இதன் மூலம், நினைத்த நேரத்தில் ஒருவரது மின்னஞ்சல்
கணக்கு, பேஸ்புக் கணக்கு, வலைப்பதிவு கணக்கு போன்றவற்றை அணுகி தகவல்களை
பெறுவதற்கு அரசு அமைப்புகளுக்கு வழி செய்யப்படும்.
தேசிய இணைய ஒருங்கிணைப்பு மையம், பல்வேறு இணைய
சேவை வழங்கும் நிறுவனங்களின் (ISP-கள்) கணினிகளுடன் தொடர்பு ஏற்படுத்தி,
அவற்றின் மூலம் பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்களை திரட்டி ஒரே கணினியில்
சேமித்து வைக்கும். அவற்றை ஆய்வு செய்வதன் மூலம் பாதுகாப்பு
அச்சுறுத்தல்களைப் பற்றி உடனுக்குடன் மதிப்பீடுகள் செய்யும் என்று ஒரு
ரகசிய அரசுக் குறிப்பு தெரிவிக்கிறது.
பெரிய அண்ணன் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ரூ 1,000 கோடி செலவில் மின்னணு மற்றும் தகவல்
தொழில்நுட்பத் துறையின் கீழ் ஏற்படுத்தப்படும் இந்த மையத்தில் தேசிய
பாதுகாப்புக் குழு செயலகம் (NSCS), உளவுத் துறை (IB), ரிசர்ச் அண்ட்
அனாலிசிஸ் விங் (RAW), இந்திய கணினி அவசர நடவடிக்கை அணி (CERT-In), தேசிய
தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் (NTRO), பாதுகாப்பு ஆய்வு மற்றும் உருவாக்க
நிறுவனம் (DRDO), DIARA, ராணுவம், கடற்படை, விமானப்படை, தகவல் தொழில்
நுட்பத் துறை என்று பலதரப்பட்ட அரசு அமைப்புகள் பங்கேற்க உள்ளன.
இணைய சேவை வழங்கும் நிறுவனங்களையும் இதில்
ஈடுபடுத்தி, இடைவிடாமல் இணையத்தை கண்காணிப்பதை அரசு உறுதி செய்யும்.
தேவைப்படும் போது மற்ற தனியார் நிறுவனங்களின் சேவைகளும் பயன்படுத்திக்
கொள்ளப்படும். தேசிய இணைய ஒருங்கிணைப்பு மையம் இணைய சேவை வழங்கும் அனைத்து
நிறுவனங்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்து, உள்நாட்டுக்குள்ளும்,
வெளிநாடுகளுக்கும் பாயும் தகவல்களை நுழைவுப் புள்ளியிலேயே கண்காணிக்கும்.
ஆதார் திட்டத்தை செயல்படுத்தும் நந்தன்
நீலகேணி, அந்த தகவல்களை கட்டுப்படுத்தும் அமைப்பு தன்னிச்சையான லாபம்
ஈட்டும் நிறுவனமாக திகழும் என்று சொல்லியிருக்கிறார். அதாவது தனியார்
நிறுவனங்களின் வணிகத் தேவைகளை பொறுத்து, அவர்கள் கொடுக்கும் விலையை வைத்து,
மக்களைப் பற்றிய விபரங்களை எப்படி பயன்படுத்தலாம் என்பது முடிவு
செய்யப்படும். அரசு செயல்பாடுகள் அனைத்திலும் தனியார் பங்களிப்பை
வரவேற்கும் இத்தகைய கொள்கையின்படி இணைய தகவல் பரிமாற்றங்களை கண்காணிக்கும்
அமைப்பும் தனியார் மயமாக்கப்பட்டு மக்களை கண்காணிப்பதை வர்த்தக நோக்கில்
பயன்படுத்தவும் வசதி ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
இதன்படி டாடாவுக்கு எதிரான போராட்டக்காரர்கள்
குறித்து டாடாவும், அம்பானிக்கு எதிரான போராட்டங்கள் குறித்து ரிலையன்சும்
கண்காணித்து நடவடிக்கை எடுக்கலாம்.
“நீங்கள் எப்போது கண்காணிக்கப்படுகிறீர்கள்
என்று தெரியாது. எந்தெந்த அமைப்புகள் மூலம் யாரை, எத்தனை முறை
கண்காணிக்கிறார்கள் என்பதை யூகிக்க மட்டும்தான் முடியும். எல்லோரையும்
எல்லா நேரங்களிலும் கண்காணிக்கிறார்கள் என்பதும் சாத்தியம்தான்.
எப்படியிருந்தாலும் உங்கள் இணைப்பை அவர்கள் எந்த நேரத்திலும் ஒட்டுக்
கேட்கலாம். ‘நீங்கள் ஏற்படுத்தும் ஒவ்வொரு சத்தமும் ஒட்டுக்
கேட்கப்படுகிறது, நீங்கள் செய்யும் ஒவ்வொரு செய்கையும் பதிவு
செய்யப்படுகிறது’ என்ற ஊகத்திலேயே வாழ வேண்டியிருந்தது.”
கம்யூனிச எதிர்ப்பு அவதூறு பிரச்சாரத்துக்காக
அமர்த்தப்பட்ட ஜார்ஜ் ஆர்வெல் என்பவர் எழுதிய 1984 என்ற நாவல் சித்தரித்த
சூழலை அமெரிக்காவும், அதன் வழியொற்றி நடக்கும் இந்தியா போன்ற நாடுகளும்
உருவாக்கி வருவதுதான் வரலாற்றின் நகைமுரண்.
ஆனால் இத்தகைய அச்சுறுத்துல்கள் மூலம் மக்கள்
போராட்டங்களையும் புரட்சிகர அமைப்புகளையும் ஒழித்து விடலாம் என்று அரசு
மனப்பால் குடித்தாலும் அது சாத்தியமில்லை. ஒரு ஊரில் ஓரிருவர் மட்டும்
போராளியாக இருந்தால் இந்தக் கண்காணிப்பு மூலம் கைது செய்யலாம். ஊரே
போராளியாக இருந்தால் என்ன செய்வார்கள்? குண்டு போட்டு அழித்து விடுவார்களா?
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...