Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப் பள்ளிகளுக்கு ஆதரவாய் பிரச்சாரம்: நெஞ்சை நெகிழ வைக்கும் அனுபவங்கள்!

           விருத்தாசலம் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கூட்டம் நடத்தி அரசு பள்ளிகளுக்கு ஆதரவாய் நடத்தப்பட்ட பிரச்சார இயக்கத்தின் பதிவு. நெஞ்சை நெகிழ வைக்கும் அனுபவங்கள்!

             அரசு பள்ளிகள் தரமானது என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது,
மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு போகாமல் தடுப்பது,
தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப்பள்ளிகளுக்கு மாணவர்களை கொண்டு வருவது

என்ற நோக்கத்திற்காக மாணவர்கள் கல்வி உரிமைகான பெற்றோர் சங்கம் சார்பில் பிரச்சார இயக்கம் நடத்தி வருகிறோம்.

“தாய்மொழிக்கல்வி தாய்ப்பால் போன்றது. ஆங்கிலவழி தனியார் கல்வி புட்டிப்பால் போன்றது. கல்வியை காசாக்கும் தனியார் பள்ளிகளை புறக்கணிப்போம்” என பிளக்ஸ் பேனர் அச்சடித்து பிரச்சாரம் செய்து வருகிறோம்.

விருத்தாசலம் தாலுக்காவிற்கு உட்பட்ட கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளில் சில ஊர்களில் பெற்றோர்களை சந்தித்து வகுப்பறையில் கூட்டம் நடத்தினோம். அதில் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வது எதிர் காலத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்த கல்வியில் தனியார்மயத்தை ஒழிக்க உதவும் என நம்புகிறோம்.

1. 2-3-2014 மாலை 5 மணிக்கு விருத்தாசலம் நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் தொட்டிக்குப்பம் என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூட்டம் நடத்தினோம். சுமார் 100 பெண்கள் 50 ஆண்கள் மற்றும் அந்த பள்ளி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏறத்தாழ இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில் தலைமை ஆசிரியர் எ. கீதா , சக பள்ளி ஆசிரியர்கள், பஞ்சாயத்து தலைவர் கஸ்தூரி, வார்டு ஊறுப்பினர் மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு. வீரபாண்டியன், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் சார்பில் தலைவர் திரு.வை. வெங்கடேசன், அன்பழகன், பொருளாளர் வீரகாந்தி, குமார், வேலுமணி, பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் அருந்தவம், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அனைவருக்கும் தேநீர் பிஸ்கட் வழங்கப்பட்டது. நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

கூட்டம் நடைபெற இரண்டு நாட்களுக்கு முன்னதாக பெற்றோர் சங்கத்தின் சார்பில் துண்டு பிரசுரம் அச்சடித்து பள்ளி மாணவர்களிடம் கொடுத்து தங்கள் பெற்றோர்களிடம் கொடுத்து கூட்டத்திற்கு அழைத்து வரவேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியரால் வலியுறுத்தப்பட்டது. நமது உறுப்பினர்களும் ஊர் பொது மக்களிடம் சென்று பிரசுரத்தை விநியோகித்து அரசு பள்ளியின் அருமை பற்றியும், தனியார் பள்ளியின் கொடுமை பற்றியும் தெரிந்து கொள்ள வாரீர் என விநியோகித்தோம்.

தாய்மார்களை விழிப்புணர்வு அடைய சிறப்பு கவனம் கொடுத்து அழைத்தோம்.

பிரசுரத்தில் . . .

பெற்றோர்களே தாய்மார்களே

லாபம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் ஆங்கில வழி தனியார் பள்ளிகள் மாணவர்களை பணம் சம்பாதிக்கும் மெசினாக மாற்றுகிறது. அடிமைத்தனத்தை போதிப்பதுடன் நமது பிள்ளைகளை பிராய்லர் கோழிகளாக வளர்க்கிறது.

அரசு பள்ளிகளில் தாய் மொழியில் படித்தவர்களே அறிவாளிகளாகவும், சிந்தனையாளனாகவும், நாட்டுப்பற்று, மொழிப்பற்று உடையவனவாகவும், சிறந்த மனிதனாகவும் வளரமுடியும்.

கல்வி உரிமை பற்றி விழிப்புணர்வு பெற வாரீர்!

என அச்சடித்து விநியோகித்தோம். ஆசிரியர்களும், பெற்றோர்களும் பெரும் வரவேற்பு அளித்தனர்.

ஆரம்ப கல்விக்காக தனியார் பள்ளிகளுக்கு பிள்ளைகள் சென்று விட்டால் அரசு உயர் நிலைப்பள்ளி, நடுநிலை பள்ளி, மேல்நிலை பள்ளிகளில் மாணவர்கள் வரத்து குறைந்து பல பள்ளிகள் மூடும் அபாயம் ஏற்படும். ஆசிரியர்கள் வேறு ஊர்களுக்கு தூக்கி அடிக்கப்படுவதுடன், வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். இச்சூழலில் அரசு தொடக்க பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதன் அவசியத்தை மக்களிடம் சொல்லும்போது புரிந்து கொள்கிறார்கள். ஆங்கில வழி தனியார் மெட்ரிக் பள்ளியின் மீது உள்ள மோகம், மாயை தகர்கிறது. ஆசிரியர்களும் பெற்றோர்களிடம் அரசு பள்ளியின் கல்வி முறை பற்றி, தரம் பற்றி விளக்கமாக எடுத்துரைக்கும் போது பெற்றோர்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது.

கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் வீரபாண்டியன், மாணவர்கள், கிராமத்து ஏழை பெண்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக எளிமையாக பேசினார். தனியார் பள்ளி வாகனங்களை பிள்ளை பிடிக்கும் வேன் என்றார். “என்ன படிக்கிறோம் என்ற அர்த்தம் தெரியாமல் படிக்கிறார்கள், அங்கு ஆசிரியர்களும் மனப்பாடம் செய்ய மட்டுமே சொல்லி கொடுக்கிறார்கள். செரிக்காத உணவு வாந்தி எடுப்பது போல் படித்ததை வாந்தி எடுக்க சொல்லுகிறார்கள். யாருக்கு எப்படி சொல்லி கொடுக்க வேண்டும் என்ற அனுபவ அறிவு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடையாது. அனைத்திற்கும் காசு கேட்பார்கள், அதுதான் தனியார் பள்ளியின் தரம். அரசு பள்ளியில் அனைத்தும் இலவசம். அரசு பள்ளி மாணவனிடம் காசு கொடுத்து தனியாக பொருள் வாங்க அனுப்பினால் சரியாக பயப்படாமல் சென்று காரியத்தை முடித்து விடுவான். ஆங்கிலவழி தனியார் பள்ளி மாணவன் காசை தொலைத்து விடுவான். கீழா நெல்லி வேரை பற்றி படிக்கும் அரசு பள்ளி மாணவன் அதை பயன் படுத்த முனைவான். அதன் பயன் தெரிந்து படிக்கிறான். ஆங்கிலத்தில் படிப்பவன் பொருள் தெரியாமல் படிக்கிறான். சிந்திக்கும் ஆற்றலை மொழி தடுக்கிறது. நாங்கள் எல்லாம் அரசுப் பள்ளியில் தாய் மொழியில் படித்தவர்கள்” என்று ஆதாரமாக விளக்கி பேசினார். மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் தன்னலம் பாராமல் கல்வி உரிமைக்காக தொடர்ந்து போராடி வருவதை வாழ்த்தி ஆதரித்து பேசினார்.

தலைவர் வெங்கடேசன் அவர்கள் பேசும் போது பெற்றோர் சங்கம் கடந்து வந்த பாதையை விளக்கமாக பேசினார். “அரசு பள்ளி நமது பள்ளி தரமான கல்வி நமது பிள்ளைகளுக்கு கிடைக்க நாம் தான் போராட வேண்டும். அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு காரணமான ஆசிரியர்கள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு கைதானோம்” என்பதை குறிப்பிட்டு பேசினார். “தனியார் பள்ளிகள் காசை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படுகிறது. வாங்கும் பணத்திற்கு ரசீதுகூட கொடுப்பதில்லை. அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட பலமடங்கு பெற்றோர்களை அச்சுறுத்தி பிள்ளைகளை பணயக்கைதியாக்கி கட்டணக் கொள்ளை அடிப்பதை நாங்கள் தான் போராடி தடுத்து நிறுத்தியிருக்கிறோம். தனியார் பள்ளி தாளாளர்கள் மதிப்பெண் அதிகம் எடுக்க வேண்டும், தங்கள் பள்ளி அடுத்த ஆண்டில் அதிக லாபம் ஈட்ட கட்டணத்தை உயர்த்த வேண்டும். அதற்காக தனியார் பள்ளிகள் மாணவர்களை இரவு பகல் பாராமல் படிக்க சொல்லி துன்புறுத்தியதால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்” என்பதை பத்திரிக்கை ஆதாரங்களை காட்டி பேசினார். “அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறும், உரிய அனுபவம் உள்ளவர்கள். நமது பிள்ளைகள் சரியாக படிக்க வில்லையென்றால் நாம் சென்று ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கலாம். நமக்கு சொந்தமான பள்ளிகளை விட்டு தனியார் பள்ளி மோகத்தில் பெற்றோர்கள் பலியாககூடாது. அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும். அதுதான் சரியானது என தாய்மார்கள் நினைக்க வேண்டும்” என பேசினார்.

ஆசிரியர்கள் பேசும்போது, “தாய்மார்கள் பிள்ளைகளை நன்றாக குளிப்பாட்டி, தலை சீவி குறித்த நேரத்திற்கு அனுப்ப வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு எப்படி மெனக்கிட்றீங்க! இங்க மட்டும் மூக்கில் சளி ஒழுக அப்படியே அனுப்புறீங்க, கையில் ஒரு கர்சிப் கொடுத்து அனுப்ப வேண்டாமா?. பையன் சன்னல் வழியாக புத்தகபையை தூக்கி போட்டுட்டு ஒன்னுக்க விடப்போறேன் என சொல்லி வீட்டுக்கு வந்து விடுகின்றனர். நீங்கதான் கண்டித்து மீண்டும் கொண்டு வந்து விடவேண்டும்” என மாணவர்கள் சேட்டையை பொறுப்புணர்வோடு சுட்டிக் காட்டினார்.

“10,11 மணிக்கு பிள்ளைகள் வந்தால் எப்படி அனைத்து பாடங்களையும் படிக்க முடியும்?. கணவன் மனைவி சண்டை போட்டுக் கொண்டு அம்மா பிள்ளையை கூட்டி கொண்டு போய் விடுகிறார். உங்கள் சண்டையால் பிள்ளைகள் படிப்பு பாழாகிறதே என்ற கவலை வேண்டாமா? ராத்திரி பிள்ளைங்க தூங்கியவுடன் வெளியே போய் உங்க சண்டைய வச்சிக்கங்க. நாங்க சொல்லி கொடுப்பது போல் தனியார் பள்ளிகளில் சொல்லி கொடுக்க முடியாது என்பதை அடித்து சொல்ல முடியும். மாணவர்களின் சிந்தனை திறனை வளர்க்கிறோம். இங்கே கம்பியில் கட்டி தொங்க விடப்பட்டிருக்கும் அனைத்து ஓவியங்களும் உங்கள் பிள்ளைகள் தானாக வரைந்தவை பாருங்கள்” என பெற்ற தாய்மார்களில் ஒருவராக அந்த ஆசிரியர் கொட்டி தீர்த்தார்.

பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டு இனிமேல் சரியாக தங்கள் பிள்ளைகளை அனுப்புவதாக கூறிச் சென்றனர்.

வழக்கறிஞர் ராஜு பேசும்போது,

“அரசு பள்ளிகளை மூடுவதற்காக புற்றீசல்களாய் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. புலிமார்க் சீயக்காய்தூளுக்கும் புலிக்கும் சம்பந்தம் இல்லை. அது போல் அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமை சட்டம் என கொண்டு வந்து தனியார் மெட்ரிக் பள்ளிகளில் எல்.கே.ஜி.யில் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு கொண்டு வந்தனர். அங்கு செல்லும் நமது குழந்தைகளை தீண்டப்படாதவர்களாக பள்ளி தாளாளர் நடத்துகிறார்கள். அதற்கான கட்டணத்தை கோடிக்கணக்கில் தனியார் பள்ளிக்கு அரசு வழங்குமாம். அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தாமல் தனியார் பள்ளிகளை வாழ வைப்பதன் நோக்கம், அரசு பள்ளிகளை காலப்போக்கில் இழுத்து மூடவேண்டும் என்ற அரசின் திட்டம் தான் காரணம். இதற்கு அய்யா ஆட்சி, அம்மா ஆட்சி என்பதல்ல. மத்திய மாநில அரசின் தனியார்மயம், தாராளமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைதான் காரணம்.”

“கார் உற்பத்தி செய்தால் வாங்குபவர்கள் குறைவு அனைவரும் பயன்படுத்தும் தண்ணீர், மின்சாரம், மருத்துவம், கல்வி என சேவைத் துறைகளை தனியாருக்கு திறந்து விட்டால் ஆயிரக்கணக்கான கோடிகள் தொடர்ந்து கொள்ளையடிக்க முடியும். அதன் விளைவு தான் இன்று எல்.கே.ஜிக்கு 20,000 ரூபாய் கொடுத்து படிக்க வேண்டிய நிலை, 1 லிட்டர் தண்ணீர் 20 ரூபாய்க்கு வாங்கி குடிக்க வேண்டிய அவலம். ஜூரத்திற்கு கூட 300 ரூபாய் செலவு செய்ய வேண்டும். அரசு அனைவருக்கும் தரமான கல்வியை, மருத்துவத்தை இலவசமாக வழங்கினால், தனியார் மருந்து கம்பெனிகள், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்கள் எப்படி கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்க முடியும். தனியார் பள்ளி இல்லாத அரசியல் வாதிகள் உண்டா? தனியார் கல்லூரிகள் இல்லாத அமைச்சர்கள் உண்டா? அரசு பள்ளிகள் ஏன் புறக்கணிக்கபடுகின்றது என யோசித்து பாருங்கள்.”

“ரசியா, ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்ற வல்லரசு நாடுகளில் எல்லாம் தாய் மொழியில் தான் படிக்கிறார்கள். ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பார்க்காமல் அரசுதான் அனைவருக்கும் கல்வி கொடுக்கிறது. யார் வேண்டுமானாலும் திறமையாளனாக வரமுடியும். இங்குதான் 5,000 ரூபாய்க்கு ஒரு பள்ளிக்கூடம், 10,000 ரூபாய்க்கு ஒரு பள்ளிக்கூடம், 25,000 ரூபாய்க்கு ஒரு பள்ளிக்கூடம் என மாணவர்களை தனியார் பள்ளிகள் கூறு போட்டு வைக்கிறது. சாதி, மதம் வேறுபாடு இல்லாமல் ஏழை, பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் பண்ணையார் வீட்டு பையனும், கூலி விவசாயி மகனும் ஒரே சீருடையில் ஏற்ற தாழ்வில்லாமல் படிப்பதுதான் நாட்டுக்கு சமுதாய மேன்மைக்கு உகந்தது.”

“பணம் சம்பாதிக்கவே கல்வி, மார்க் எடுப்பதே லட்சியம் அதற்கு எந்த வரை முறையும், நேர்மையும் இல்லாமல் எப்படியாவது மாணவர்களை மார்க் எடுக்க வைக்க வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளிகள் அனைத்து முறைகேடுகளிலும் ஈடுபடுவதுடன் மாணவர்களை கசக்கி பிழிகிறது. அதிக சூட்டில் குடிக்கப்படும் காப்பியின் ருசி தெரியாது. அதுபோல் படிப்பின் பலன், சிந்திக்கும் ஆற்றல் அதனை மொட்டுக்களிலியே முடக்குவதுதான் தனியார் பள்ளி ஆங்கிலவழி கல்வியின் தரம்.”

“பன்னாட்டு கம்பெனிக்கு தேவையான உதிரி பாகங்களாக நமது மாணவர்களை எந்த வித உரிமைகளும் அற்ற கூலி அடிமைகளாக பணியாற்ற பழக்கப்படுத்துவதே தனியார் கல்வியின் சாதனை. வேலை வாய்ப்பு இல்லாமையை ஒழிக்க அரசுதான் அதற்குரிய கொள்கையை வகுக்க வேண்டும். பொறியாளர்களும், ஐ.டி. துறையினரும், மருத்துவர்களும் லட்சக்கணக்கில் வேலையில்லாமல் இருக்கின்றனர். இந்த நிலைக்கு யார் காரணம்?”

“அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டால் தனியார் மருத்துவமனைகள், மருந்து கம்பெனிகள், தனியார் மருத்துவ கல்லூரிகள் கொள்ளையடிக்க முடியாது. அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு மக்கள் போக மாட்டார்கள், வருமானம் பாதிக்கும். நகராட்சி, சுத்தமான தண்ணீர் கொடுத்தால் தனியார் தண்ணீர் கம்பெனி நஷ்டம் அடையும், என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.”

“அரசு பள்ளி நமது பள்ளி, பள்ளி மேலாண்மை குழு மூலமாக பெற்றோர்களே நிர்வகிக்கலாம். ஆசிரியர்கள் பாடம் சொல்லி கொடுப்பதை கண்காணிக்கலாம். பள்ளியின் தரத்தை அடிப்படை வசதிகளை நாமே உயர்த்த முடியும். நமக்கு சொந்தமான வீட்டை விட்டு விட்டு வாடகை வீட்டில் குடியேற நினைப்பது மடைமையில்லையா?.அது நிரந்தரமானதா?
என்பதை தாய்மார்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். அரசு பள்ளிகளை பல தலைமுறைகள் பயன்படுத்த, இன்னும் பல ஆசிரியர்கள் இதே பள்ளியில் பணிபுரிய அரசு பள்ளி இருப்பது அவசியம். அதற்கு நமது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும்.”

“ஷு,டை,கலர் யுனிபார்ம்,டாடி,மம்மி என்ற ஆங்கில மோகத்திற்கு அடிமையாகாமல், சொந்தமாக சிந்தித்து செயல்பட வேண்டும். இன்றைக்கு பதவியில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் அரசு பள்ளியில், தாய் மொழியில் படித்தவர்களே. படிப்பு பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல, எதிர்கால சமுதாயம். நேர்மை பண்புகள், ஒழுக்கம் பொறுப்புணர்வு, பெற்றோர்களை பராமரிப்பது, சமூகத்தை நேசிப்பது, இயற்கையை நேசிப்பது, மனிதனின் ஆளுமையை வளர்ப்பது, என அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் இல்லாமல் பணத்துக்காக மட்டுமே வாழ்க்கை, அதற்காக படிப்பு என கல்வியை வியாபாரமாக, மாணவர்களை பண்டமாக மாற்றும் தனியார்மய கல்வியை புறக்கணிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதுதான் சரியான முடிவு.”

கூட்டம் முடிந்தவுடன் வந்திருந்த பெற்றோர்களை சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தனர். ஆசிரியர்களும், ஊர் முக்கியஸ்தர்களும் பெரிதும் வரவேற்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive