சென்னையில் இருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா
உயிரியல் பூங்கா. இது வண்டலூரில் அமைந்திருப்பதால் வண்டலூர் பூங்கா என்றே
பரவலாக அறியப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 15 கி.மீ.
தொலைவில் இது அமைந்துள்ளது. இந்தியாவில் பொதுமக்கள் பார்வையிட அமைக்கப்பட்ட
முதல் உயிரியல் பூங்கா இது என்பது குறிப்பிடத்தக்கது.
1,490 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்கா வன உயிரினங்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் மையமாகவும் விளங்குகிறது.
இங்கு சுமார் 1500 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு
வகையான
விலங்குகள் அவற்றுக்கான சிறப்புக்களோடு தனித்தனி அமைப்புகளாக
வைக்கப்பட்டுள்ளது. விலங்குகளின் வாழ்விடங்கள் மிகவும் சுதந்திரமாக உலாவும்
வகையில் விரிந்து பரந்து காணப்படுகிறது.
இங்கு தனித்தனியாக ஆமைகள் இல்லம் மற்றும் பாம்புகளுக்கான இடங்கள் உள்ளன.
பல வகையான மான்கள், கரடி, ஒட்டகச் சிவிங்கி, யானைகள், வெள்ளைப் புலி,
சிங்கம், குரங்குகள், ஆமைகள், முதலைகள் என ஏராளமன விலங்குகளை ஒரே இடத்தில்
பார்க்க முடியும்.
வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வண்டலூர் பூங்காவுக்கு விடுமுறை
விடப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பூங்காவுக்குள் சுற்றுலாப்
பயணிகள் வர அனுமதிக்கப்படுகிறது.
உயிரியல் பூங்காவுக்கு வரும் பெரியவர்களுக்கு ரூ.20ம், சிரியவர்களுக்கு
ரூ.10ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உயிரியல் பூங்காவின் நுழைவு வாயில்
அருகே உணவகமும் அமைந்துள்ளது. தற்போது வன விலங்குகளின் பாதுகாப்பு கருதி
பொதுமக்கள் தங்களது உணவுகளை பூங்காவுக்குள் கொண்டு செல்ல அனுமதி
மறுக்கப்பட்டுள்ளது. உணவு பைகளை நுழைவாயில் அருகே வைத்துவிட்டு தேவைப்படும்
போது வந்து அங்கேயே அமர்ந்து சாப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வயதான மற்றும் நடக்க முடியாதவர்களும், உயிரியல் பூங்காவை சுற்றுப் பார்க்க
வசதியாக பேட்டரியில் இயங்கும் ஜீப்கள், வேன்கள் சுற்றுலாத் துறையினரால்
இயக்கப்படுகிறது. இதற்காக தனியாக பெரியவர்களுக்கு ரூ.20ம், சிறியவர்களுக்கு
ரூ.10ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில்லாமல், சுதந்திரமாக ஆங்காங்கு
சென்று நிதானமாக பார்த்து வர சைக்கிள்களும் வாடகைக்கு கிடைக்கின்றன. வெகு
தூரம் நடந்து செல்ல வேண்டியிருப்பதால் சைக்கிள் வசதியைப் பயன்படுத்திக்
கொள்வதும் நல்லது.
பூங்காவுக்குள் ஆங்காங்கே சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக விலங்குகள் உள்ள
இடங்கள் குறித்த வரைபடம் அமைக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களான சனி
மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக
இருக்கும். ஒரு நாளைக்கு இங்கு சராசரியாக 4,500 பேர் வந்து செல்கின்றனர்
என்கிறது கணக்கு விவரம்.
பூங்காவுக்கு வருகை தருவோரின் வசதிக்காக ஆங்காங்கே இருக்கைகளும், தங்கும்
கூடாரங்களும், குடிநீர், ஆவின் நிறுவனம் நடத்தும் தேநீர் கடைகளும்
அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மற்றொரு
வரப்பிரசாதமாக யானை சவாரியும் உள்ளது. அதில்லாமல், ஒவ்வொரு நாள் மாலையும் 5
மணியளவில் யானைகளுக்கு உணவூட்டும் நிகழ்ச்சி பார்வையாளர்கள் முன்னிலையில்
நடைபெறுகிறது. உயிரியல் பூங்காவில் உள்ள யானைகளுக்கு பழங்கள், புற்கள்
போன்றவை அளிப்பதை நாம் நேரடியாகப் பார்த்து மகிழலாம்.
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குச் செல்ல முக்கிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...