Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: கவிக்கோ அப்துல் ரகுமான்


மரபுக்கவிதையின் வேர் பார்த்தவர்
புதுக்கவிதையின் மலர் பார்த்தவர்
என்று பாராட்டப்பெறும் சிறப்புக்குரியவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.
      'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்து இயங்கியவர். பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
           1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
பிறப்பு: மதுரை வைகை ஆற்றின் தென்கரையில் உருதுக்கவிஞர் மஹி என்னும் சையத் அஹமத் - ஜைனத் பேகம் இணையருக்கு நவம்பர் 2 ஆம் நாள் 1937 ஆம் ஆண்டு பிறந்தவர்.
தனது தொடக்கக் கல்வியையும், உயர்நிலைக் கல்வியையும் மதுரையில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயின்று மதுரை தியாகராசர் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் தேர்ச்சி அடைந்தார். அதன்பின் அங்கேயே இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.  அப்பொழுது முனைவர் மா. இராசமாணிக்கனார், ஔவை துரைசாமி, அ. கி. பரந்தாமனார், அவ்வை நடராசன், அ. மு. பரமசிவானந்தம் ஆகிய தமிழறிஞர்களிடம் பயின்றார்.
சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றிய சா.வே.சுப்பிரமணியன் நெறிகாட்டலில் புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
பணி: தொடக்கத்தில் தியாகராசர் நடத்திய தமிழ்நாடு என்னும் இதழில் மெய்ப்புத் திருத்துநராகச் சிலகாலம் பணியாற்றினார். அதன்பின் 1961 ஆம் ஆண்டு வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் சிற்றுரையாளர், விரிவுரையாளர், பேரூரையாளர், பேராசிரியர் எனப் படிப்படியாக உயர்ந்து 20 ஆண்டுகள் தமிழ்த் துறையின் தலைவராகப் பணியாற்றி 1991 ஆம் ஆண்டு விருப்ப ஒய்வு பெற்றார்.
மே 2009 முதல் 2011 வரை தமிழ்நாடு வஃக்ப் வாரியத்த தலைவராக பணியாற்றினார். இப்போது முழு நேர இலக்கிய பணியில் செயல்பட்டு வருகிறார்.

படைப்புகள்:
எழுதிய நூல்கள்:  37
கவிதை தொகுப்புகள்: 12
1974 பால்வீதி - கவிதைப் தொகுப்பு
1978 நேயர் விருப்பம் - கவிதைப் தொகுப்பு
1985 கரைகளே நதியாவதில்லை - கட்டுரை (ஜூனியர் விகடனில் வெளிவந்த தொடர்)
1986 அவளுக்கு நிலா என்று பெயர் - கட்டுரை (ஜூனியர் விகடனில் வெளிவந்த தொடர்)
1986 முட்டைவாசிகள் - கட்டுரை (ஜூனியர் விகடனில் வெளிவந்த தொடர்)
1986 மரணம் முற்றுப்புள்ளி அல்ல - கட்டுரை (ஜூனியர் விகடனில் வெளிவந்த தொடர்)
1987 விலங்குகள் இல்லாத கவிதை - கட்டுரை
1987 சொந்தச் சிறைகள் - வசன கவிதை (ஜூனியர் விகடனில் வெளிவந்த தொடர்)
1989 புதுக்கவிதையில் குறியீடு  - ஆய்வு - முனைவர் பட்ட ஆய்வேடு
1989 சுட்டுவிரல் - பாடல் (முத்தாரத்தில் வெளிவந்த தொடர்)
1990 கம்பனின் அரசியல் கோட்பாடு - ஆய்வு - அமரர் ஏவி.எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு
1995 ஆலாபனை - கவிதை - சாகித்திய அகாதமி விருது பெற்றது. (பாக்யா இதழில் வெளிவந்த தொடர்)
1998 பித்தன் - கவிதை (குங்குமத்தில் வெளிவந்த தொடர்)
1998 விதைபோல் விழுந்தவன் - கவியரங்கக் கவிதைகள் - அண்ணா கவியரங்கக் கவிதைகள்
1998 முத்தமிழின் முகவரி - கவியரங்கக் கவிதைகள் - மு. கருணாநிதியைப் புகழ்ந்து பாடியவை
1999 பூப்படைந்த சபதம் - கட்டுரை
1999 தொலைப்பேசிக் கண்ணீர் - கட்டுரை
2003 காற்று என் மனைவி - கட்டுரை
2003 உறங்கும் அழகி - கட்டுரை
2003 நெருப்பை அணைக்கும் நெருப்பு - கட்டுரை
2003 பசி எந்தச் சாதி - கட்டுரை
2003 நிலவிலிருந்து வந்தவன் - கட்டுரை
2003 கடவுளின் முகவரி - கட்டுரை
2003 முத்தங்கள் ஓய்வதில்லை - கட்டுரை
2004 காக்கைச் சோறு - கட்டுரை
2004 சோதிமிகு நவகவிதை - கட்டுரை
2004 மின்மினிகளால் ஒரு கடிதம் - கவிதை (கஜல் கவிதைகள்)
2005 தாகூரின் 'சித்ரா' - மொழிபெயர்ப்பு
2005 ரகசிய பூ - கவிதை
2005 சிலந்தியின் வீடு - கட்டுரை
2005 இது சிறகுகளின் நேரம் - கட்டுரை (ஜூனியர் விகடனில் வெளிவந்த தொடர்)
2006 இல்லையிலும் இருக்கிறான் - கட்டுரை
2006 பறவையின் பாதை - கவிதை
2007 இறந்ததால் பிறந்தவன் - கவியரங்க கவிதை (முதல் தொகுதி)
2008 தட்டாதே திறந்திருக்கிறது - கட்டுரை
2010 எம்மொழி செம்மொழி - கட்டுரை
2010 பூக்காலம் - கட்டுரை
2011 தேவகானம் - கவிதை
கண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லை - கவிதை
2013 பாலை நிலா - கவிதை

மொழி பெயர்ப்பு: 01
01. தாகூரின் 'சித்ரா' (2005)
ஆய்வு நூல்கள்: 02
01. புதுக்கவிதையில் குறியீடு (முனைவர் பட்ட ஆய்வேடு, 1989)
02. கம்பனின் அரசியல் கோட்பாடு (ஏவிம் அறக்கட்டளைச் சொற்பொழிவு, 1990)
பதிப்பித்த நூல்கள்: 06
01. குணங்குடியார் பாடற்கோவை (1980), மேலும் 5 சிறு கவிதைத் தொகுதிகள்
ஆய்வு கட்டுரைகள் : 15
ஆய்வு சொற்பொழிவுகள்: ஐம்பதுக்கும் மேல்
கவிதை வாசிப்புக்கும், சொற்பொழிவுக்கும் சென்று வந்த நாடுகள்: இலங்கை, மலேயா, சிங்கபூர், பேங்காக், ஆங்காக், ஐக்கிய அரபு எமிரேட்டு, சவுதி அரேபியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, குவைத், பக்ரைன்.
விருதுகள்:
குன்றக்குடி அடிகளார் - பாரிவிழா விருது கவியரசர்(1986)
தஞ்சைத்தமிழ்ப் பல்கலை - தமிழன்னை விருது.(1989)
தமிழக அரசு - பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது(1989)
சாகித்திய அகாதெமி - சாகித்திய அகாதெமி விருது.(1999)
தி.மு.க - கலைஞர் விருது (ஒரு இலட்சம் ரூபாய்)(1997)
கொழும்பு கம்பன் கழகம் (கொழும்பு) - கம்ப காவலர்(2006)
கம்பன் கழகம், சென்னை - கம்பர் விருது(2007)
தினதந்தி - சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசு(2007)
பொதிகை தொலைக்காட்சி, சென்னை - பொதிகை விருது(2007)

கவிதை:
வருடம் தவறாமல்
குழந்தைகள் தினத்தைக்
கொண்டாடுகிறவர்களே!
தினங்களைக் கொண்டாடுவதை
விட்டு விட்டுக்
குழந்தைகளை எப்போது
கொண்டாடப் போகிறீர்கள்?
என்பது குழந்தைத் தொழிலாளர் என்னும் சமுதாயக் குறையை அவர் சாடியுள்ள கவிதை சிறப்புக் குரியதாகும். இவைத்தவிர புதினம், கட்டுரை, கடிதங்கள் ஆகியவையும் எழுதியவர்.

பாராட்டுக்கள்:
வெற்றி பல கண்டு நான்
விருது பெற வரும் போது
வெகுமானம் என்ன
வேண்டும் எனக் கேட்டால்,
அப்துல் ரகுமானைத் தருக என்பேன்'
- முத்தமிழர் அறிஞர் டாக்டர் கலைஞர்

'நான் கலீல் ஜிப்ரானைப் படிக்கும் போதெல்லாம் 'தமிழில் இப்படி எழுத யாருமில்லையே' என ஏங்குவேன். அந்த ஏக்கம் இப்போது இல்லை. இதோ, அப்துல் ரகுமான் வந்துவிட்டார்.
இவருடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயா்த்து வெளியிட்டால், 'யார் இந்தக் கவிஞன்?' என்று உலகம் விசாரிக்கும்.'
- கவியரசு கண்ணதாசன்.

'கம்பனுக்கும் தோன்றாத கற்பனைகள் ரகுமானுக்கு தோன்றுகின்றன'
- வாகீசக் கலாநிதி கி.வா.ஜ.

இன்று பலர் புதுக்கவிதை எழுதுகின்றார்
எழுதுகின்ற கவிஞர்களுள் அப்துல் ரஹ்மான்
முன் நிற்கும் மோனையைப் போல் முன் நிற்கின்றார்
முன்னேறி முன்னேறி வளர்ந்து, தம்மைப்
பின்பற்றும்படி செய்து வருவதோடு
பெரும்புகழுக் குரியவராய் விளங்குகின்றார்
மன்றத்தில் இவரைப் போல் புதுமையாக
மற்றவர்கள் பாடுதற்கே முடியவில்லை
- உவமைக் கவிஞர் சுரதா, 'நேயர் விருப்பம்' முன்னுரையில்

ஒடிந்து விழும் சிந்தனையோ, விஞ்ஞானத்தை
ஒதுக்குகின்ற பழமைகளோ, சமுதா யத்தில்
படிந்திருக்கும் தீமைகளை வெள்ளைத் தாளில்
பதிவு செய்யும் பாடல்களோ நூலில் இல்லை
உடனடியாய் இந்நூலை ஆங்கிலத்தில்
ஒழுங்காக மொழிபெயர்த்தால் ரகுமான் கீர்த்தி
கிடுகிடென மேனாட்டில் பரவும் அந்தக்
கீா்த்தியினைப் பெறும் தகுதி இவருக் குண்டு
- உவமைக் கவிஞர் சுரதா, 'நேயர் விருப்பம்' முன்னுரையில்
ரகுமான்! கவியரங்களில் நீ எப்போதும் பிறரை வெல்வாய், இன்று உன்னையே நீ வென்றுவிட்டாய்!'
- தமிழறிஞர் அ.ச.ஞா.




2 Comments:

  1. Ulagil Thonria muthal manithan nam Tamiliname!

    ReplyDelete
  2. Nice please keep some one updates daily.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive