"வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அரசு
துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்படும் நேரத்தை குறைக்க வேண்டும்,'
என, ஆசிரியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக, பகல்
முழுவதும் கடுமையான வெயில் காணப்படுகிறது; இரவு நேரங்களில் புழுக்கம்
அதிகமாக உள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் துவங்காத நிலையிலும், வெயிலின்
கொடுமை வாட்டி வதைப்பதால், பொதுமக்கள் திணறுகின்றனர். அம்மை, வெக்கை நோய்
போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.
மாணவர்களின் உடல் நலன் கருதி, அரசு
துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்படும் நேரத்தை குறைக்க
வேண்டும் என ஆசிரியர்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது. வெயிலின்
தாக்கத்தால், வகுப்பறைகளில் வெப்பம் தகிக்கிறது. பல பள்ளிகளில், மின்விசிறி
வசதி இல்லை; மின்விசிறி இருந்தாலும், மின்சாரம் அடிக்கடி தடைபடுகிறது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, முன்னதாகவே கோடை விடுமுறை
விடப்படும் நிலையில், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு மே மாதம்
மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 220 நாட்கள், பணி நாட்களாக
இருப்பதால், ஏப்., 30 வரை துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட
வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்கள் கூறுகையில்,
"அடுத்த மாதம் 30 வரை, துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் செயல்பட
வேண்டும். வெயிலின் தாக்கத்தால், ஆறு முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள்
அவதிப்படுகின்றனர். அவர்களது உடல் நலன் கருதி, காலை 8.30 முதல் மதியம் 1.00
மணி வரை என வகுப்பு நேரத்தை குறைக்க வேண்டும். அடுத்த கல்வியாண்டில்
இருந்து, முப்பருவ தேர்வை முன்னதாக திட்டமிட்டு, மார்ச் மாதமே நடத்தி,
ஏப்., மே மாதங்களில் கோடை விடுமுறை அளிக்க வேண்டும்,' என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...