12 ஆம் வகுப்பு பரீட்சை முடிந்துவிட்டது. இனி
அடுத்து படிக்கப்போகும் படிப்பைப்பற்றியோ, அல்லது எதிர்காலம் என்ன என்பது
பற்றியோ வீட்டிலும், நண்பர்கள் மத்தியிலும், சந்திக்கும்
நபர்களிடமிருந்தும் பலவிதமான ஆலோசனைகள் இலவசமாக கிடைத்தவாறு இருக்கும்.
நன்கு படித்த மாணவ மாணவிகள் பெரும்பாலும் இந்த
படிப்பைத்தான் படிக்க வேண்டும் என்பதில் ஓரளவு தெளிவான முடிவுகளுடன்
இருப்பர். இருந்தாலும் கல்லூரியை தேர்ந்தெடுப்பது குறித்து குழப்பங்கள்
இருக்கும். அதே நேரத்தில் தேர்வு முடிவுகள் வந்தவுடன் பார்த்துக்கொள்ளலாம்
என்று சராசரி படிப்புடைய மாணவ மாணவிகள் பலரும் இருப்பார்கள்.
சூழ்நிலை
குறைவான மதிப்பெண்கள் எடுத்த பலரும் பொருளாதார
வசதியின் காரணமாக நன்கொடைகளை வழங்கி நல்ல கல்லூரியை
தேர்ந்தெடுத்துவிடுகின்றனர், அதே போன்று நல்ல மதிப்பெண்கள் எடுத்த சிலர்,
கல்விக்கட்டணங்கள் மற்றும் கல்லூரியின் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களால் செலவு
செய்ய முடியாது, என்று வேறு படிப்புகளில் படிக்க வைப்பதும், அல்லது வேறு
கல்லூரியை தேர்ந்தெடுப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
நல்ல இலட்சியங்களுக்கும், சிறப்பான
சாதனைகளுக்கும் பொருளாதாரம் எப்பொழுதும் தடையாக இருந்துவிடுவதில்லை,
என்பது பெரும் சாதனையாளர்களின் வாழ்வில் இருந்து நாம் கற்றிருக்கிறோம்.
பணம் இருக்கிறது என்பதற்காக படிக்க முடியாத பாடத்தை எடுத்துவிட்டு,
அரியர்களுடன் பொழுதையும், பணத்தையும் செலவு செய்து கொண்டிருக்கும் எத்தனையோ
பேரை நாமும் கண்டிருப்போம். பணம் இருக்கிறது என்றாலும், இல்லை என்றாலும்,
பெருமைக்காக படிக்காமல் தன்னால் முடிந்ததை படிக்கவேண்டும் என்பதை உணர
வேண்டும். தன்னால் படிக்க முடிந்தது பொருளாதாரத்தால் தடை பட்டால் என்ன
செய்வது?
பொருளாதாரம்
இன்றைக்கு நன்கு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு
வங்கிகள் கடன் உதவி அளிக்கிறது. வங்கிக்கடன் மூலம் தான் விரும்பும் படிப்பை
படிக்கலாம். இருந்தாலும், சில வங்கிகளின் சில நிபந்தனைகள் அதையும்
எட்டாக்கனியாக்கிவிடுகின்றது. சில நல்ல உள்ளங்களின் உதவியோடும்,
அறக்கட்டளைகளின் உதவித்தொகையின் மூலமும் சிலர் படிப்பைத்தொடர்கின்றனர்.
இவை தவிர்த்து தற்போதைய கல்லூரி நேர
மாற்றங்களின் விளைவாக கூடுதலான நேரம் கிடைக்கிறது. இதன் மூலம் பகுதி நேர
வேலை வாய்ப்பினை பெற்று அதனால் கிடைத்த பொருளாதாரத்தைக் கொண்டு முடிந்த
அளவு கல்விச் செலவுகளை ஈடு செய்ய முயற்சிக்கலாம். இவை யாவும் கை கூடவில்லை
என்றாலும், மனம் தளராமல் கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல், கிடைத்த
வாய்ப்பில் எது தனது விருப்பத்திற்கு ஏற்ற படிப்பினை சார்ந்து வருகிறது என
கண்டுபிடித்து, அதனை வெற்றிகரமாக படித்து, பிறகு அதன் மூலம் பெறக்கூடிய
பலன்களைக் கொண்டு தனது சரியான எண்ணங்களின் வழியாக வெற்றி நடை போடலாம்.
குழப்பங்கள்
படிப்பினை தேர்ந்தெடுத்து வைத்திருப்பவர்களை
விட, மதிப்பெண்கள் வந்தவுடன் முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று
நினைப்பவர்களுக்குத்தான் பல குழப்பங்கள் வரும். ஏனெனில் கல்லூரியை
தேர்ந்தெடுப்பதா? அல்லது பாடத்தை தேர்ந்தெடுப்பதா? அல்லது பாடத்திற்கு ஏற்ற
கல்லூரியை தேர்ந்தெடுப்பதா? எந்த ஊரில் படிப்பது? என பல கேள்விகள் அதிக
அளவில் இவர்களை துளைக்கும். ஏனெனில் பலரும் ஏன் படிக்கிறேன், எதற்கு
படிக்கிறேன் என்று தெரியாமலேயே படிப்பை தேர்ந்தெடுத்து, அது குறித்த பெரிய
கவலையோ, கலக்கமோ இன்றி இறுதியாண்டு வரை வந்துவிடுகின்றனர். இறுதியாண்டில்
வேலை, அடுத்து என்ன செய்வது என்பது போன்ற சிந்தனைகள் வரும்போதுதான், தங்கள்
படிப்பைப்பற்றி பெரிய அளவில் சிந்திக்கின்றனர். அப்படி சிந்திப்பவர்கள்
இந்த வகையைச் சார்ந்தவர்களே.
இப்படிப்பட்ட குழப்பத்தில் உள்ளவர்கள் எந்த ஓரு
சூழ்நிலையிலும் அதிக செலவுகளை ஏற்படுத்தும் பொறியியல் போன்ற படிப்புகளை
தேர்ந்தெடுத்துவிடக்கூடாது. சில இலட்சங்கள் செலவு செய்துவிட்டு, அந்தத்
துறை பிடிக்கவில்லை, என அதனை விட்டுவிட்டு வேறு துறையை தேர்ந்தெடுப்பது
மிகவும் வலி தரக்கூடியது. ஆம், ஏனெனில் பெற்றோர் ஓவ்வொரு பருவத்திற்கும்
எவ்வளவு கடினப்பட்டு பணம் ஏற்பாடு செய்து தர வேண்டியது இருக்கும் என்பதை
எண்ணி பார்க்க வேண்டும். பிள்ளையின் எதிர்காலம் பற்றிய மகிழ்வான
எண்ணத்துடன் பல நெருக்கடிகளைச் சந்தித்து கடன் பெற்று, எவ்வளவு ஆசையுடன்
நம்மை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களை துன்பப்பட வைத்து
படித்துவிட்டு, வேண்டாம் என்று சொல்வதை விட, நிதானத்துடன் தயக்கம் குறைத்து
நல்ல ஆலோசனையைப் பெற முயற்சிக்கலாமே.
தோல்வி
எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லையே
என்ற வருத்ததை விடவும், மிகுந்த துன்பத்தை தரக்கூடியதாக கருதப்படுவது
தேர்வில் தோல்வி அடைவதாகும். தோல்வி அடைவதனால் ஏற்படும் கவலையை விட, அந்த
தோல்விக்கு பிறர் கூறும் அறிவுரைகள், மேலும் பயத்தை உண்டாக்கி விடுகிறது.
அது போல சில பெற்றோர் தங்கள் பிள்ளைகள், தேர்வில் அடையும் தோல்வியை, தங்கள்
குடும்பத்தின் தோல்வியாக கருதி, தோல்வியடந்த உள்ளத்தை மேலும்
காயப்படுத்திவிடுகின்றனர். உண்மையில், வாழ்வும் வாய்ப்பும் அத்துடன்
முடிந்துவிடுவதில்லையே. பள்ளி செல்லாதவர்கள் எல்லாம் சாதிக்கும்பொழுது,
தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் சாதிப்பதும் எளிதானது அல்லவா.
தோல்வியை மான, அவமானமாகக் கருதுவதை பெற்றோரும்,
உறவினர்களும், மாணவர்களும் கைவிட வேண்டும். தோல்வி என்பது நிலையானது அல்ல,
கடந்து வரக்கூடியதுதான் என்று எண்ண வேண்டும். தேர்வில் ஓருவேளை தோல்வி
அடைந்தாலும், மாணவர்களும், இத்துடன் நம் எதிர்காலம் முடிந்துவிட்டது என்
சிந்திக்காமல் அடுத்து வரும் வாய்ப்புகள், தங்கள் வாழ்வில் ஒளியேற்றும்
என்று நம்பிக்கையும், விடா முயற்சியும் கொள்ளவேண்டும்.
மதிப்பெண்களை வைத்து வாழ்க்கை இல்லை என்பதை
பெற்றோரும், மாணவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்களுடைய
நல்ல விருப்பங்களை, இலட்சியங்களை வைத்துதான், தங்களுடைய சிறப்பான
எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும். மதிப்பெண்களை வைத்து அல்ல.
உற்சாகத்தையும், ஊக்கத்தையும் என்றும் கைவிடாமல் போராடினால், வெற்றி நமதே!
Congrats Everybody! Who all going to take their higher studies! All the best!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete