தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு
அதிகாரிகள் அரசியல் கட்சியினருடன் தொடர்பு வைத்திருக்கக்கூடாது என்று சேலத்தில்
நேற்று நடந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் மகரபூஷணம் எச்சரிக்கை விடுத்தார்.
சேலம் பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கான
முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. வாக்குச்சாவடிக்கு தேவையான
அடிப்படை வசதிகள், பதட்டமான வாக்குச்சாவடி எவை? போலீஸ் பாதுகாப்பு, வாக்கு
எண்ணிக்கை நடைபெறும் மையம் போன்றவை குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர்
மகரபூஷணம் அவ்வபோது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில், தேர்தல் பணியில்
ஈடுபடும் மண்டல அதிகாரிகளுக்கான ஆய்வுகூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று
நடந்தது.
இந்த கூட்டத்தில், மாவட்ட தேர்தல்
அதிகாரியும், கலெக்டருமான மகரபூஷணம் பேசியதாவது:–
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள்
அனைவரும் தேர்தலின்போது தங்களது பணிகள் என்ன? என்பதை முதலில் தெரிந்து வைத்திருக்க
வேண்டும். வாக்குச்சாவடியில் மின்சார வசதி, குடிநீர் வசதி, பாதுகாப்பு
ஏற்பாடுகள் ஆகியவை தயாராக வைத்திருக்க வேண்டும். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு
முன்பு எந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா? என்றும், வெப்கேமரா சரியாக இயங்குகிறதா? என்றும்
கண்காணிக்க வேண்டும்.
ரகளையில் ஈடுபட்டால்...
ஒருவேளை சரியாக செயல்படவில்லை என்றால்
உடனடியாக மாற்று ஏற்பாடுகள் என்ன செய்யலாம்? என்பதை யோசித்து நடவடிக்கை எடுக்க
வேண்டும். வாக்குப்பதிவுக்கு ஒருநாளைக்கு முன்பே மண்டல அலுவலர்கள் சம்பந்தப்பட்ட
வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதா? என்பதை
கண்காணிக்க வேண்டும். தேர்தலுக்கு தேவையான பொருட்கள் சரியாக இருக்கிறதா? என்று பார்த்து
கொள்ள வேண்டும்.
மண்டல அலுவலர்களுக்கு உட்பட்ட தேர்தல்
பணியில் யார்? யார்? ஈடுபடுகிறார்கள் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும், வாக்குப்பதிவின்போது
2 மணி நேரத்திற்கு ஒருமுறை பதிவான வாக்குகள் சதவீதம் குறித்து மாவட்ட
நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வாக்குச்சாவடியில் ரகளையில் ஈடுபடும்
அரசியல் கட்சியினர் குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க
வேண்டும்.
நடவடிக்கை
தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள்
யாரும் அரசியல் கட்சியினருடன் தொடர்பு வைத்திருக்கக்கூடாது. அதையும் மீறி தொடர்பு
வைத்திருந்து அரசியல் கட்சியினருக்கு சாதகமாக செயல்படுவது தெரியவந்தால்
சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...