பதினெட்டு வயது மலரத் துவங்கி விட்டால், என்னவோ தெரியவில்லை, உள்ளத்தில் 'நயாகரா' நீர் வீழ்ச்சி ஊற்றெடுக்கத் துவங்கும். உற்சாக கனவுகள், புது வடிவம் பெறும். வாழ்க்கையில் எந்த ஒரு துவக்கத்துக்கும், இந்த பதின் வயது, நுழைவு வாசலை திறந்து வைக்கிறது.
நாட்டின் தலையெழுத்தை மாற்றியமைக்கக் கூடிய சக்தி, இந்த வயதில் நிர்ணயிக்கப்படுகிறது என்றால், நம் சுட்டு விரல், ஆட்சிப் பீடத்தின் ஒரு கால் என்பதை புரிய வைக்கிறது.ஜனநாயக நாடான இந்தியாவின் சிறம்பம்சமே இது தான். வரும் லோக்சபா தேர்தல், தமிழகத்தில் ஏப்., 24ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, கட்சிகள், தங்களின் பணிகளில் மும்முரம் காட்டியுள்ளன. புதிதாக, 10 கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், புதிய வாக்காளர்களின் பங்கு, அவர்கள் எதிர்பார்க்கும் வருங்காலம் ஆகியவை குறித்து, கோவை குனியமுத்துார் கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், புதிதாக ஓட்டுப்பதிவு செய்ய இருக்கும் மாணவியரை சந்தித்தோம்.லோக்சபா தேர்தல் என்றதும், தொகுதிகள் முதல், கடைக்கோடி தொண்டன்கள் வரை அலசி ஆராயத் துவங்கி விட்டனர். இதில், முதலாம் ஆண்டு மாணவியர் தெரிவித்த கருத்துக்கள், புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் விதம் இருந்தது.
கோகிலா: ஓட்டுப்பதிவின் அருமை இப்போது தான் புரியத் துவங்கியுள்ளது. என்னுடைய ஓட்டு, புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் விதையாக இருந்தால், அதை விட சந்தோஷம் கிடைத்து விடாது. இலவசங்களை நீக்கி விட்டு, மக்களுக்கு பயன்படுத்தும் திட்டங்களை, மத்தியில் யார் ஆட்சி அமைக்கிறார்களோ, அவர்கள் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும்.வீணா: நாளிதழ்களை பார்த்தாலும், தொலைக்காட்சி செய்திகளை பார்த்தாலும், ஊழல் முக்கியத்துவம் பெறுகிறது. மக்கள் வரிப்பணத்தை கபளீகரம் செய்வது கவலையளிக்கிறது. இளைஞர்கள் நலனுக்கு ஏற்ப, புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். காணும் இடங்களில் எல்லாம் ஊழல் தென்படுவதால், ஓட்டுப் போடுவதா, நோட்டா பட்டனை அழுத்தி விடலாமா? என்று கூட எண்ணத் தோன்றுகிறது.அபிராமி: பெண்களுக்கு எதிரான வன்முறைகள், நாடெங்கும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க கடுமையான சட்ட திட்டங்களை கொண்டு வர வேண்டும். குறைந்த பட்ச தண்டனை வழங்குவதால், மீண்டும், மீண்டும் தவறுகள் ஏற்பட வழி வகுக்கிறது. இதை விடுத்து, கடும் தண்டனை தரும் பட்சத்தில், குற்றங்கள் போதியளவில் குறைய வாய்ப்புள்ளது. இதை உறுதிப்படும் கட்சிக்கு, என்னுடைய ஓட்டு இருக்கும்.சரண்யா: மாணவர்களின் நலனின், வரப்போகும் மத்திய அரசு, போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். படித்து, முடித்து, கல்லுாரியில் இருந்து வெளியேறும் மாணவர்கள் சிலர் வேலை வாய்ப்பு இல்லாமல் அல்லல்படுகின்றனர். இந்தியாவின் வளர்ச்சிக்கு, இளைஞர்களை அதிகம் பயன்படுத்தினால், எல்லாத் துறைகளிலும் இந்தியா பெயரெடுக்கும்.ஸ்ருதி: மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை வழங்குவதால், மக்கள் சோம்பேறியாகத் தான் மாறுகின்றனரே தவிர, வளர்ச்சியை நோக்கி சிந்திப்பதில்லை. இலவசங்கள், சிந்திக்க விடாமல் தடுக்கும் குணநலன் கொண்டது. எனவே, மக்கள் வரிப்பணத்தில், இலவசங்களை வாரி இறைப்பதை விட, அடித்தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்.ஹர்ஷனா: நாட்டின் தலையெழுத்தை மாற்றக் கூடிய சக்தி, நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் அரசு, நாட்டு மக்களுக்கு உண்மையான பலனை தருமா? என ஒன்றுக்கு ஆயிரம் முறை யோசித்து, பொன்னான ஓட்டுகளை பதிவு செய்ய வேண்டும். மூளைச்சலவை செய்ய பலர் காத்துக் கொண்டிருப்பர். அவர்களின் பேச்சுக்கு இடம் கொடுக்காமல், உங்கள் மனதில் இருப்பததற்கு உரு கொடுங்கள்.சூர்யா: வேட்பாளருக்கு உரிய தகுதிகள் இருக்கிறதா; லோக்சபாவுக்கு சென்று நம்முடைய குறைகளை பேச ஏதுவானவரா: மொழியறிவு இருக்கிறதா? என்பதை சிந்திக்க வேண்டிய தருணம் இது. இதில் கோட்டை விட்டு விடக் கூடாது. ஏனென்றால், ஒவ்வொரு ஓட்டும் விலை மதிப்பில்லாதது.பவித்ரா: மக்களைப் பற்றி கவலைப்படக் கூடிய ஆட்சியாளர்கள் குறைவாகத் தான் இருக்கின்றனர். மக்களை ஓட்டுப்பதிவுக்கு மட்டுமே பயன்படுத்தாமல், அவர்களுக்கு தேவையான நலன்களை செய்து கொடுக்க வேண்டும். இதில், யார் சிறந்தவர்கள் என்பதை தீர்மானித்து, அவர்களுக்கு இருக்கும் என் ஓட்டு. இவ்வாறு, மாணவியர் பேசினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...