பிள்ளையை பெற்றால் மட்டும் போதுமா? பேணி
வளர்க்க வேண்டாமா? என்பது பலரும் அறிந்த ஒரு கருத்து. குழந்தை வளர்ப்பு
என்பது சவால்கள் நிறைந்த ஒரு போராட்டம் என்பதும் பலரின் எண்ணம்.
மிருகங்கள், ஏதோ குட்டிப் போடுகின்றன, சிலகாலம் பராமரிக்கின்றன. அவற்றின்
பணி அவ்வளவுதான். ஆனால், மனிதனின் நிலை அப்படியில்லை. அவன் ஏற்படுத்திய
உலகம், வாழ்க்கை முறை மற்றும் சமூகம் ஆகியவற்றில் வாழும் திறமையையும்,
தகுதியையும் வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, குழந்தை வளர்ப்பு என்பது ஒரு திட்டமிட்ட
மற்றும் நீண்டகால பணியாகிறது. இக்கட்டுரையில், குழந்தை வளர்ப்பு தொடர்பான
சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
பிறரிடம் பகிர்ந்து கொள்ளுதல்
தான் வைத்திருக்கும் விளையாட்டு சாமான்கள்
உள்ளிட்டவற்றை, இதர குழந்தைகளிடமும், விளையாடும்போது பகிர்ந்து கொள்ளும்
மனப்பான்மையை, அதிக பொறுமையுடன் குழந்தைகளிடத்தில் கற்றுக்கொடுக்க
வேண்டும். மேலும், கூட்டாக சேர்ந்து விளையாடுகையில், தனது முறை வரும்வரை
பொறுமையாக காத்திருந்து வாய்ப்பை பெற வேண்டுமெனவும், பிறர் கையிலிருக்கும்
பொருளை அவசரப்பட்டு பிடுங்கக்கூடாது என்றும் கூற வேண்டும்.
சில வகையான பொம்மைகளை வைத்து, சில
விளையாட்டுக்களின் மூலம், இதை நான் செய்யலாமா? என்பன போன்ற முன்அனுமதி
வார்த்தைகளையும், தயவுசெய்து போன்ற கோரிக்கை வார்த்தைகளையும், நன்றி என்ற
முக்கிய பண்பையும், நல்வரவு போன்ற வரவேற்பு வார்த்தையையும் கற்றுக்
கொடுக்கலாம்.
சுகாதாரப் பண்பு
உண்பதற்கு முன்னால் கை கழுவுதல், மூக்கில்
விரல்விட்டு சுத்தம் செய்யாதிருத்தல், இருமும்போதும், தும்மும்போதும்
மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றை மூடிக் கொள்ளுதல், கழிவறை சென்றுவந்த பிறகு,
கைகளை சோப்பு போட்டுக் கழுவுதல், கண்ட இடங்களில் உட்காருதலை தவிர்த்தல்
போன்ற விஷயங்களை கற்றுக் கொடுப்பது அவசியம்.
மேசை நாகரீகம்
டைனிங் டேபிளை எப்படி பராமரிக்க வேண்டும்
என்பதை சொல்லித்தர வேண்டும். அங்கே, சிறு கரண்டிகளை(spoon) முறையான
இடங்களில் சரியாக வைத்தல் மற்றும் தேவையற்ற பொருட்களை டைனிங் டேபிளின் மீது
வைக்காதிருத்தல் உள்ளிட்ட விஷயங்களை கற்பிக்க வேண்டும்.
மேலும், சாப்பிடும்போது, உணவை வாயில்
வைத்துக்கொண்டே பேசுதல் கூடாது என்பதை அறிவுறுத்த வேண்டும் மற்றும் வாயை
துடைக்கும்போது வெறும் கையை பயன்படுத்தாமல், அதற்கென நாப்கின் அல்லது
கர்சீப் வைத்துக்கொள்ள வேண்டுமெனவும் வழிகாட்ட வேண்டும்.
இடையூறு செய்யாமை
உங்கள் குழந்தை சற்று விபரம் தெரிந்ததாக
இருப்பின், பிறர் பேசும்போது இடையில் குறுக்கிடக்கூடாது என்பதையும்,
எதையாவது கூற விரும்பினால், எக்ஸ்கியூஸ்மீ என்று சொல்லி அனுமதி கேட்பதையும்
சொல்லித்தர வேண்டும்.
வீட்டை சுத்தமாக வைத்திருத்தல்
வீட்டில் சிதறிக் கிடக்கும் குப்பைகளை
எடுத்தல், கலைந்து கிடக்கும் துணிகளை சரிசெய்தல், சிதறிக் கிடக்கும்
புத்தகங்களை அடுக்கி வைத்தல் மற்றும் விளையாட்டு பொம்மைகளை சரியான
இடங்களில் வைத்தல் உள்ளிட்ட விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும்.
அப்போதுதான் உறவினர் அல்லது நண்பர்கள்
வீட்டிற்கு செல்லும்போதும், உங்களின் குழந்தைகள் அத்தகைய சிறந்த பழக்கங்களை
கடைபிடிப்பார்கள். மேலும், நண்பர்களின் இல்லங்கள் அல்லது விருந்து
நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்புகையில், நன்றி,
போய் வருகிறேன் என்பதை சொல்லுமாறு கற்பிக்க வேண்டும்.
பிறரின் தனிமையை மதித்தல்
ஒருவரின் தனிமை மற்றும் அவரின் உடமைகளுக்கு
மதிப்பளிக்கும்படி பிள்ளைகளுக்கு கற்றுத் தருதல் முக்கியம். பிறரின் பொருள்
எங்கேனும் இருந்தால், அதை சரியான எடுத்து வைப்பது, ஒருவர் ஒரு அறைக்குள்
இருந்தால், கதவை தட்டிவிட்டு உள்ளே செல்வது, பிறரின் ஏதேனும் ஒரு பொருள்
தேவைப்பட்டால், அதை எடுப்பதற்கு முன், அனுமதி கேட்பது உள்ளிட்ட பண்புகளை
சொல்லித் தருவது மிகவும் முக்கியம்.
மேற்கண்ட பண்புகள் உங்கள் குழந்தையின்
எண்ணத்தில் சிறுவயதிலேயே ஆழமாக பதியும்போது, எதிர்காலத்தில், சமூகத்தில்
சகலரும் மெச்சும்படியான ஒரு நல்ல மனிதனாக உங்களின் குழந்தை திகழ்வதை
நீங்கள் உறுதி செய்யலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...