மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க ஒளிப்படங்கள் மூலம் பாடம்
கற்பிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
டி.விஸ்வநாதன் கூறினார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி
ஆண்டு விழா புதன்கிழமை (மார்ச் 12) நடைபெற்றது. விழாவில், அண்ணா
பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டி.விஸ்வநாதன் பேசியதாவது:
திரைப்படம் மற்றும் சமூக வலைதளங்களில் மாணவர்கள் தங்களின் நேரத்தை
அதிகமாக வீணாக்கி வருகிறார்கள். அதனைத் தவிர்த்து மாணவர்கள் சமூகம்
சார்ந்தும், சுற்றுச்சூழல் குறித்தும் பயனுள்ள வகையில் சிந்திக்க வேண்டும்.
பள்ளிகளில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கூட
கல்லூரி தேர்வுகளில் தோல்வியடைகின்றனர். அதற்குக் காரணம் பள்ளிகளில்
மனப்பாடம் செய்து பழகியதுதான். இதனால் கல்லூரி பாடத்திட்டத்தில் தோல்வியடைய
நேரிடுகிறது.
இதற்கு மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஒளிப்படங்கள்,
அனிமேஷன் உள்ளிட்ட புதிய முறைகளில் கற்பித்தால் தேர்ச்சி சதவிகிதம்
அதிகரிக்கும். அதேபோல், மாணவர்கள் கல்வி கற்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல்
தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வது, விளையாட்டுகளில் ஈடுபடுவது எனப்
பல்வேறு செயல்களில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான், போட்டி நிறைந்த
உலகில் வேலை வாய்ப்புகளை எளிதில் பெற முடியும் என்றார் விஸ்வநாதன்.
good information sir, thank u sir......
ReplyDelete