திருப்பூர் மாவட்டத்தில் வேலை நிறுத்தம் செய்த 2,119 ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் தொடக்கக்கல்வி அதிகாரி தகவல்
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 2,119
தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டதாக
மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி (பொறுப்பு) யதுநாதன் கூறினார்.
வேலை நிறுத்த போராட்டம்
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின்
கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டமும்,
ஆர்ப்பாட்டமும் தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. திருப்பூர்
மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள்
நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு
ஒன்றியத்தை சேர்ந்த ஆசிரியர்கள் திருப்பூர் டவுன்ஹால் அருகே உள்ள வடக்கு
உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு செல்வகுமார் தலைமை
தாங்கினார். ஜோசப் முன்னிலை வகித்தார். ராஜ்குமார் வரவேற்றார். ஜெயலட்சுமி,
ராமசாமி, செந்தில்வடிவு, மணிகண்ட பிரபு, ராஜசேகரன், பாலசுப்பிரமணியம்,
கனகராஜா, கண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார் கள்.
ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் மோகன் நன்றி கூறினார்.
இது குறித்து தொடக்கக் கல்வி ஆசிரியர்
இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் திருப்பூர் மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் இளங்கோ கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் நேற்று
நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.
மாநில தலைமை குழு எடுக்கும் முடிவுக்கு ஏற்றபடி அடுத்தகட்ட போராட்டம்
நடைபெறும் என்றார்.
ஒருநாள் சம்பளம் பிடித்தம்
தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் வேலை நிறுத்த
போராட்டம் குறித்து மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி (பொறுப்பு) யதுநாதனிடம்
கேட்டபோது அவர் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு
ஒன்றியத்தில் 90 பேரும், வடக்கு ஒன்றியத்தில் 237 பேரும், அவினாசி
ஒன்றியத்தில் 299 பேரும், பல்லடம் ஒன்றியத்தில் 238 பேரும், பொங்கலூர்
ஒன்றியத்தில் 174 பேரும், உடுமலை ஒன்றியத்தில் 236 பேரும், குடிமங்கலம்
ஒன்றியத்தில் 62 பேரும், மடத்துக்குளம் ஒன்றியத்தில் 103 பேரும், தாராபுரம்
ஒன்றியத்தில் 100 பேரும், குண்டடம் ஒன்றியத்தில் 87 பேரும், மூலனூர்
ஒன்றியத்தில் 103 பேரும், வெள்ளகோவில் ஒன்றியத்தில் 183 பேரும், காங்கயம்
ஒன்றியத்தில் 125 பேரும், ஊத்துக்குளி ஒன்றியத்தில் 82 பேரும் என மொத்தம் 2
ஆயிரத்து 119 ஆசிரியர்கள் இன்று (நேற்று) வேலைக்கு வரவில்லை.
இவர்கள் அனைவருக்கும் ஒரு நாள் சம்பளம்
பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கான அறிக்கை பள்ளி கல்வித்துறை
இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆசிரியர்கள் மீது
மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை.இவ்வாறு தொடக்கக்கல்வி அதிகாரி (பொறுப்பு) யதுநாதன் தெரிவித்தார்.
பல்லடம்
இதுபோல் பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைகுழு
(டிட்டோ ஜாக்) ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி தலைமை
தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோ, தமிழக ஆசிரியர் கூட்டணி
மாவட்ட செயலாளர் அய்யாவு, பொங்கலூர் ராமசாமி, ஆரம்பப்பள்ளி கூட்டணி
பொங்கலூர் விஸ்வநாதன், தமிழக ஆசிரியர் கூட்டணி பல்லடம் வட்டார செயலாளர்
செல்வம் உள்பட பலர் பேசினார்கள். இதில் கலந்து கொண்ட ஆசிரியர்கள்
கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...