பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.,)
விதிமுறைகளை பின்பற்றி, துணைவேந்தர்களை நியமிக்கக் கோரிய மனுவை, சென்னை
உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பல்கலைக்கழகங்கள், ஊழியர் சங்கங்களின்,
தமிழக கூட்டமைப்பின் அமைப்பாளர், கிருஷ்ணசாமி, தாக்கல் செய்த மனு:
பல்கலைக்கழகங்கள்,
கல்லூரிகளில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனங்களுக்கு, குறைந்தபட்ச
கல்வி தகுதியை நிர்ணயித்து, பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளை
வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். சேலம்
பெரியார் பல்கலைக் கழகம், திருச்சி, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,
காரைக்குடி, அழகப்பா பல்கலைக் கழகத்துக்கு, துணைவேந்தர்கள் நியமனத்தில்,
யு.ஜி.சி., விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கல்வித் துறையில் நிபுணர்களுடன்
ஆலோசித்து, தேர்வு முறையில் வெளிப்படை தன்மையை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை, தலைமை நீதிபதி (பொறுப்பு)
அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, "முதல் பெஞ்ச்"
விசாரித்தது. அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, சிறப்பு அரசு
பிளீடர், டி.கிருஷ்ணகுமார் ஆஜராகினர். "முதல் பெஞ்ச்" பிறப்பித்த உத்தரவு:
சட்டம், விதிமுறைகளுக்கு எதிராக, அதிகாரிகள் செயல்படுவர் என அனுமானிக்க
முடியாது. துணைவேந்தர்கள், இன்னும் நியமிக்கப்பட வேண்டியதுள்ளது. தமிழக
அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், "பல்கலைக்கழக சட்டம் மற்றும்,
யு.ஜி.சி., விதிமுறைகளின்படி, மூன்று பல்கலைக் கழகங்களுக்கும், தேர்வுக்
குழு அமைக்கப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது. எனவே தேர்வுக் குழு ஏற்கனவே
அமைக்கப்பட்டு, துணைவேந்தர் நியமனங்களுக்கான நடவடிக்கைகள் நடந்து வருவது
தெரிகிறது. இந்தக் கட்டத்தில், யு.ஜி.சி.,யின் விதிமுறைகளை ஆராய
விரும்பவில்லை. இவ்வழக்கின் தகுதிக்குள் செல்லாமல், மனுவை பைசல்
செய்கிறோம். துணைவேந்தர் நியமன நடவடிக்கைகள் முடிந்த பின் அந்த நியமனங்களை
எதிர்த்து, வழக்கு தொடர்வது மனுதாரரைப் பொறுத்தது. உயர் அதிகாரிகள்
சட்டப்படி செயல்பட வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு,
"முதல் பெஞ்ச்" உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...