அரசு விடுமுறை நாளில் தேர்தல் பயிற்சி
நடத்தப்படுவதற்கு ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர். மக்களவைத்
தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள்,
வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு
துறைகளைச் சேர்ந்த 7,215 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவு
பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதையொட்டி, வாக்குப்பதிவு பணிகள்
தொடர்பாக அவர்களுக்கு 4 கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் மார்ச் 31-ஆம்
தேதி நடைபெற உள்ளது. இதற்காக நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு,
ராசிபுரம், சேந்தமங்கலம், மாணிக்கம்பாளையம், குமாரபாளையம் என மாவட்டம்
முழுவதும் 7 இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மார்ச் 31-ஆம் தேதி அரசு
விடுமுறை நாள் (தெலுங்கு புத்தாண்டு) என்பதால், அன்றைய தினம் தேர்தல்
பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு ஆசிரியர் தரப்பில் கடும் அதிருப்தி
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாவட்டத் தலைவர் செ.மலர்கண்ணன் கூறியது:
ஒவ்வொரு ஆண்டும் பணியாளர்களுக்கு கட்டாயமாக
விடுமுறை அளிக்க வேண்டிய நாள்கள் குறித்து அரசே வகுத்தளித்துள்ளது. இதில்,
தெலுங்கு புத்தாண்டும் ஒன்றாகும். இதைக் கருத்தில் கொண்டே தேர்தல் ஆணையமே
வேட்புமனு தாக்கலை திங்கள்கிழமை நடத்தாமல் விடுமுறை அளித்துள்ளது.
ஆனால், அரசு விடுமுறை நாளை மாவட்ட தேர்தல்
பிரிவு அதிகாரிகளே கண்டுகொள்ளாமல் அரசு ஊழியர்களை தேர்தல் பணிகளில்
ஈடுபடுத்துவது வருத்தத்துக்குரியது. எனவே, அரசு விடுமுறை நாளில் தேர்தல்
பயிற்சி வகுப்பு நடத்துவதைக் கைவிட்டு வேறொரு நாளில் நடத்த ஆசிரியர்கள்
எதிர்நோக்கி உள்ளனர் என்றார் அவர்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.தட்சிணாமூர்த்தி கூறியது:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 9-ஆம்
தேதி வரை நடைபெற உள்ளது. இதனால், மற்ற நாள்களில் தேர்தல் பயிற்சி வகுப்பு
நடத்தினால் தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களால் பயிற்சிக்கு வர
முடியாது. தவிர, அந்த ஆசிரியர்களுக்கு தனியாக பயிற்சி அளிப்பதும் இயலாது.
மேலும், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் பயிற்சி என்பதால் காலம்
தாழ்த்தாமல் நடத்த வேண்டியதும் அவசியமாகும். இவற்றைக் கருத்தில் கொண்டுதான்
மார்ச் 31-ஆம் தேதி பயிற்சி வகுப்பை நடத்த திட்டமிடப்பட்டது.
ஆசிரியர்களும் தாங்கள் ஈடுபடும் பணியின் முக்கியத்துவம் கருதி தேர்தல்
பயிற்சி வகுப்பில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...