தமிழக பள்ளிகளில் தமிழ் ஒதுக்கப்பட்டு
வருவதாகவும், கம்பன் இலக்கிய படைப்புகளை இளைஞர்களிடம் கொண்டு சென்றால்
செம்மையடைவார்கள் என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் பேசினார்.
சேலம் கம்பன் கழகம் சார்பில் 40-ம் ஆண்டு
கம்பன் விழா சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் தொடங்கியது. கம்பன் கழக
தலைவர் சாரதி தலைமை தாங்கினார். செயலாளர்கள் சுசீந்திரகுமார், ராமன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் கம்பன் விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜோதிட சாஸ்திரம்
கம்பன் இலக்கிய படைப்பு உலகில் மிகப்பெரியது.
அவரது கவித்தன்மையின் உச்சத்தை பலர் பாராட்டி இருக்கிறார்கள். 15, 16-ம்
நூற்றாண்டுகளில் பல்வேறு அறிஞர்கள், கலை மற்றும் இலக்கியம் பற்றி கூறி
இருக்கிறார்கள். ஆனால், இலக்கிய படைப்புகள் இயங்கும் தத்துவ போக்கை தந்த
மண் தமிழ்மண்தான். அவற்றில் மனிதன் வாழ்வு சார்ந்த இலக்கியம் கம்பன் தந்த
படைப்புகள்தான். ஆங்கில மேதை எட்வர்ட் கூறுகையில்,‘கம்பன் இலக்கிய
படைப்புகள் உலகம் முழுவதும் கொண்டு சென்று போற்றப்படக்கூடியது’ என்றார்.
ஆங்கிலம் பேசும் அத்தனை மக்களும் கம்பனைத்தான் தலைவனாக
கொண்டிருக்கிறார்கள்.
இன்று உலகம் இயங்கும் ஜோதிட சாஸ்திரத்தை
முதலில் தந்தவன் தமிழன்தான். இந்த சாஸ்திரத்தை கரைத்து குடித்தவன் கம்பன்.
ராம பாதை உள்பட அவர் தொடாத திதிகளே இல்லை.
3 பள்ளிகள் தத்தெடுப்பு
தமிழகத்தில் பள்ளிகளில் தமிழ் ஒதுக்கப்பட்டு
வருகிறது. நான் நீதிபதியாக இருந்தாலும் என் சொந்த செலவில் காஞ்சிபுரம்
மாவட்டத்தில் 3 பள்ளிகளை தத்தெடுத்து தினமும் 50 மாணவர்களுக்கு
திறக்குறளும், கம்பன் இலக்கியமும் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதற்காக
சிறப்பு ஆசிரியர்கள் நியமித்திருக்கிறேன். இது என்னால் ஆன சிறுமுயற்சி.
கம்பன் படைப்புகளை பள்ளிகளில் கொண்டு செல்ல
வேண்டும். இளைஞர்கள் மத்தியில் கம்பன் இலக்கியத்தை கொண்டு செல்வதன்மூலம்
இழந்த தமிழை மீட்க முடியும். பள்ளியில் கற்கும் அவர்கள் இன்னும் 15
ஆண்டுகள் கழித்து செம்மையடைவார்கள்.
இவ்வாறு நீதிபதி மகாதேவன் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...