Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாயமான மலேசிய விமானத்தின் அரிய சில தகவல்கள்

 
         மாயமான மலேசிய விமானத்தின் பைலட்டின் பெயர்  ஜஹாரி அஹமத் ஷாஹ்   33வருடங்களாக   பைலட்டாக   இருக்கும் இவருக்கு 53 வயது ஆகிறது.   மொத்தம்  18,365   மணி நேரங்கள் விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவர். விமானம் ஓட்டுவதை தொழிலாகப்   பார்க்காமல்   விருப்பத்தின் பெயரால் செய்தவராம்.
 
         தற்போது      தான்  இயக்கிய   போயிங் 777   விமானத்தின் மீது பெரும் ஆர்வம் கொண்ட இவர், வீட்டில் அதே விமானத்தின் சிமுலேட்டரை அமைத்து, அதில் பயிற்சி பெற்று வந்தார் என்கின்றனர் அவருடன் வேலை பார்த்தவர்கள்.

சிமுலேட்டர் பயிற்சி பெறும் மற்ற விமானிகளுக்கு பரிட்சை வைக்க, மலேசிய சிவில் அவியேஷன் துறையினால் ஜஹாரி அஹமத் ஷாஹ் அங்கீகரிக்கப்பட்டவர்  என மலேசியன் ஏர்லைன்ஸில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

33 வருடங்களாக மலேசியன் ஏர்லைன்ஸில் பணியாற்றும் இவர் ஃபோக்கர் F50, ஏர்பஸ் A300 மற்றும் போயிங் 737 போன்ற பலதரப்பட்ட விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். மலேசிய விமானம் மாயமானதற்கு விமானிகளின் தவறு காரணமாக இருக்கவே   வாய்ப்பில்லை என்று விமானிகளிடம் தொடர்பில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.

தீவிரவாதிகள் இந்த விமானத்தைக் கடத்தியிருக்கவோ அல்லது மூழ்கடித்திருக்கவோ கூடும் என்ற கோணத்திலும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விமானத்தில் பயணம் செய்த இரண்டு பேர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்தது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். இதில் ஒரு பாஸ்போர்ட் இத்தாலியையும், இன்னொரு பாஸ்போர்ட் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர்களுடையது ஆகும்.

இந்த பாஸ்போர்ட்டுகளில் பயணித்தவர்களுடைய விமான டிக்கெட், வியாழக்கிழமை தாய்லாந்தில் வாங்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு டிக்கெட் பீஜிங் வழியாக ஜெர்மனியில் உள்ள ஃப்ராங்ஃபர்ட்-க்கும், இன்னொரு டிக்கெட் டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகனுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பாஸ்போர்ட்டுகளுடைய உண்மையான உரிமையாளர்கள் விமானத்தில் பயணிக்கவில்லை.

இத்தாலியைச் சேர்ந்தவருடைய பாஸ்போர்ட் 2012ஆம் ஆண்டிலும், ஆஸ்திரியாவைச் சேர்ந்தவருடைய பாஸ்போர்ட் 2013ஆம் ஆண்டிலும் தாய்லாந்தில் திருடப்பட்டுள்ளது. இந்த இருபாஸ்போர்ட்டுகளுமே இன்டர்போலின் டேட்டாபேஸில் இருக்கிறது. எப்படி போலி பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஒரு பன்னாட்டு விமானத்தில் ஏறமுடிந்தது என இன்டர்போல் கேள்வி எழுப்பியுள்ளது.

திருடப்பட்டுள்ள பாஸ்போர்ட்டில் பயணித்த ஒருவர் ஈரானைச் சேர்ந்த Pouria Nour Mohammad Mehrdad என்ற 19 வயது வாலிபர். இவருடைய தாயார் ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் மகனுக்காக காத்திருந்திருக்கிறார். அவரிடம் விசாரித்ததை வைத்து இந்த ஈரானியர் எந்த தீவிரவாதக் குழுவையும் சேர்ந்தவர் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், புகலிடம் தேடித்தான் அவர் ஃப்ராங்க்ஃபர்ட்டுக்கு போலி பாஸ்போர்ட் மூலம் பயணித்தார் என்று சொல்லப்படுகிறது.

இன்னொரு போலி பாஸ்போர்ட்டின் உண்மையான உரிமையாளர் Christian Kozel என்ற அவுஸ்திரேலியர் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார். எனவே போலி பாஸ்போர்ட்டில் பயணித்த இருவரும் புகலிடம் தேடியே ஐரோப்பாவுக்கு பயணித்தது உறுதியாகியுள்ளது. மேலும், தீவிரவாதச் செயலுக்கான எந்தவிதமான தடயங்களும், ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை !

காணாமல்   போன MH370 போயிங் 777-200 விமானத்தில் கடைசியாக ஃபிப்ரவரி   23ஆம் தேதி வழக்கமான பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது விமானத்தில் எந்தவித   கோளாறும்   காணப்படவில்லை   என்று மலேசியன் ஏர்லைன்ஸ் க்ரூப்பின் சி.இ.ஓ   அஹமத்   ஜௌஹரி   யாயா தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு மலேசியன்   ஏர்லைன்ஸ்   இந்த விமானத்தை வாங்கியுள்ளதாகவும், இதுவரை 53,465.  மணி நேரங்கள் பறந்திருக்கிறதாகவும் அவர் கூறியுள்ளார்.

போயிங் 777-200 விமானம் சர்வதேச அளவில் மிகவும் பாதுகாப்பான விமானம் என தகவல்கள் கூறுகின்றன. கடைசியாக 2013ஆம் வருடம் சான் ஃப்ரான்சிஸ்கோவில் ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஓடுதளத்தின் அருகே விபத்துக்குள்ளாகி 3 பேர் இறந்தது   மட்டுமே   இதுவரை   போயிங் 777 ரக விமானத்தில் ஏற்பட்ட பெரிய விபத்து ஆகும் !

இந்நிலையில், மலேசியாவைச் சேர்ந்த இருவர் வழக்கத்தைவிட வேறு ஒரு வழியில், வானத்தில் தாழ்வாகப் பறந்த விமானம் ஒன்றைப் பார்த்ததாகக் கூறியுள்ளனர்.

மலேசியாவின் கெடெரே (Ketereh) பகுதில் வசிக்கும் அலிஃப் ஃபாதி அப்துல் ஹதி என்ற ஒருவர் நள்ளிரவு 1.45 மணி அளவில்  தன் வீட்டில் இருந்து விமானங்கள் மேலே எழும்பும்போதும், தரையிறங்கும்போதும் ஒளிரவிட்டு இருக்கும் பளீரென்ற வெளிச்சம் ஒன்றைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார்.

அந்த வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக உயரம் குறைந்து வந்ததாகவும், வழக்கத்தைவிட மாறுவழியில் ‘பச்சோக்’ என்ற கடலை ஒட்டிய பகுதியை நோக்கி அந்த வெளிச்சம் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது எதுவும் தோன்றவில்லை எனவும், மாயமான விமானத்தைப் பற்றி கேள்விப்பட்டவுடன், போலீசிடம் இதைப் பற்றிக் கூற முடிவெடுத்ததாகவும் கூறியிருக்கிறார்.

இவர் இருக்கும் பகுதியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கும் குயாலா பேசுட் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆசித் இப்ராகிம் என்ற 55 வயது மீனவர் ஒருவரும் இரவு 1.30 மணி அளவில் ஒரு தாழ்வாகப் பறந்த விமானத்தைப் பார்த்தாராம்.  வழக்கமாக விமான விளக்குகளின் வெளிச்சம் தொலைவில் உள்ள நட்சத்திரத்தைப் போலத்தான் இருக்கும். ஆனால், தான் பார்த்த வெளிச்சம் பளீரென்று இருந்ததாகவும், மேகங்களுக்குக் கீழ் தாழ்வாகப் பறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை விடை கிடைக்காத கேள்விகளாக பல உள்ளன.

1. விமானத்தில் பயணித்த சில பயணிகளின் செல்ஃபோன் ஒலித்தது குழப்பத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.   அதுமட்டுமில்லாமல் ஒரு பயணியின் QQ அக்கவுன்ட் (சீன சோஷியல் நெட்வொர்க்கிங் வலைதளம் ) திங்கள்கிழமை மதியம் வரை ‘ஆக்டிவ்’-ல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.   விமானத்தில்   இருந்த 19   சீனப் பயணிகளின் குடும்பங்கள் தாங்கள் விமானத்தில் பயணித்தவர்களுக்கு தொலைபேசியில் அழைத்ததாகவும், ரிங்-டோன் வந்தாலும், அழைப்பை யாரும் ஏற்கவில்லை எனவும் எழுதிக்கொடுத்திருக்கின்றனர்.

ஆனால், பீஜிங்கில் இருக்கும் மலேசியன் ஏர்லைன்ஸின் பிரதிநிதி இக்னேஷியஸ் ஆங், தான் ஒரு பயணியின் தொலைபேசிக்கு ஐந்து முறை அழைத்தாகவும், ரிங்-டோன் கேட்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

2. மலேசியாவின் கோட்டா பாரு பகுதியைத் தாண்டியதும் ஏன் விமானம் வழிமாறிச் சென்றது ?

3. விமானத்தில் கோளாறு என்றால் ஏன் விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கவில்லை ?

4. விமானம் பாதை மாறியதை ஏன் மலேசியன் ஏர்லைன்ஸுக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் விமானிகள்  தெரிவிக்கவில்லை ?

5. ஏன் விமானத்தில் இருந்து வரவேண்டிய அபாய சமிக்ஞை (Distress Signal) இதுவரை கிடைக்கவில்லை ?

6. கடலிலோ/தரையிலோ விழுந்திருந்தால் விமானத்தின் பிளாக்பாக்ஸ் தொடர்ந்து அனுப்பும் சமிக்ஞைகள் இதுவரை பெறப்படவில்லை.

7. எப்படி சில பயணிகளின் தொலைபேசிகள் திங்கள்கிழமை மதியம் வரை இயக்கத்தில் இருந்தது ? அதன்பின் எப்படி இயக்கம் நின்றது ?

என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

இதற்கு  முன் இதேபோன்ற ஒரு சம்பவம் உலக வரலாற்றில் நடந்துள்ளது. 2009ஆம் வருடம் ஜூன் மாதம் ஏர் ஃப்ரான்ஸ் விமானம் ஒன்று ரியோ டி ஜெனிரோவில் இருந்து பாரிஸுக்குச் சென்றது. ஏர்பஸ் A300 ரக விமானமான இது கடலின் மேல் ரேடார்களின் கண்காணிப்புப்   பகுதிக்கு அப்பால் பறக்கும்போது காணாமல்போனது.

6 மணிநேரங்களுக்குப் பிறகுதான் ஃப்ரான்ஸ் நாட்டினால் இந்த காணாமல் போன சம்பவத்தை  ஏற்றுக்கொள்ளவே முடிந்தது. ஏர்பஸ் A300 ரக விமானமும் பாதுகாப்பான விமானம்தான்.   இந்த விமானமும் அபாய சமிக்ஞை (Distress Signal) அனுப்பவில்லை. 17,000 சதுர கி.மீ. பரப்பளவில் இந்த விமானத்திற்காக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த விமானத்தின் பாகங்கள் ஐந்து நாள்கள் கழித்து  பிரேசிலுக்கும் ஆஃப்ரிக்காவுக்கும் நடுவில் இருக்கும் அட்லாண்டிக் கடலில் இருந்து எடுக்கப்பட்டது.  ஆனால், இந்த விமானத்தின் பிளாக்பாக்ஸும், காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரும் 2 வருடங்கள் கழித்து கடலுக்கு அடியில் அதிக ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்டது. மொத்தம் 3 வருடங்கள் கழித்துதான் அந்த விமானம் கடலில் விழுந்ததற்கான மர்மம் விலகியது!

மலேசியன் ஏர்லைன்ஸ்  MH370 விமானத்தின் பிளாக்பாக்ஸும், காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரும் கிடைக்கும் வரை இந்த கேள்விகளுக்கு விடை தெரிய வாய்ப்பில்லை !

நன்றி : மடவல நியூஸ்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive