Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து காத்திருப்போர் ஒரு கோடி பேர்!

            அரசாங்க உத்யோகம் என்பது இளைஞர்களின் கனவு. ஒரு காலத்தில் "பொழப்பத்தவன்தான் போலீஸ் வேலைக்கு போவான், வக்கத்தவன்தான் வாத்தியார் வேலைக்கு போவான்' என்று பழமொழி சொல்வதுண்டு.
 
          ஆனால் இன்றோ அது தலைகீழாய் மாறியுள்ளது. "படித்து முடித்துவிட்டாய், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வைத்து விட்டாயா?' என்று படிப்பறியா பெற்றோர்களும் பிள்ளைகளிடம் அக்கறையுடன் விசாரிப்பதுண்டு.ஆனால் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வைத்துவிட்டு வேலைக்காககாத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் சுமார் ஒரு கோடி பேர் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

                வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக வேலை கிடைப்பதென்பது கனவில்தான் நடக்கும் என்று முடிவுக்கு வந்துவிட்ட இளைஞர்கள் பலர், தேர்ந்தெடுத்துள்ள பாதைதான் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிடும் நேரடி வேலைவாய்ப்பு அறிவிப்புகள்.இதன் மூலமாவது அரசு வேலையை எட்டிப் பிடித்து விடலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. வெளியிடும் அறிவிப்புகளுக்கு விண்ணப்பிக்கின்றனர். ஆனால் டி.என்.பி.எஸ்.சி. வெளியிடும் குரூப் 2 பணியிடங்கள் சுமார் 3,500 என்றால், விண்ணப்பிப்பவர்களோ 6.5 லட்சம் பேர்.இந்த இமாலய எண்ணிக்கையைக் கண்டு மனம் தளராமல், ஒரு இளைஞன் தேர்வுக்கு தயாராகி, தேர்வும் எழுதி முடித்து, முடிவுக்காக காத்திருந்தால், அங்குதான் டி.என்.பி.எஸ்.சி. வைக்கிறது "செக்'.டி.என்.பி.எஸ்.சி. வெளியிடும் முடிவுகள் அனைத்தும் விண்ணப்பதாரரின் பதிவு எண்கள் மட்டுமே. இதில் யார் எவ்வளவு மதிப்பெண் பெற்றுள்ளனர், ஒருவர் ஏன் நிராகரிக்கப்பட்டுள்ளார், ஏன் தேர்வு செய்யப்பட்டார் என்பது ஆண்டவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.அண்மையில் ஏ.கோபாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் "தான் 2012ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி நடந்தகுரூப் 2 தேர்வில் கலந்து கொண்டேன்.

                எனக்கு டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள் மூலம் 300க்கு 210 மதிப்பெண் கிடைத்தது. என்னை விட குறைவான மதிப்பெண்கள் எடுத்தவருக்கு நேர்முகத் தேர்வுக்குஅழைப்பு வந்துள்ளது. எனக்கு வரவில்லை. எனவே தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்ணையும் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட உத்தரவிட வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளதாவது:"சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்' என்ற வாக்கியத்துக்கு உதாரணமாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் செயல்பட வேண்டும். ஒரு அமைப்பு நேர்மையாக செயல்படுகிறது என்றால் அவற்றின் நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.எனவே, எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண், கட்-ஆப் மதிப்பெண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இறுதியாக தேர்வு முடிந்த பின்னர் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. கூறுவதை ஏற்க முடியாது.எழுத்துத் தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு தங்களை ஏன் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கவில்லை என்ற காரணம் தெரிய வேண்டும்.

               அதேநேரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவரின் மதிப்பெண் விவரங்களை வெளியிடும்போது, ஒட்டு மொத்தமாக தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் விவரங்களை வெளியிட டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் ஏன் மறுக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.எனவே 2012ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வில் கலந்துகொண்ட அனைவரது மதிப்பெண் விவரங்களையும் டி.என்.பி.எஸ்.சி. செயலர் நான்குவாரத்துக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையங்களான யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி. ஆகியவை நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் பல்வேறு நிலைகள் கடைப்பிடிக்கப்பட்டாலும், அவற்றின் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, வெளிப்படைத் தன்மையுடனே நடத்தப்பட்டு வருகின்றன.

               எனவே தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு எழுதுபவர்களுக்கு அந்த ஆணையம் நம்பிக்கைக்குரியதாக விளங்கும் விதமாக அனைத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளின் முடிவுகள் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். அதற்குஉரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும், சம்பத்தப்பட்ட அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும் என்பதே தமிழ்நாட்டு இனைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தவறும் பட்சத்தில் இதன் மூலம் பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றம் செல்வார்கள் என்பது உறுதி.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive