இந்தியாவின் சொந்த ‘ஜி.பி.எஸ்’
திட்டம்
அதென்ன
ஜி.பி.எஸ் என்று கேட்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா 24
செயற்கைக்கோள்களை வானில் செலுத்தியது.
இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தின்
செயல்பாடு, பயன்பாடு ஆகியவையே ஜி. பி.எஸ் (Global Positioning System) என குறிப்பிடப்படுகிறது. மேற்கொண்டு ஜி.பி.எஸ் பற்றி விளக்க
முற்பட்டால் அது நீண்டு கொண்டே போகும்.
|
பூமியைச்
சுற்றிச் சுற்றி வருகிற அமெரிக்க ஜி.பி.எஸ் செயற்கைக்கோள்கள் (சிவந்த புள்ளிகள்)
|
இந்த செயற்கைக்கோள்கள் அமெரிக்காவில் மட்டுமன்றி உலகில் பல
நாடுகளில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று சொன்னால்
போதும். இவற்றின் பயன்பாடு பற்றி அறிந்து கொள்வது தான் முக்கியம்.
தமிழகத்தில் உள்ள ஒரு லாரி நிறுவனத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட
லாரிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் சென்று கொண்டிருப்பதாக வைத்துக்
கொள்வோம். எந்த ஒரு நேரத்திலும் இவை இந்தியாவில் எந்தெந்த இடத்தில் இருக்கின்றன
என்பதை லாரி நிறுவனத் தலைமையகத்தில் ஒரு திரையில் புள்ளிகள் வடிவில் காண முடியும்.
இதற்கு ஜி.பி. எஸ் செயற்கைக்கோள்கள் உதவும். சென்னை போன்ற ஒரு பெரு நகரில்
ஓடுகின்ற பஸ்கள் எந்தெந்த இடத்தில் உள்ளன என்பதையும் இதே
போலக் க்ண்டறிய முடியும்.
|
காருக்குள்
டிரைவர் சீட் எதிரே மேப் காட்டும் திரை
|
ஹைதராபாத் நகருக்கு ஒருவர் காரில்
செல்கிறார். அவரது காரில் ஜி.பி.எஸ் தொடர்பு வசதிகள் உள்ளன. ஹைதராபாத்தின் விரிவான
மேப்பைக் காட்டும் சில்லு ஒன்றை அவர் காரில் உள்ள கருவியில் செலுத்துகிறார். அவர்
ஹைதராபாத்தில் வழி தெரியாமல் அலைய வேண்டியதில்லை. காரில் உள்ள திரையில்
தெரியும் மேப்பைப் பயன்படுத்தி எந்த இடத்துக்கும் செல்ல
முடியும். பாகப் பிரிவினையா? நிலங்களை சரியாகப் பங்கிட்டளிக்க இந்த செயற்கைக்கோள்கள் உதவும்.
மலைப் பாதையில்
நடந்து செல்கின்ற ஒருவர் வழி தவறிவிட்டால் அவர் தம்மிடமுள்ள்ள ஜி.பி.எஸ் கருவி
மூலம் தாம் இருக்கின்ற இடத்தை அறிந்து கொள்ள இயலும். பள்ளிக்குச் செல்லும்
சிறுமியின் இடுப்பில் ஜி.பி.எஸ் தொடரபுக் கருவியை செருகி விட்டால் அவள் எந்த
இடத்தில் இருக்கிறாள் என்பதை வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ள இயலும். ஒரு
நாயின் கழுத்தில் ஜி.பி எஸ் கருவி இருந்தால் அந்த நாய் தொலைந்து போனாலும்
கண்டுபிடித்து விடலாம். ஜி.பி எஸ் செயற்கைக்கோள்களுக்கு இப்படி எவ்வளவோ பயன்கள்
உள்ளன்.
.
ஜி.பி.எஸ் செயற்கைக்கோள்களுக்கு வேறு
முக்கியமான பயன்பாடும் உண்டு. போர்க் காலத்தில் எதிரிகளின் நிலைகளைக் குறி
பார்த்துத் தாக்கவும் அவை உதவும். சொல்லப் போனால் அமெரிக்க ராணுவம் போர்க் காரியத்துக்காகத்
தான் ஜி.பி.எஸ் ஏற்பாட்டை உருவாக்கியது.
இராக்
மீது அமெரிக்கா நடத்திய போரின் போது அமெரிக்கப் போர்க் கப்பல்கள் இராக் அருகே உள்ள
கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தன. அப்படியான ஒரு போர்க் கப்பலிலிருந்து
செலுத்தப்பட்ட குரூயிஸ் ஏவுகணை ஒன்று இராக்கின் தலைநகரான பாக்தாத் நகரில் இராக்கிய
உள்துறைக் கட்டடத்தை மட்டும் குறி பார்த்துத் தாக்கி நிர்மூலம் செய்தது.
ஏவுகணைக்கு எது எந்தக் கட்டடம் என்பது எப்படித் தெரியும்? ஜி.பி.எஸ்
செயற்கைக் கோள்கள் இதற்கு உதவின. சரி, அமெரிக்க
ஜி.பி.எஸ் செயற்கைக் கோள்களுக்கு எது எந்தக் கட்டடம் என்பது எப்படித் தெரியும்.?
|
டம்மி
வெடிகுண்டு ஒன்றுக்குள் GPS வழி செலுத்தும் கருவியைப் பொருத்துகிறார்கள்.
|
தேசப் படங்களைக் காட்டும் அட்லஸ் புத்தகத்தில் எந்த ஒரு
தேசத்தின் படமாக இருந்தாலும் அதில் வடக்கு தெற்காகவும் கிழக்கு மேற்காகவும்
கோடுகள் போடப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். வடக்கு தெற்காக உள்ளவை தீர்க்க
ரேகைகள் (Longitude). கிழக்கு
மேற்காக உள்ளவை அட்ச ரேகைகள் (Latitude)
.
. இக்கோடுகள் மேப்புகளில் உள்ளனவே தவிர பூமி மீது இப்படிக் கோடுகள் கிடையாது. எனினும் பூமியில் எந்த ஓர் இடத்தையும் துல்லியமாக அறிய இக்கோடுகள் உதவியாக உள்ளன.
காந்தி நகரில் மூன்றாவது பிரதான
சாலையும் ஐந்தாவ்து குறுக்குத் தெருவும் சந்திக்கின்ற இடத்தின் முனையில் உள்ள
பெட்டிக் கடை என்று அடையாளம் கூறுகிறோம். அட்சரேகையும் தீர்க்க ரேகையும் இப்படித்
தான் இந்த இரண்டு ரேகைகளும் (கோடுகள்) சந்திக்கிற ஓர் இடத்தை அவை குறிக்கின்றன.
|
பூமியின்
மீதாக அட்ச ரேகைகள் ,மற்றும் தீர்க்க
ரேகைகள் உள்ளதாக நாம் வைத்துக் கொண்டுள்ளோம். பல முக்கிய பணிகளுக்கு இவை உதவுகின்றன
|
உதாரணமாக தமிழகத்தில் உள்ள உடுமலைப்பேட்டை
10.36 (வடக்கு) அட்சரேகையும்
77.17 (கிழக்கு) தீர்க்க ரேகையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது.
உடுமலைப்பேட்டைக்கு சற்று வடக்கே உள்ள ஒரு கிராமத்தின் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகள்
வேறு விதமாக இருக்கும். மிகத் துல்லியமாகக் கணக்கிட்டால் அக்கிராமத்தின் பஜார்
தெருவில் உள்ள பாத்திரக்கடையின் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகள் ஒரு விதமாகவும்
பாத்திரக் கடைக்கு இரண்டு கடை தள்ளி அமைந்த ஜவுளிக் கடையின் அட்ச மற்றும் தீர்க்க
ரேகைகள் வேறு விதமாகவும் இருக்கும்
.
அக்கிராமத்தின் மிகத் துல்லியமான
மேப்புகள் இருந்தால் பாத்திரக்
கடையின் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகளையும் ஜவுளிக் கடையின் அட்ச மற்றும் தீர்க்க
ரேகைகளையும் மிகச் சரியாகக் கண்டறிய முடியும்.
பூமியைச் சுற்றிச் சுற்றி வருகின்ற
விசேஷ வகை செயற்கைக்கோள்கள் மூலம் பூமியின் எந்தப் பகுதியையும் மேலிருந்தபடி படம்
பிடித்து மிகத் துல்லியமான மேப்புகளைத் தயாரித்து விட முடியும்.
பாக்தாத்
நகரின் மிகத் துல்லியமான மேப்புகள் அமெரிக்காவிடம் இருந்த காரணத்தால் தான்
அமெரிக்க குரூயிஸ் ஏவுகணையால் குறிப்பிட்ட கட்டடத்தை மட்டும் தாக்கி அழிக்க
முடிந்தது. இப்படியான ஏவுகணைகளின் கம்ப்யூட்டர்களில் மேப்புகள் தகுந்த வடிவில்
இடம் பெறும். குறிப்பிட்ட தீர்க்க ரேகையும் குறிப்பிட்ட அட்சரேகையும் சந்திக்கிற
இடத்தைத் தாக்கும் வகையில் ஏவுகணையில் ஆணை இடம் பெற்றிருக்கும். அது இடத்தைக் குறி
தவறாமல் தாக்குவதற்கு ஜி.பி.எஸ் செயற்கைக்கோள்கள் ஓயாது அனுப்பும் சிக்னல்கள்
உதவுகின்றன். இந்த செயற்கைக்கோள்களிலிருந்து வெறும் சிக்னல்களும் துல்லியமான
நேரமும் தொடர்ந்து வெளிப்பட்டிருக்கும். இவை தான் பூமியில் எந்த ஓர் இடத்தையும்
துல்லியமாகக் கண்டறிய உதவுகின்றன
|
இராக்
மீதான் போரின் போது அமெரிககப் போர்க் கப்பலிலிருந்து சீறிக் கிளம்பும் குரூயிஸ்
ஏவுகணை
|
மேலே சொல்லப்பட்ட விவரத்திலிருந்து மிகத் துல்லியமான மேப்புகள்
மிகவும் முக்கியமானவை என்பதைப் புரிந்து கொண்டிருக்கலாம். அமெரிககாவிடம் இப்படியான
மேப்புகளைத் தயாரிப்பதற்கான செயற்கைக்கோள்கள் உள்ளன என்ப்து குறிப்பிடத்தக்கது.
மேப்புகள்
துல்லிய்மாக இல்லாவிடில் பிரச்சினைதான். ஒரு சமயம் கோசாவா போரின் போது அமெரிக்கா
செலுத்திய ஏவுகணை தவறுதலாக சீனத் தூத்ரகக் க்ட்டடத்தைத் தாக்கியது. பழைய மேப்பைப்
பயன்படுத்தியதால் இப்படி தவறு ஏற்பட்டதாக சீனாவிடம் அமெரிக்க விளக்கம் அளித்ததால்
விஷயம் பெரிதாகவில்லை
.
இந்தியாவிடமும்
இத்தகைய செயற்கைக்கோள்கள் உள்ளன. இந்தியா 2005 ஆம் ஆண்டில் மேப்புகளைத்
தயாரிப்பதற்கென கார்ட்டோசாட்-1 செயற்கைக்கோளை ஏவியது. அதைத் தொடர்ந்து மேலும்
இவ்வகையான மூன்று செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன. மேலும் துல்லியமான மேப்புகளைத்
தயாரிக்க இந்த ஆண்டில் ஐந்தாவது கார்ட்டோசாட் செலுத்தப்பட இருக்கிறது. இவை
உலகில் எந்த ஓர் பகுதியையும் படம் பிடித்து மேப் தயாரிக்க வல்லவை.
|
இந்தியாவின்
கார்ட்டோசாட் செயற்கைக்கோள். இது பூமியை வடக்கு-தெற்காகச் சுற்றி வந்தபடி
படங்களை எடுப்பதாகும்
|
இது ஒரு புறம் இருக்க, அமெரிக்காவின் ஜி.பி.எஸ் செயற்கைக்கோள்களின் சிக்னல்களை உலகில் எந்த ஒரு
நாடும் பயன்படுத்தலாம். தகுந்த தொடர்புக் கருவிகளைக் கொண்டு இக்கட்டுரையின்
தொடக்கத்தில் கூறப்பட்ட பயன்பாடுகளை மேற்கொள்ளலாம்
.
ஆனால்
ஒன்று. ஜி.பி.எஸ் ஏற்பாடு முற்றிலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும்.
அமெரிக்கா நினைத்தால் உலகில் குறிப்பிடட பிராந்தியத்தில் சிக்னல்கள் கிடைக்காதபடி
செய்ய முடியும். அல்லது தவறான சிக்னல்கள் கிடைக்குமாறு செய்ய முடியும். இராக்
போரின் போது அமெரிக்கா இவ்விதம் செய்தது.
ஆகவே தான் ரஷியா பல செயற்கைக்கோள்களைச்
செலுத்தி இப்போது சொந்தமாக ஜி.பி.எஸ் மாதிரியிலான ஏற்பாட்டை செய்து கொண்டுள்ளது.
அதன் பெயர் கிளோனாஸ். சீனா, ஜப்பான், ஐரோப்பிய
யூனிய்ன் ஆகியவையும் இப்ப்டி சொந்த ‘ஜி.பி.எஸ் “ ஏற்பாடுகளைச்
செய்து கொள்வதில் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவும்
இதே போல சொந்த ஏற்பாட்டைச் செய்து கொள்வதில் ஈடுபட்டுள்ளது. அதன் முதல்படியாகத்
தான் இதற்கான முதலாவது செயற்கைக்கோள்கடந்த ஆண்டு ஜூலை முதல் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி
தளத்திலிருந்து உயரே செலுத்தப்பட்டது. ஆறு மாதங்களுக்கு ஒன்று வீதம் மொத்தம் ஏழு செயறகைக்கோள்கள் உயரே
செலுத்தப்படும். இவை அமெரிக்காவின் ஜி.பி.எஸ் செயற்கைக்கோள்கள் போலவே செயல்படும்.
ஆனால் இதில் முக்கிய வித்தியாசம்
உண்டு. அமெரிக்காவின் ஜி.பி.எஸ் ஏற்பாடு உலகம் தழுவியதாகும். ரஷியா, சீனா
ஆகியவற்றின் ஜி.பி.எஸ் மாதிரியான ஏற்பாடுகளும் இதே போல உலகம் தழுவியவை.
ஆனால்
இந்தியாவின் சொந்த “ஜி.பி.எஸ்” மாதிரியான
ஏற்பாடு பிராந்திய அளவிலானது. அதாவது இந்தியாவில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாம்.
தவிர இந்திய எல்லையிலிருந்து சுமார் 1500 கிலோ மீட்டர் தூரம் உள்ள பிராந்தியத்தில்
உள்ளவர்களும் பயன்படுத்தலாம். அதன்படி சவூதி அரேபியாவின் ஒரு பகுதி, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், மேற்காசிய
நாடுகள், நேபாளம், மத்திய ஆசிய
நாடுகள், சீனாவின் கணிசமான பகுதி, மியான்மார்
மலேசியா, பல தென் கிழக்கு ஆசிய நாடுகள்
ஆகியவற்றில் உள்ளவர்களும் பயன்படுத்தலாம்
.
அமெரிக்க
ஜி.பி.எஸ் மாதிரியில் இந்தியா மேற்கொண்டுள்ள திட்டமானது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் என்று
அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழான ஏழு செயற்கைக்கோள்களும் அமெரிக்க
ஜி.பி.எஸ் போலவே மக்கள்
பயன்பாட்டுக்கென ஒரு வித சிக்னல்களை அனுப்பும். தவிர, ராணுவ
காரியத்துக்கென வேறு வித சிக்னல்களை அனுப்பும். இந்தியா அந்த வகையில் எதிரி
நாட்டின் ராணுவ இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்குவதற்குத் திறன் பெற்றதாகி
விடும்.
கார்ட்டோசாட்
செயற்கைக்கோள்கள் மூலம் இந்தியா ஏற்கெனவே மிகத் துல்லியமான மேப்புகளைப்
பெற்றுள்ளது. அத்துடன் இந்தியாவிடம் பிரம்மோஸ், நிர்பய் போன்ற
திறன் மிக்க குரூஸ் ரக ஏவுகணைகள் உள்ளன்.. ஜி.பி.எஸ்
மாதிரியிலான செயற்கைக்கோள்கள் தான் பாக்கியாக இருந்தது. 2016 வாக்கில் இந்த ஏழு
செயற்கைக்கோள்களும் செயல்படத் தொடங்கியதும் இந்தியா வல்லரசு நாடுகளுக்கு இணையான
திறனைப் பெற்றதாகி விடும்.
மக்களுக்கான பயனபாட்டைப் பொருத்தவரையில்
இந்தியா மேற்படி ஏழு செயற்கைக்கோள்களுடன் தொடர்பு கொள்ளும் வசதி படைத்த தகுந்த
கருவிகளை விரைவில் உருவாக்கும்.. அப்போது பொது மக்கள், லாரி
உரிமையாளர்கள், பஸ் நிறுவனங்கள்,
பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆகியோர் பலன் பெறுவர்
.
எதிரி நாட்டுடன் ஒரு போர் மூண்டால்
இந்தியாவின் இந்த் ஏழு செயற்கைக்கோள்களும் எதிரியின் முதுகெலும்பை முறிப்பதில்
முக்கிய பங்காற்றும். அதே நேரத்தில் இவை மக்களின் பல்வேறு உபயோகங்களுக்கென புரட்சிகரமான புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துபவையாகவும் இருக்கும். அந்த வகையில் இந்தியாவின் இத்திட்டம் மிகவும் வரவேற்கத்தக்க
ஒன்றாகும்.
Thanks for information.
ReplyDelete